சற்று முன்
’ஜீப்ரா’ விமர்சனம்
Directed by : Eashvar Karthic
Casting : SatyaDev, Daali Dhananjaya, Sathyaraj, Priya Bhavani Shankar, Sunil Verma, Sathya Akala, Jeniffer Piccinato
Music :Ravi Basrur
Produced by : Old Town Pictures and Padmaja Films India Private Ltd - SN Reddy - Bala Sundaram - Dinesh Sundaram
PRO : AIM
Review :
"ஜீப்ரா" ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் & பட்மஜா பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட். – எஸ்.என்.ரெட்டி, பால சுந்தரம், தினேஷ் சுந்தரம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ரவி பஸ்ரூர். இந்த படத்தில் சத்ய தேவ், டாலி தனஞ்செயா, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சுனில் வர்மா, சத்யா அக்காலா, ஜெனிபர், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வங்கி பணியாளரான நாயகன் சத்ய தேவ், மற்றொரு வங்கியில் பணியாற்றும் தனது காதலி பிரியா பவானி சங்கரை ஒரு பிரச்சனையில் இருந்து காப்பாற்றுவதற்காக மோசடி செய்து ரூ.4 லட்சத்தை வேறு ஒருவர் வங்கி கணக்கில் இருந்து எடுக்க, அதே வங்கி கணக்கில் இருக்கும் ரூ.5 கோடியை சத்ய தேவ் பெயரில் மற்றொருவர் மோசடி செய்து எடுத்து விடுகிறார். அந்த 5 கோடி ரூபாயால் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் சத்ய தேவ், அதில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட, அதில் வெற்றி பெற்றாரா? இல்லையா?, அவரது பெயரை பயன்படுத்தி அந்த பணத்தை எடுத்தது யார்? என்பதை வேகமாகவும், விவேகமாகவும் சொல்வது தான் ‘ஜீப்ரா’.
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், ஆனால் புத்திசாலித்தனமாக மோசடி செய்வான், என்று சொல்வதற்கு ஏற்ப கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கும் சத்ய தேவ், நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். காதலியை காப்பாற்ற செய்யும் மோசடியை தொடர்ந்து வரும் மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளிலும் வேகம், பயம், பதற்றம் என அனைத்து உணர்வுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என்ற ரீதியில் வில்லத்தனம் கலந்த ஹீரோவாக நடித்திருக்கும் டாலி தனஞ்செயா, பார்வையில் மிரட்டுகிறார், நடிப்பில் அசத்துகிறார்.
ஏ டூ ஒய் பாபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜின் திரை இருப்பிற்கான நேரம் குறைவு என்றாலும், அதை நிறைவாக செய்து மக்கள் மனங்களில் தங்கிவிடுகிறார்.
வில்லத்தனம் கலந்த காமெடியில் சுனில் வர்மா கலக்க, அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார் நடிகர் சத்யா அக்காலா. குறிப்பாக, சூழ்நிலைக்கு ஏற்ப அவர் பேசும் வசனங்கள் சில இரட்டை அர்த்தமாக இருந்தாலும், முகம் சுளிக்க வைக்காமல், ரசிக்க வைக்கிறது.
ஜெனிபர், சுரேஷ் மேனன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பு மூலம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மர் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, கதாபாத்திரங்களை ஸ்டைலிஷாகவும் காட்டியிருக்கிறார்.
எளிய மக்கள் புரிந்துக்கொள்ள முடியாத திரைக்கதை என்றாலும், அதை மிக நேர்த்தியாக தொகுத்து புரிய வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அனில் கிரிஷ்.
எழுதி இயக்கியிருக்கும் ஈஷ்வர் கார்த்திக், வங்கிகளில் நடக்கும் மோசடிகளை வெளிக்காட்டிய விதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. அதிலும், பயன்படுத்தாத கணக்குகளில் இருக்கும் பணத்தை வங்கி அதிகாரிகள் நினைத்தால் கைப்பற்றலாம் என்பதை விவரிக்கும் காட்சி செம.
முதல் பாதியில் நாயகன் செய்யும் மோசடி மற்றும் வங்கிகள் செயல்படும் விதம் மற்றும் அதில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகள் பற்றி புரிந்துக்கொள்வது சற்று சவாலாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் நடக்கும் வங்கி கொள்ளை மற்றும் டாலி தனஞ்செயாவின் சவால் ஆகியவை படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிக்க வைக்கிறது.
லாஜிக் மீறல்கள் எக்கச்சக்கமாக இருந்தாலும், இரண்டரை மணி நேரத்திற்கும் மேலான திரைக்கதையை திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் சுவாரஸ்யமாக நகர்த்தி சென்று பார்வையாளர்களை ரசிக்க வைத்துவிடுகிறார் இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக்.
"ஜீப்ரா" படத்திற்கு மதிப்பீடு 3/5
Verdict : பார்க்கலாம்
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA