சற்று முன்
‘தாய் கிழவி’ விமர்சனம்
Directed by : Sivakumar Murugesan
Casting : Radikaa Sarathkumar, Singampuli, Aruldoss, Munishkanth, Bala Saravanan, Ilavarasu, Muthukumar, George Maryan, Raichal Rabecca
Music :Nivas K. Prasanna
Produced by : Passion Studios & Sivakarthikeyan Productions - Sudhan Sundaram & Sivakarthikeyan
PRO : DOne
Review :
"தாய் கிழவி" சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் பேஷன் ஸ்டுடியோஸ் & சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் - சுதன் சுந்தரம் & சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை நிவாஸ் கே பிரசன்னா. இந்த படத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மேரியன், முத்துக்குமார், ரைச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மூன்று மகன்கள் இருந்தும் மகள் மற்றும் பேரனுடன் தனியாக வாழும் ராதிகா சரத்குமார், கிராமத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிப்பதில் கறாராக நடந்து கொள்கிறார். அவரை பார்த்தாலே ஊர்மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்நிலையில், திடீரென உடல்நலக்குறைவால் ராதிகா சுயநினைவை இழக்கிறார். அவர் இறந்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் ஊரும், சொத்துக்காக காத்திருக்கும் மூன்று மகன்களும், ஒரு மருமகனும் கணக்குப் போட ஆரம்பிக்கிறார்கள். அதே நேரத்தில், ராதிகா ஒரே நாளில் 160 சவரன் தங்க நகைகள் வாங்கியிருப்பது வெளிச்சத்துக்கு வருகிறது. நில புலன் சொத்துக்கள் மகன்களுக்கும் நகைகள் பெண்பிள்ளைகளுக்கு என்ற ஊர் வழக்கம் இருப்பதால் தாயின் இறப்பை தள்ளிப்போட்டு, அதற்குள் நகைகளை கைப்பற்றி பிரித்து கொள்ளும் திட்டம் தீட்டும் மகன்களின் பேராசை வெற்றி பெற்றதா? ராதிகா பிழைத்தாரா? என்பதே "தாய் கிழவி" படத்தின் கதை
தாய்கிழவியாக நடித்துள்ள ராதிகா சரத்குமார் நடிப்பில் மெருகேற்றி நிற்கிறார். கம்பீரம், கண்ணோட்டம், உடல் மொழி எல்லாவற்றிலும் அனுபவம் பேசுகிறது. சில காட்சிகளில் அவர் நடிப்பே படத்தை தூக்கி சாப்பிடுகிறது என்று சொல்லலாம்.
மகன்களாக வரும் அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி, மூவரின் கதாபாத்திர அமைப்பும், அவர்களுக்கிடையேயான போட்டி மனப்பான்மையும், பேராசை கலந்த நகைச்சுவை வசனங்களும் தான் படத்தின் பலம். குறிப்பாக இவர்களின் டைமிங் காமெடி பல இடங்களில் திரையரங்கையே சிரிப்பால் குலுங்க வைக்கிறது.
மகளாக நடித்திருக்கும் ரேச்சல் ரெபேக்கா, மருமகனாக நடித்திருக்கும் முத்துக்குமார், உறவினராக நடித்திருக்கும் முனீஷ்காந்த், நகைக்கடை முதலாளியாக நடித்திருக்கும் இளவரசு ஆகியோர் தங்களுக்கான வேடங்களில் இயல்பாகவும், வழக்கமான நடிப்பு நயத்துடனும் வெளிப்பட்டு, திரைக்கதையின் ஓட்டத்தை சீராக முன்னெடுக்க உதவியுள்ளனர்.
ஒளிப்பதிவு விவேக் விஜயகுமார், கிராமத்து சூழலை இயல்பாகப் பதிவு செய்து படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளார்.
நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசை நகைச்சுவை காட்சிகளில் உதவியாக இருந்தாலும், சில உணர்ச்சி காட்சிகளில் சற்றே ஓவராக உணரப்படுகிறது. இரண்டாம் பாதியில் எடிட்டிங் இன்னும் இறுக்கமாக இருந்திருக்கலாம்.
படத்தில் இடையிடையே வரும் கமல்ஹாசன் படப் பாடல்கள், கமல் ரசிகர்களுக்கு கூடுதல் கொண்டாட்ட உணர்வை தரும். அந்த ரெஃபரன்ஸ்கள் கதையின் சூழலோடு நன்றாக கலக்கப்பட்டுள்ளன.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன், கிராமிய கதையை மிக இயல்பாக கையாள்வதில் கெட்டிக்காரர் என்பதை நிரூபித்துள்ளார். கதாபாத்திரங்களின் நுணுக்கங்களைப் பிடித்துக் கொண்டு, நகைச்சுவை மூலம் கருத்தை சொல்லும் திறன் கவனிக்கத்தக்கது.
‘தாய் கிழவி’ திரைப்படம் பெண்மையை மையப்படுத்திய கதையுடன் உருவாகியிருக்கிறது. வயதை கடந்த பின்னரும் ஒரு பெண் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன், தன்னிச்சையாக எப்படி நிற்கிறாள் என்பதையே படம் வலியுறுத்துகிறது. குடும்ப உறவுகளின் நுணுக்கங்கள், சமூகப் பொறுப்பு உணர்வு, பெண்களின் மனவலிமை மற்றும் உறுதி ஆகியவை கதையில் நுட்பமாக பின்னப்பட்டுள்ளன. இது ஒரு சாதாரண எமோஷனல் டிராமா மட்டும் அல்ல; பெண்கள் முன்னேற்றத்தையும், அவர்களின் தன்னிறைவு வாழ்க்கையையும் வலியுறுத்தும் வலுவான சமூகச் செய்தியை கூறும் முயற்சியாகவும் இந்த படம் பார்க்கப்படுகிறது.
மெசேஜ் புதிதல்ல. “பணம் vs உறவு” என்ற கோணம் தமிழ் சினிமாவில் பலமுறை வந்ததே. ஆனால் அதையே சலிப்பில்லாத, நகைச்சுவை கலந்த கிராமிய ட்ரீட்மென்ட்டாக மாற்றியிருப்பதே இப்படத்தின் மிகப்பெரிய பலம். படம் முழுக்க சிரிப்பை ஏற்படுத்திக் கொண்டே, கடைசியில் சின்ன சிந்தனையை விதைத்து அனுப்புகிறது.
"தாய் கிழவி" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : ஒரு சமூகச் சாடல்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















