சற்று முன்
சினிமா செய்திகள்
மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் 'அகத்தியா' பட முதல் சிங்கிள் பாடல்!
Updated on : 07 January 2025
அகத்தியா படத்தின் முதல் சிங்கிள் பாடல் “காற்றின் வைரல்” வெளியிடப்பட்டது: இப்படம் இசை மற்றும் விஷுவல் மாஸ்டர் பீஸ், ஃபேண்டஸி-ஹாரர்-திரில்லராக உங்களை மகிழ்விக்க ஜனவரி 31, 2025 அன்று பான்-இந்தியா வெளியீடாக வருகிறது.
தமிழ்த் திரையுலகில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரைப்படமான “அகத்தியா” திரைப்படத்தின், முதல் சிங்கிள் பாடல், “காற்றின் விரல்” இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை, அதிர வைக்கும் விஷுவல்களுடன், திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக உள்ளது இப்பாடல். இப்பாடல் 2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றாக "அகத்தியா" இருக்கும் என்று உறுதியளிக்கிறது.
ஃபேண்டஸி வகையில், திகில் மர்மம் நிறைந்த ஒரு புத்தம் புது உலகிற்கு அழைத்துச் செல்லும் இப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று பான் இந்திய வெளியீடாக, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
படத்திற்கு மேடை அமைத்துத் தரும் பாடல்
காற்றின் விரல் ஒரு மெல்லிசை டூயட் பாடலாகும், இது அகத்தியா படத்தின் களத்தையும் அதன் மாயாஜால உணர்வுகளையும், முழுமையாக உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இளையராஜாவின் சிக்னேச்சர் பியானோ இசைத் துண்டுடன் தொடங்கும் பாடல், ஒரு ஆத்மார்த்தமான மெல்லிசையாக மாறுகிறது, மறக்க முடியாத கேட்கும் அனுபவத்தை அளிக்கிறது. மெல்லிசையில் வல்லவரான யுவன் ஷங்கர் ராஜா, பாடல் கேட்பவர்களிடம் ஆழமாக எதிரொலிக்கும் வகையில், ஒரு இசையமைப்பை உருவாக்கியுள்ளார். புகழ்பெற்ற ஸ்ரீதர் மாஸ்டரின் நடன அமைப்பும், தீபக் குமார்பதியின் அற்புதமான ஒளிப்பதிவும், இந்தப் பாடலைத் திரையில் உயிர்ப்பிக்கிறது. இப்பாடல் ஒரு உண்மையான காட்சி விருந்தாக அமைந்துள்ளது.
படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக முழுப் பாடலையும் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவு, பாடல் உருவாக்கும் தாக்கத்தில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பறைசாற்றுகிறது. இயக்குநரும் பாடலாசிரியருமான பா.விஜய் குறிப்பிடுவது போல், “இந்தப் பாடல் வெறும் மெல்லிசை அல்ல - இது ஒரு பயணம். இளையராஜா மற்றும் பீத்தோவன் இருவரின் புத்திசாலித்தனத்தின் சாரத்தை இது கொண்டு செல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். இந்த ஐடியாவை யுவனிடம் முன்வைத்தபோது, வெறும் 10 நிமிடத்தில் அவர் அந்த மேஜிக்கை செய்தார். இது காலத்தைக் கடக்கும் ட்யூன்கள் மற்றும் நவீன உணர்வுகளின் கலவையாகும், அது தந்த மகிழ்ச்சியிலிருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை.
பாடல் குறித்த யுவனின் கருத்து.
பாடல் அனுபவம் குறித்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா, “பா.விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே சிறப்பான அனுபவமாகும். நாங்கள் 300 க்கும் மேற்பட்ட பாடல்களில் ஒன்றாக வேலை செய்துள்ளோம், நாங்கள் பகிர்ந்து கொள்ளும் உறவு தனித்துவமானது. என் தந்தையின் பியானோ இசைத்துண்டு மற்றும் பீத்தோவனின் ட்யூனை காற்றின் விரலில் இணைப்பது பற்றி அவர் என்னிடம் சொன்னபோது, நான் சிலிர்த்துப் போனேன். இந்த இரண்டு அற்புத இசையின் பாரம்பரியத்தால் வழிநடத்தப்பட்டதைப் போல, இந்த பாடல் சிரமமின்றி தானாக வந்தது. இது எனது சிறந்த மெல்லிசைப் பாடல்களில் ஒன்று என்று நான் நம்புகிறேன், மேலும் கேட்போர் இதைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருகிறது.
பாடல் குறித்து தயாரிப்பாளர் கருத்து
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் தலைவரும், தொலைநோக்கு தயாரிப்பாளருமான டாக்டர். ஐசரி கே. கணேஷ் பாடல் குறித்து, உற்சாகமாகப் பகிர்ந்து கொண்டதாவது…: “அகத்தியா மிக முக்கியமான லட்சிய திரைப்படம், மேலும் இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சமும் உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காற்றின் விரல் இந்தத் திரைப்படத்தின் மகுடம் - யுவனின் அசாதாரண இசையமைப்பு, அசத்தலான காட்சிகள் மற்றும் நடன அமைப்புடன் திரையில் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இந்தப் படத்தை உருவாக்குவதில் காட்டப்பட்ட அர்ப்பணிப்புக்கும் ஆர்வத்துக்கும் சான்றாகும்.
அகத்தியா: ஒரு கூட்டு அற்புதம்
தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் அவர்களுடன் அனீஷ் அர்ஜுன் தேவ் தலைமையிலான வாமிண்டியா (வைட் ஆங்கிள் மீடியா பிரைவேட் லிமிடெட்) இணைந்து, அகத்தியா திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. டீஸரும் இப்போது முதல் சிங்கிளும் மிகுந்த உற்சாகத்தை உருவாக்கி, 2025 ஆம் ஆண்டில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் எனும் எதிரப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 31, 2025ஐ உங்கள் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். புதிய அனுபவத்திற்குத் தயாராகுங்கள்
மர்மம், திகில் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதை ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், அகத்தியா ஒரு அற்புதமான திரை அனுபவமாக உருவாகியுள்ளது. இப்படம் ஜனவரி 31, 2025 இல் பிரம்மாண்டமாக வெளியாகிறது. டீசர், முதல் பார்வை, காற்றின் விரல் பாடல் என அனைத்தும், இப்படம் ஒரு விஷுவல் விருந்தாக இருக்குமென்பதை உறுதி செய்கிறது.
சமீபத்திய செய்திகள்
காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்
சி டிவி என்டர்டெயின்மென்ட் லிமிடெட் தயாரிப்பில், டாக்டர் முரளி மனோகர் தயாரித்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் – ரீமா சென் நடிப்பில் உருவான காதல் திரைப்படம் ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த ஆண்டுகளில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரீ-ரிலீஸ் ஆகும் போக்கில், இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார்.
2001 ஆம் ஆண்டு வெளியான ‘மின்னலே’ திரைப்படம், கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்குநர் அறிமுகப் படம் என்பதும், ‘அலைபாயுதே’ வெற்றிக்குப் பிறகு மாதவன் நடித்த திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் அப்பாஸ், ரீமா சென், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இப்படத்தின் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்களாக அமைந்தன.
25 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னலே’ மீண்டும் வெளியாக உள்ளதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு
‘கோலம்’ படக்குழு மீண்டும் இணைந்து உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான வேம்பயர் த்ரில்லர் திரைப்படம் ‘HALF’-ன் இரண்டாவது பார்வை போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் இருண்ட, தீவிரமான உலகத்தை வெளிப்படுத்துகிறது.
பிராகரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், அன்னே சஞ்சீவ், சஞ்சீவ் பிகே தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ‘கோலம்’ மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சம்ஜத் இயக்கியுள்ளார். அமலா பால், ரஞ்சித் சஜீவ், ஐஸ்வர்யா ராஜ், அப்பாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அப்பாஸ் இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார்.
‘The Chronicles of Two Half-Blooded Vampires’ என்ற டேக்லைனுடன் உருவாகும் இப்படம் அடையாளம், இரட்டைத் தன்மை, உயிர்வாழ்தல் மற்றும் பழிவாங்குதல் ஆகிய கருக்களை மையமாகக் கொண்டுள்ளது. ஹாலிவுட் ஸ்டண்ட் எக்ஸ்பர்ட் வெரி ட்ரை யூலிஸ்மேன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
தேசிய விருது பெற்ற மகேஷ் புவனேந்த் (எடிட்டிங்), மோகன்தாஸ் (ப்ரொடக்ஷன் டிசைன்), பாப்பினு (ஒளிப்பதிவு), மிதுன் முகுந்தன் (இசை), விஷ்ணு கோவிந்த் (ஆடியோ கிராஃபி) ஆகியோர் படத்தின் தொழில்நுட்ப பலமாக உள்ளனர்.
பான்-இந்திய அளவில் உருவாகியுள்ள ‘HALF’ மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. வேம்பயர் ஜானரில் மலையாள சினிமாவைத் தாண்டி இந்தியா முழுவதும் ரசிகர்களை ஈர்க்கும் முக்கியமான படமாக ‘HALF’ எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், இயக்குநர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மை லார்ட்’ (My Lord). இந்த படத்தில் நட்சத்திர நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக, அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
குரு சோமசுந்தரம் பேசியதாவது..,
இயக்குநர் ராஜு முருகன் அவர்களை நான் முதலில் குக்கூ படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காகத் தான் சந்தித்தேன். அவர் எழுத்துக்களை முன்பே படித்திருக்கிறேன்.அவர் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் கொண்ட அனுபவம், சமூகத்தின் மீது கொண்ட அக்கறை — அதெல்லாம் அவரது படைப்புகளில் தெளிவாக தெரிகிறது. ஜோக்கர் படத்தின் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு பெருமை. இந்த படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரம் செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. சசி சார் உடன் நடித்தது ரொம்ப சந்தோஷம். குறிப்பாக சைத்ரா — தமிழ் சினிமாவுக்கு தேவையான நடிகை, அவருடைய நடிப்பு மிகவும் சிறப்பு. இந்த படம் ஒரு வாழ்க்கையை முழுமையாக பார்த்து, அதன் சுக–துக்கங்களை நேர்மையாக பேசும் படம். அதுதான் நல்ல, மக்களுக்கான சினிமாவை உருவாக்குகிறது.
இப்படிப்பட்ட படங்களை தயங்காமல் தயாரிக்கும் ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் அவர்களுக்கு என் நன்றி. கமர்ஷியல் கணக்கை மட்டும் பார்க்காமல்,மக்களுக்கான சினிமாவை ஆதரிப்பது பாராட்டுக்குரியது. இசை பற்றியும் சொல்ல வேண்டும். ஷான் ரோல்ட் இசையில் வந்த என் படங்கள் எப்போதும் தனித்துவமாக இருந்துள்ளன. இந்த படத்திலும் இசை ஒரு முக்கிய பலமாக இருக்கும். இந்த படம் பிப்ரவரி 13 அன்று வெளியாகிறது. ஊடக நண்பர்கள் இதைப் பற்றி எழுதி மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி
இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது..,
சினிமாவிலிருந்து சில பேர் கண்டிப்பாக ஜெயிக்கணும் என்று நம்ம மனசார ஆசைப்படுவோம். அந்த வகையில் எனக்கு மிகவும் முக்கியமானவர் ராஜு முருகன். சும்மா ஒரு கதையை சொல்லி சம்பளம் வாங்கி போகாமல், ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் இருக்கும் மாதிரி, ஒரு கருத்தோடு படம் பண்ணிக்கிட்டே இருக்கிறவர். இப்போ இப்படிப்பட்ட எழுத்தாளர்கள் ரொம்பக் குறைவு. இங்கே இவ்வளோ பேர் கூடிவந்திருக்கிறதுக்கே காரணம் அவருடைய எழுத்து தான். இந்த படம் பார்த்த பிறகு உறுதியாக சொல்ல முடியும், ராஜுமுருகனுக்கு இது இன்னொரு பெரிய அடையாளம். படம் ரொம்ப அருமையாக வந்திருக்கிறது.
இப்படிப்பட்ட கதைகளை படம் ஆக்குறது சவாலான விஷயம். அதற்கு ஒரு துணிச்சலான தயாரிப்பாளர், அதை நம்பி நடிக்கிற நடிகர் தேவை. அந்த துணிச்சலை காட்டி இந்த படத்திற்கு ஓகே சொன்ன சசிகுமார் சாருக்கு மிகப் பெரிய நன்றி. அவர் இந்த மாதிரி மனிதநேயமான, கருத்துள்ள படங்களை தொடர்ந்து ஆதரிப்பது ரொம்ப முக்கியம். அதனால்தான் இந்த படம் இவ்வளவு நேர்மையாக வந்திருக்கிறது. மொத்தத்தில் சொல்ல வேண்டும் என்றால், இது கமர்ஷியலாகவும், கருத்து ரீதியாகவும் மக்களிடம் பேசக்கூடிய ஒரு நல்ல படம். ஜோக்கர், குக்கூ மாதிரி இந்த வருடத்தில் நினைவில் நிற்கும் படமாக இது இருக்கும்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது..,
நேற்று நான் தொடர்ந்து இரண்டு படங்கள் பார்த்தேன். அதில் ஒன்று இந்த ‘மை லார்ட்’. இந்த படம் முடிந்த பிறகு, என்னோட அசிஸ்டன்ட்ஸோட சேர்ந்து அதிக நேரம் விவாதம் பண்ண வைத்த படம் இது. இந்த படம் ஒரு விஷயத்தை தெளிவாக கேட்கிறது – எளிய மனிதன் எல்லாத்தையும் இழந்த பிறகு, அவனிடம் மீதமிருக்கும் கடைசி ஆயுதம் என்ன? அந்த கேள்வியையே இந்த படம் ரொம்ப ஆழமாக முன்வைக்கிறது.
சசிகுமார் சார் கேரக்டர், ஒரு எறும்பு, ஒரு எலி, ஒரு பூனை வரை காப்பாற்றுற மனிதன், ஆனா “ஒரு மனிதனை விட்டுவிடலாமா?”ன்னு கேள்வி எழுப்பும் இடத்துல எனக்கு உண்மையிலேயே ஒரு ஷாக் இருந்தது. இது சரி–தவறு என்று தீர்ப்பளிக்குற படம் இல்லை. நம்ம மனசுக்குள்ள இருக்குற நியாயம், மனிதத்தன்மை, அறம்
இதையெல்லாம் நம்மையே யோசிக்க வைக்குற படம்.
ராஜுமுருகன் தொடர்ந்து இப்படிப்பட்ட சினிமாவை உறுதியோட செய்து வருவார். தான் எழுத்தாளனாக இருந்த போது சந்தித்த அத்தனை மனிதர்களையும் திரையில் கொண்டு வரத் துடிப்பவர் அதுக்காக தமிழ் சினிமா அவருக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கும்.
ஷான் ரோல்டன் இசை, நடிகர்களின் இயல்பான நடிப்பு, அம்பேத்கர் சார் மாதிரி தயாரிப்பாளர்கள் – இந்த எல்லாமே இந்த படத்தை ஒரு முக்கியமான படமாக மாற்றியிருக்கிறது. மை லார்ட் என்னை யோசிக்க வைத்த, உள்ளுக்குள் உலுக்கிய படம். படக்குழுவிற்கு பெரிய வாழ்த்துக்கள்.

இயக்குநர் பாலா பேசியதாவது..,
தயாரிப்பாளர் அம்பேத்கர் குமார் மிக நல்ல கதைகளை மிகத் தேர்ந்தெடுத்து, இப்படிப்பட்ட அர்த்தமுள்ள படங்களை தயாரிப்பது பெரிய விஷயம். இன்னும் இரண்டு படங்கள் இதே ராஜு முருகனுக்கு செய்துவிடுங்கள் நீங்கள் கண்டிப்பாக மந்திரியாகிவிடலாம்.
“‘குக்கூ’, ‘ஜோக்கர்’, இப்போது ‘மை லார்ட்’ – டைட்டிலிலேயே நக்கலையும் கருத்தையும் சேர்த்து வைக்கும் தைரியம் ராஜுமுருகனுக்கே உரியது. அவர் சந்தித்த மனிதர்களையும், வாழ்க்கையையும் கதாபாத்திரங்களாக மாற்றும் திறமை இந்த படத்திலும் தெளிவாக தெரிகிறது” படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றாலும், “நிகழ்வில் பேசியவர்களின் கருத்துகளையும், படம் குறித்து வந்துள்ள எதிர்வினைகளையும் பார்த்தால், இது மரியாதைக்குரிய, தரமான படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை”
“சசிகுமார் எந்த படமாக இருந்தாலும் முழுமையாக தன்னை ஒப்படைக்கும் நடிகர். இந்த படத்தில் அவருடைய ஈடுபாடும், நடிப்பும் இன்னும் அதிகமாக தெரிகிறது. குறிப்பாக நடனக் காட்சிகள் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. நடிகை சைத்ரா “உண்மையாக நல்ல நடிகை. சில காட்சிகளில் அவருடைய ஆக்ரோஷமான, ஆழமான நடிப்பு பார்ப்பவர்களை கட்டிப்போடும். தமிழ் சினிமா இப்படிப்பட்ட நடிகைகளை பாதுகாத்து, அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்”.
“‘மை லார்ட்’ நல்ல படம் மட்டுமல்ல, நம்பிக்கையை தரும் படம். படம் கண்டிப்பாக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது..,
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் வாழ்த்த வந்த அனைவருக்கும் என் நன்றிகள்.
ராஜுமுருகன் எழுத்தாளராக இருந்த போதே தெரியும். அவர் என்னை சந்தித்து ஜிப்சி கதை சொன்னார். அந்தப் படம் எனக்கு வெற்றிப்படம் தான். அவர் இந்த கதையை சொன்ன போது சின்ன படமாக எடுக்கலாம் என்றார். அடுத்து நீரவ் ஷா, ஷான் ரோல்டன் என்றேல்லாம் சொன்னார். இறுதியாக சசிக்குமார் நடிக்க வைக்கலாம் என்றார். அப்போது தான் எனக்கு நம்பிக்கை வந்தது. இம்மாதிரியான படத்தை மக்களிடம் சேர்க்க அவர் மாதிரி ஒரு நடிகர் கண்டிப்பாக வேண்டும். நடிகை சைத்ரா அவர்களும் அற்புதமாக நடித்துள்ளார். ஷான் மிக அற்புதமான இசையை தந்துள்ளார்.
நான் இனி எத்தனை படங்கள் தயாரித்தாலும் மை லார்ட் மாதிரி ஒரு படம் செய்வேனா எனத் தெரியாது அந்தளவு இது மிகச்சிறந்த படம் அனைவருக்கும் நன்றி.
நடிகை சைத்ரா பேசியதாவது..,
“இங்கு வந்திருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ராஜு சார் மற்றும் எங்கள் சினிமாவுக்காக நீங்கள் இங்கு வந்து பேசியது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. என் நடிப்பைப் பற்றியும், படத்தைப் பற்றியும் நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஊக்கத்தை கொடுத்தது”
“தமிழ் மொழி எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தமானது. இந்தப் படத்தின் மூலம் அந்த விருப்பம் இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழ் மொழியை மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த அனுபவம் எனக்குள் உருவாக்கியுள்ளது”
இயக்குநர் ராஜு சார் குறித்து சொல்ல வேண்டும் அவருடைய படங்களை நான் முன்பே அறிந்திருந்தாலும், அவருடைய மனிதநேயமும் நம்பிக்கையும் இந்தப் படத்தின் போது எனக்கு நெருக்கமாக தெரிந்தது. ஆரம்பத்தில் எனக்கு சிறிது பயம் இருந்தது. ஆனால் அவர் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் தான் இந்தப் பயணத்தை எனக்கு எளிதாக்கியது. சசிக்குமார் மிகப்பெரிய இயக்குநர் நடிகர் அவருடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம் அவர் எனக்கு நிறைய சொல்லித்தந்தார்.
“இந்தப் படத்தின் ஒரு பகுதியாக என்னை இணைத்துக்கொண்ட ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், முழு படக்குழுவிற்கும் மனப்பூர்வமான நன்றி. இந்த அனுபவம் என் வாழ்க்கையிலும், கலைப் பயணத்திலும் என்றும் நினைவில் இருக்கும்” நன்றி.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
இந்த படம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியமானதாக தெரிகிறது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதில் சொல்லப்படும் கருத்தும், அதை அணுகிய விதமும் நேர்மையானது. சமூக உணர்வோடு சொல்லப்படும் விஷயங்கள் எளிதானவை அல்ல. ஆனால் அவை மனிதர்களை மையமாக வைத்து பேசும்போது தான் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ராஜுமுருகன் இந்தப்படத்தின் கதை சொன்னபோது இது சமூகம் சார்ந்த படமாக இருக்குமென்று நினைத்தேன் ஆனால் இது ஜனரஞ்சக படமாகவும் இருந்தது. இசை, காட்சி அமைப்பு, பாடல்கள் – அனைத்தும் கதைக்கு ஆதரவாக, சினிமாட்டிக் அனுபவத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளன. வெறும் எண்டர்டெயின்மெண்ட் மட்டுமல்ல; சிந்திக்க வைக்கும் உள்ளடக்கத்தையும் இந்த படம் வழங்குகிறது.
நான் அண்ணா எனச் சொல்லி பெருமைப்படும் நபர் சசிக்குமார் அவரிடம் எந்த ஈகோவும் இல்லை. மிகச்சிறந்த மனிதர் இந்தப்படத்தை மிகச்சிறப்பாக ஆக்கியிருக்கிறார். சைத்ரா நடிப்பை பார்த்து ஆச்சரியமாக இருந்தது. கோவில்பட்டி பொண்ணாக மாறியிருக்கிறார்.
இந்த முயற்சி ஒரு தனித்துவமான கலை அனுபவம். இந்த படக்குழுவினரின் உழைப்புக்கும், நேர்மையான அணுகுமுறைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நடிகர் சசிக்குமார் பேசியதாவது..,
‘மை லார்ட்’ திரைப்படம் கோர்ட்டை மையமாக கொண்ட படம் அல்ல; அதிகாரம் ஒரு எளிய மனிதனின் கையில் கிடைத்தால் அவன் அதை எவ்வாறு பயன்படுத்துவான் என்பதையே மையமாகக் கொண்டது என நடிகர் சசிகுமார் தெரிவித்தார். ‘மை லார்ட்’ என்ற தலைப்பு அந்த மனிதனின் மனநிலையையும் கதாபாத்திரத்தின் தன்மையையும் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.
கதையில் எந்த மாற்றமும் செய்யாமல் படம் எடுக்க முழு சுதந்திரம் வழங்கிய தயாரிப்பாளர் அம்பேத்குமார்க்கு அவர் நன்றி தெரிவித்தார். இது நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் குழு வரை அனைவரின் நேர்மையான உழைப்பால் உருவான கூட்டு முயற்சி என்றும், படம் அனைவரையும் மகிழ்விக்கும்.
இயக்குநர் ராஜு முருகன் பேசியதாவது..,
‘மை லார்ட்’ திரைப்படம் எந்த கணக்குப் போடலிலும் உருவானது அல்ல; தயாரிப்பாளர் அம்பேத்குமார் தன்ன்மீது வைத்த நம்பிக்கையில்தான் இந்த படம் உருவானது என இயக்குநர் ராஜு முருகன் தெரிவித்தார். எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களின் வலியையும் சினிமாவாக மாற்றும் நம்பிக்கையை பாலா, மாரி செல்வராஜ், லிங்குசாமி போன்ற இயக்குநர்களிடமிருந்து கற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
இந்த படத்தின் அடிப்படை நோக்கம் மக்களுக்கு நம்பிக்கையை வழங்குவதாகும் என்றும், Think Music சந்தோஷ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், நடிகை சைத்ரா, நடிகர் சசிக்குமார் உள்ளிட்ட அனைவரின் ஆதரவு இல்லையென்றால் இந்த படம் சாத்தியமாகியிருக்காது. நன்றி
ஏழை, எளிய மக்கள்மீது நடைபெறும் அதிகார அத்துமீறல்களை அரசியல் நையாண்டி பாணியில் சொல்லும் இப்படம், அதே நேரத்தில் குடும்பங்கள் ரசிக்கும் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடும் ‘மை லார்ட்’, பிப்ரவரி 13 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
“உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி
Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்ஸ்–காமெடி திரைப்படம் “பூக்கி”.
அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், இளைஞர்களை கவரும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. காதலர் தினக் கொண்டாட்டமாக 2026 பிப்ரவரி 13 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!
படம் வெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது..,
நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. உங்கள் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது. மீடியா, ரசிகர்கள் எல்லாரும் கண்டிப்பாக பாராட்டுவார்கள். மலையாள சினிமா போல தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் வர வேண்டும். அந்த வகையில் புதிய பரதி ஒரு முக்கியமான எழுத்தாளர். இந்த படத்துக்கு பிறகு அவர் பெரிய இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. அஜய் – மிக நேர்மையான, உழைப்பாளி. முதலில் ஒரு நல்ல மனிதன். அதனால் தான் நல்ல நடிகனாகவும் பெரிய இடத்திற்கு வருவார். தனுஷா – மிகவும் புத்திசாலியான, திறமையான நடிகை. டயலாக் டெலிவரி, டப்பிங், நடிப்பு – எல்லாமே சிறப்பாக இருந்தது. இந்த படம் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொண்டு வரும். இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் குழு, எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பு குழு அனைவருக்கும் என் நன்றி. இந்த படம் பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் ஆதரவோடு இது பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன். இப்படத்தின் உரிமையை வாங்கிய Zee நிறுவனத்திற்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் கணேஷ் சந்திரா பேசியதாவது..
இவ்வளவு நாள் கேமராவுக்குப் பின்னாடி இருந்து மத்தவங்க சொல்ற 'ஆக்ஷனை' மட்டும் கேட்டுட்டு இருந்தேன். ஆனா இப்போ முதல் முறையா, 'பூக்கி' படத்தின் மூலமா கேமராவுக்கு முன்னாடி வந்து 'ஆக்ஷன்-கட்' சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்.
இந்த வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. என் மீது அவர் வைத்த நம்பிக்கையை நான் கண்டிப்பாக காப்பாற்றியிருக்கிறேன். இந்த படத்தை வெறும் ஆறு மாதங்களில் முடித்திருக்கிறோம். இன்றைய சூழலில் ஒரு படத்தை விரைவாக முடித்து, வணிக ரீதியாகவும், வெளியீட்டிலும் ஒழுங்காக கொண்டு வருவது எளிதல்ல. Zee நிறுவனம் இப்படத்தை வாங்கி விட்டது. அதை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாருக்கு மிகப் பெரிய நன்றி. விஜய் ஆண்டனி சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவருடைய உழைப்புக்கு ஒரே விளக்கம் தான் “தொடர்ந்து முயற்சி செய். தவறாக இருந்தாலும் சரியாக வரும் வரை செய்” என்பார். இரவு, பகல் பாராமல் வேலை செய்யும் அந்த ஆற்றல் எங்களை எல்லோரையும் ஊக்கப்படுத்தியது. இந்த படத்தின் எழுத்தாளர் புதிய பரிதி, நாயகன் அஜய், நாயகி தனுஷா —இந்த மூன்று பேரும் இந்த படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இவர்களில்லாமல் இந்த படம் இப்படியாக உருவாகியிருக்காது. இயக்கக் குழு, இசை, எடிட்டிங், உடை வடிவமைப்பு, தயாரிப்பு குழு, அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாக வேலை செய்தார்கள். அதனால்தான் இந்த படம் இவ்வளவு வேகமாகவும் அழகாகவும் உருவானது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அனைவருக்கும், இந்த நிகழ்வுக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.
நடிகர் அஜய் திஷான் பேசியதாவது..,
இந்த படம் எனக்கு ஒரு சாதாரண திரைப்படம் அல்ல. இது என் வாழ்க்கையில் கிடைத்த ஒரு பெரிய அனுபவம். நான் ஒருபோதும் நினைக்காத பல விஷயங்கள் இந்த படத்தின் மூலம் நடந்திருக்கிறது. கதையை முதலில் படித்தபோதே, இந்த படம் மிகுந்த கவனத்தோடு, ஆழமான எழுத்துடனும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைக் உணர்ந்தேன். உண்மை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த கதையே என்னை மிகவும் பாதித்தது. இயக்குநர் கணேஷ் சந்திரா சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவருடன் வேலை செய்வது மிகுந்த ஊக்கமும் நிம்மதியும் தரும் அனுபவமாக இருந்தது. அவருடன் இன்னும் நிறையப்படங்கள் வேலை செய்ய ஆசைப்படுகிறேன். படத்தில் உடன் நடித்த அனைவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். தனுஷா நல்ல தோழியாக மாறி விட்டார். இந்த படத்தின் குழு அனைவரும் ஒரு குழுவாக அல்ல, ஒரு குடும்பமாகவே இருந்தார்கள். அவர்களில்லாமல் இந்த படம் இவ்வளவு சீக்கிரமாகவும் ஒழுங்காகவும் முடிந்திருக்காது. உடை வடிவமைப்பாளர் மாளவிகா அவர்களுக்கும், நடன இயக்குநர் அவர்களுக்கும் என் சிறப்பு நன்றிகள். இந்த படம் எனக்கு ஒரு வேலை போல அல்ல; இன்னொரு வீட்டில் இருப்பது போலவே இருந்தது. அந்த அளவுக்கு அன்பும், நம்பிக்கையும் இந்த குழுவில் இருந்தது. என்னை ஆரம்பத்திலிருந்தே நம்பி ஆதரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படம் உங்களுக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நடிகை லக்ஷ்மி மஞ்சு பேசியதாவது…,
இந்த படம் உண்மையிலேயே ரொம்ப ஸ்பெஷல். இந்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இயக்குநர் மிகப்பெரிய திறமைசாலி. மிகவும் தனித்துவமானவர். நடிகர்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரை கண்டுபிடித்தற்காக விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. அஜய் ஒரு உதவி இயக்குநர் போல தான் இருந்தார். அவர் திறமை பார்த்து ஆச்சரியாமாக இருந்தது. விஜய் ஆண்டனி சார் பாடலில் நான் நடிக்கவில்லை என்பது எனக்கு வருத்தம். ஆனால் இந்தப்படத்தில் நானும் இருப்பது பெருமை. தமிழில் எப்போது நடித்தாலும் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது. எல்லோருக்கும் நன்றி. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை தனுஷா பேசியதாவது..,
முதலில், இவ்வளவு பெரிய படத்தில் என்னை நம்பி, எனக்கு வாய்ப்பு தந்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். நாயகியாக இது எனது முதல் திரைப்படம். அதுவும் இவ்வளவு பெரிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதம். நான் உண்மையிலேயே மிகுந்த அதிர்ஷ்டசாலி. இயக்குநர் கணேஷ் சந்திரா சார் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு கலைஞருக்கு மிகவும் முக்கியமானது, சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் நடிக்க முடிவதுதான். அந்த நிம்மதியை முழுமையாக எனக்கு அளித்தவர் கணேஷ் சந்திரா சாரும், இந்த முழு குழுவும் தான். எத்தனை சிறிய காட்சிகளுக்காக எத்தனை முறை எடுத்தாலும், ஒரு நொடி கூட முகம் சுளிக்காமல் எப்போதும் ஊக்கம் அளித்தார்கள். அதற்காக என் மனமார்ந்த நன்றிகள். என்னுடன் நடித்த அஜய் — உங்களுக்கும் என் நன்றி. மிகவும் கனிவாகவும், சுதந்திரமாகவும் நடந்துகொண்டதால் இப்படத்தில் நடிக்க எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. அஷ்வின், லக்ஷ்மி அம்மா — அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். இந்த திரைப்படத்தை பிப்ரவரி 13 அன்று, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரையரங்கில் கண்டிப்பாக பார்த்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி.
எழுத்தாளர் புதிய பரிதி பேசியதாவது..,
இந்த படம் ஒரு சாதாரண முயற்சி அல்ல. கணேஷ் சந்திராவிடம் நான் கதையை ஒரு படமாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கூட கொடுக்கவில்லை. “படிக்க ஒரு ஸ்கிரிப்ட் கொடுங்கள்” என்றார். அதைப் படித்த இரண்டே நாளில் படம் உறுதியானது — அது எனக்கு ஒரு மேஜிக் மாதிரி இருந்தது. இந்த படத்தில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய பலம் — கணேஷ் சந்திரா சாரும் , தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி சாரும் தான். இருவரும் கதையை அப்படியே நம்பி, அதற்கு உண்மையாக நின்றார்கள். “ஸ்கிரிப்ட் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று உறுதியாக நின்றார்கள். ஒரு முதல் பட எழுத்தாளருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது. நான் எழுதும்போதே இந்த படம் என் மனதில் இசையோடு, எடிட்டிங்கோடு ஓடிக்கொண்டிருந்தது. அந்த உணர்வை இசை மூலமாகவும், எடிட்டிங் மூலமாகவும் அப்படியே திரையில் கொண்டு வந்ததற்காக விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இந்த படத்தில் இசை என்பது பின்னணி மட்டும் அல்ல, பல காட்சிகளுக்கே மாற்றாக இசை பேசுகிறது. அது இந்த படத்தின் மிகப் பெரிய பலம். இயக்கக் குழு, உடை வடிவமைப்பாளர் மாளவிகா, நடன இயக்குநர், ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞரும் ஒரு குழுவாக அல்ல — ஒரு குடும்பமாக வேலை செய்தார்கள். உண்மையிலேயே இந்த படம் எனக்கு ஒரு வேலை போலவே தோன்றவில்லை. ஒரு குடும்பத்தோடு இருந்து செய்த அனுபவமாகத்தான் இருந்தது. இந்த பயணத்தில் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும், இந்த நிகழ்வுக்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இயக்குநர் சசி பேசியதாவது..,
எல்லாருக்கும் வணக்கம். இந்த படத்துல இருக்கிற பாடல் காட்சிகளையும், சீன்ஸையும் நீங்க எல்லாரும் பார்த்திருப்பீங்க. உங்கள் எல்லாருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்கு அதிகமான எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது. அதுக்குக் காரணம் கணேஷ்சந்திரா. அவர் ஒரு சினிமாட்டோகிராபர் மட்டுமல்ல, ஒரு இயக்குநரும் கூட. நான் விஜய் ஆண்டனி, அஜய் வைத்து கிராமத்து பின்னணியில் ஒரு படம் செய்து வருகிறேன். அந்த படத்துல எல்லாருமே ஃபுல்லா டேன் லுக். விஜய் ஆண்டனிக்கு ஒரு விவசாயி கேரக்டர். ஆனா இங்க இந்த படத்துல பார்த்தா… எல்லாமே கலர் கலரா, ஃப்ரெஷ்ஷா இருக்கிறது. அதை பார்த்ததும் ரொம்ப பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அஜய் என் படத்திலேயும், இந்த படத்திலேயும் இரண்டு வெவ்வேறு மாதிரியான கேர்கடர்களை மிக அழகாக கையாண்டிருக்கிறார். உண்மையிலேயே நல்ல திறமைசாலி. இப்படத்தில் ரொம்ப சென்சிபிளான, எமோஷனல் லவ் ஸ்டோரி இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கணேஷ்சந்திரா பற்றி நான் கேள்விப்பட்டிருக்கேன். அவர் எடுக்குற கதை, சொல்லுற விதம் எப்போதுமே ஒரு உணர்வோட இருக்கும். அதோட விஜய் ஆண்ட்னியின் பாடல்கள்… சோகமான இடத்துல வர வேண்டிய சாங்ஸ்கூட ஒரு தனி வைபோட, அவருடைய ஸ்டைல்ல ரொம்ப அழகா போட்டிருக்கார். இந்த பிப்ரவரி 13, ஒரு நல்ல கதையோட, ஒரு நல்ல படம் திரைக்கு வரப்போறதுன்னு நம்பிக்கையோட முடிக்கிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகர் அஷ்வின் ராம் பேசியதாவது..,
நான் தியேட்டர் குரூப்பில் ஏழு வருடமாக இருந்தேன், பூக்கி பட வாய்ப்பு தந்த என் இயக்குநர் கணேஷ் சந்திரா சார், விஜய் ஆண்டனி சாருக்கு நன்றி. இயக்குநர் ரொம்பவே கூல், அவர் ஒரே நேரத்தில் கேமரா, டைரக்ஷன் இரண்டையும் செய்துள்ளார். இந்த டீம் ரொம்பவே இனிமையாக இருந்தார்கள். எல்லோருக்கும் என் நன்றிகள். விஜய் ஆண்டனி சார் பாடல்களுக்கு தீவிர ரசிகன், அவர் தயாரிக்கும் படத்தில் நடிப்பது பெரிய மகிழ்ச்சி. படக்குழு அனைவருக்கும் என் நன்றிகள். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

காஸ்ட்யூம் டிசைனர் மாளவிகா பேசியதாவது..,
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக முதலில் விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. “பூக்கி” எனக்கு ரொம்பவே சிறப்பு வாய்ந்த படம். என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம். இந்த டீம்ல வேலை பண்ணும்போது மனசு ரொம்ப சந்தோசமாக இருந்தது. முழு இயக்குநர் குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றி. எல்லாரும் உண்மையிலேயே அருமையாக வேலை செய்திருக்கிறார்கள். இந்தப் படம் எல்லாருக்கும், குறிப்பா காதல் ஜோடிக்கு, ரொம்ப நெருக்கமான படமாக இருக்கும். பிப்ரவரி 13, கண்டிப்பா திரையரங்குகளில் இந்த படத்தை பாருங்கள். நன்றி.
நடன இயக்குநர் ஹரி பேசியதாவது..,
இந்தப்படம் மிகச்சிறந்த அனுபவம். இயக்குநருக்கும் விஜய் ஆண்டனி சாருக்கும் என் நன்றிகள். பிப்ரவரி 13, கண்டிப்பா திரையரங்குகளில் எல்லோரும் இப்படத்தை பாருங்கள் நன்றி.
கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசியதாவது…,
இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் கணேஷ் சந்திராவுக்கும், விஜய் ஆண்டனி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. கணேஷ் இந்த படத்தை பற்றி முதலில் எனக்கு சொல்லும்போது, “இது ஃபேன்டஸியா பண்ணணும், இதுவரைக்கும் பண்ணியதிலிருந்து கொஞ்சம் வேற மாதிரி இருக்கணும், பார்த்து பண்ணுங்கன்னு சொன்னார். அப்போலிருந்தே அவர் எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தார். “இது இப்படிதான் வரணும், இது இதே மாதிரி தான் இருக்கணும்”ன்னு ஒவ்வொன்றையும் டிஸ்கஸ் பண்ணி, அதுக்கப்புறம் ஒவ்வொரு விஷயமாவே பிரிச்சு வேலை பண்ணினோம். அந்த உழைப்பு எல்லாம் சேர்ந்து, நல்லா வந்திருக்கு. இந்த படமும் நல்லா வந்திருக்கு. 13 ஆம் தேதி பார்த்துட்டு, நீங்க எல்லாரும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் நன்றி.
பாடலாசிரியர் லாவர்தன் பேசியதாவது..,
“பூக்கி” படத்தில் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் பாடலை எழுதினது எனக்கு ரொம்பவே சந்தோசம். விஜய் ஆண்டனி சார் கூட வேலை பார்க்க வேண்டும் என்பது எல்லா பாடலாசிரியர்களும் ஒரு கனவாக இருக்கும். அந்த கனவு எனக்கு நிறைவேறிச்சுன்னு நான் தைரியமா சொல்ல முடியும். ஏன்னா, நான் 12th படிக்கிற டைம்ல “வேட்டைக்காரன்” படம் ரிலீஸ் ஆனது. அப்போ சார் பாட்டை கேட்டு, “புலி உருமுது” மாதிரி பாடல்களுக்கெல்லாம் நாங்க வைப் பண்ணிய நாட்கள் அது. அப்படிப்பட்ட ஒரு மியூசிக் டைரெக்டரை ரசிச்சு வளர்ந்த நான், இன்னைக்கு அவருக்குப் பக்கத்துல உட்கார்ந்து, நான் பாடல் எழுதுற பாக்கியம் கிடைத்திருக்கிறது, நான் ரொம்பவே ஆசீர்வதிக்கப்பட்டவன் ன்னு தான் சொல்லணும். அந்த விதத்துல, விஜய் ஆண்டனி சாருக்கு நான் மனதார நன்றியை சொல்லிக்கிறேன். இந்த படத்தோட இயக்குநருக்கும், எழுத்தாளர் புதிய பரிதி சாருக்கும் என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். இந்த வாய்ப்பை கொடுத்ததற்காக எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றி.
ஸ்டண்ட் மாஸ்டர் பிரபு ஜாக்கி பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் ஆண்டணி சாருக்கு முதலில் என் மனமார்ந்த நன்றி. கணேஷ் சந்திரா கூட நான் முன்பே மூன்று படங்களில், அவர் கேமராமேன் ஆக இருந்தபோதும், அசிஸ்டெண்ட் ஆக இருந்த போதும், ஃபைட் மாஸ்டர் டீமில் வேலை செய்திருக்கேன். அந்த நம்பிக்கையில் இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. இந்த படம் முழுக்கவே மிக நல்ல ஸ்டண்ட் காட்சிகள். குறிப்பா படத்துல ஒரு சேஸ் சீன் இருக்கிறது, அதுக்கப்புறம் ஒரு ஃபைட் சீனும் இருக்கிறது. கண்டிப்பாக நீங்க எல்லாரும் பார்த்து ரசிப்பீங்கன்னு நம்புறேன். நன்றி.
நடிகை பிரியங
மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரன், சிறு வயதிலேயே “மாஸ்டர் மகேந்திரன்” என பெயர் பெற்றார். இளம் வயதில் விஜயின் மாஸ்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரம் (பவானி) மூலம் புகழ் பெற்ற இவர், அதன்பிறகு தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களிலும், இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
மகேந்திரன் நடிப்பில் உருவான நீலகண்டா திரைப்படம், கர்மா மீது அதீத நம்பிக்கை கொண்ட சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் எதிரியை எதிர்கொள்வதை மையமாகக் கொண்டு, அதிரடி ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது.
இந்த படத்தை ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பு: எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் (M ஸ்ரீனிவாசு & D வேணுகோபர்), நிர்வாக தயாரிப்பு: அனில் இனமடுகு, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஸ்ரவன் ஜி குமார், இசை: மார்க் பிரசாந்த்.
படத்தில் மகேந்திரன், யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்ளு ப்ரித்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு, சிவகார்த்திக் தன்டா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இது இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’
அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் நடிகர் அதர்வா முரளி, அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் பாராட்டைப் பெற்ற ‘DNA’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படங்களில் அவரது திறமையான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
இப்போது, ஜீவா சங்கர் இயக்கும் புதிய ‘வலை’ திரைப்படத்தில் அதர்வா முரளி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறார். சமீபத்தில் வெளியான டீசர் இதற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
திரைப்படம் குறித்து இயக்குநர் ஜீவா சங்கர் கூறுகையில்,
“ராமேஸ்வரத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த திரைப்படம் சரா மற்றும் குட்டி என இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி நகர்கிறது. இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் அதர்வா முரளி நடித்துள்ளார். முழுக்க முழுக்க மீனவர் சமூகத்தின் வாழ்க்கை முறையை பேசும் படமாக இது இல்லாமல் பழிவாங்கல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூபா மஞ்சரி மற்றும் வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முரளி ஷர்மா, ஆடுகளம் நரேன், அர்ஜாய், ஜெயபிரகாஷ், அருள் டி. சங்கர், துளசி, மயில்சாமி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள நான்கு பாடல்களும் சிறப்பாக உருவாகியுள்ளன. அந்தமான், சென்னை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் தலா ஒரு பாடலை படமாக்கியுள்ளோம்” என்றார்.
இந்த பழிவாங்கல் கதை மற்ற படங்களிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்று இயக்குநர் ஜீவா சங்கர் பகிர்ந்து கொண்டதாவது,
“இதற்கான காரணம் தனித்துவமானது. ‘பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா?’ என்ற கேள்வியை மையமாக வைத்து கதையை படமாக்கியுள்ளோம். கெட்ட மனிதர்கள் செய்யும் அநியாயங்களுக்கு எதிரான பதிலடி கூட பழிவாங்கலாக மாறுமா என்பதையும் பேசுகிறோம். இந்த விஷயங்களை எல்லாம் அறிவுரையாக இல்லாமல் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் சுவாரஸ்யமான திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம். படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படம் பார்வையாளர்களை மகிழ்விப்பதுடன், ஒரு நல்ல கருத்தையும் எடுத்துச் செல்லும். இதற்கு முன்பு ராமேஸ்வரம் பின்னணியில் பல படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய மற்றும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றார்.
திரைப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’
‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம், வெளியாகும் முன்பே இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஆந்திரா–தெலுங்கானா (AP–TG) விநியோக உரிமையை தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையிலான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனம் ரூ.120 கோடி செலுத்தி கைப்பற்றியுள்ளது. இது தெலுங்கு மொழி அல்லாத திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தம் ஆகும்.
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிக்கும் இந்த படத்திற்கு, AP–TG உரிமை பெற மூன்று முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டன. அந்த போட்டியில் SVC வெற்றி பெற்று, மிகப்பெரிய விநியோக ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது.
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’, மொழி எல்லைகளை தாண்டும் நட்சத்திர சக்தியை வெளிப்படுத்தும் படம் எனக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ரசிகர்கள் படத்துக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில், யாஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். KGF Chapter 2க்குப் பிறகு அவரின் அடுத்த படத்துக்காக நான்கு ஆண்டுகளாக காத்திருந்த எதிர்பார்ப்பு, இப்போது ‘டாக்ஸிக்’ மீது உருவான மாபெரும் முன் வெளியீட்டு வரவேற்பாக வெளிப்படுகிறது.
ஒப்பந்தம் குறித்து தில் ராஜு கூறியதாவது:
"யாஷ் இன்று இந்திய சினிமாவின் ஒரு மாபெரும் சக்தி. KGF 2வுக்குப் பிறகு அவரது மார்க்கெட் உலகம் முழுவதும் மேலும் வளர்ந்துள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு அவரது அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு மிகப் பெரியதாக உள்ளது. நான்கு ஆண்டுகள் கழித்து வரும் இந்தப் படத்தை SVC சார்பில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். யாஷுடன் மேலும் பல படங்களில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.”
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்திருப்பது, டாக்ஸிக் படத்தின் மீதான மதிப்பை மேலும் உயர்த்துகிறது. தேசிய விருது பெற்ற படங்கள் மற்றும் பல மெகா ஹிட்களை உருவாக்கியுள்ள இந்த நிறுவனம், படத்தின் உள்ளடக்கம், அளவு மற்றும் நீண்டகால வசூல் திறன் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.
‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம், உலகம் முழுவதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு வெளியீடு மற்றும் பரவலான புரமோஷன்கள், “அசாதாரணமான, மாபெரும் சினிமா அனுபவம்” என்பதற்கான உறுதியாக விளங்குகின்றன.
யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் இந்த படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி, தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித் உள்ளிட்ட வலிமையான தொழில்நுட்பக் குழு படத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹாலிவுட் இயக்குநர் ஜே ஜே பெரி (John Wick), தேசிய விருது பெற்ற சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்டி ஆகியோரின் இயக்கத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிக்கும் இந்த படம், வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் தயாரிப்பில், மார்ச் 19, 2026 அன்று ஈத், உகாதி, குடி பட்வா போன்ற பண்டிகைகளுடன் இணைந்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
‘குயின்’, ‘ஜன கன மன’ போன்ற கவனம் பெற்ற படங்களை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி, இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக ஒரு பீரியட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். 1950–60 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ‘பள்ளிச்சட்டம்பி’, அவரது இயக்கப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
மோகன்லால் நடித்த ‘ஷிக்கார்’ மூலம் அறியப்பட்ட திரைக்கதை ஆசிரியர் எஸ். சுரேஷ் பாபு, இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் பணியாற்றியுள்ள நிலையில், இந்த பீரியட் படத்திற்கு அவர் வழங்கும் இசை மீதும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கேரள அரசின் விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் மஞ்சுஷா ராதாகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், ஒளிப்பதிவை டிஜோ டோமியும், படத்தொகுப்பை ஸ்ரீஜித் சரங் மேற்கொண்டுள்ளனர்.
வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டொவினோ தாமஸ் இதுவரை காணாத புதிய தோற்றத்தில் தோன்றும் இந்த ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம், தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது.
குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!
வீழ்ச்சியை சந்தித்த ஒரு வயதான கேங்க்ஸ்டர், தனது இழந்த அதிகாரத்தையும் குடும்பத்தையும், குறிப்பாக தலைமுறைகளாக கடந்து வந்த பாரம்பரிய மரபையும் மீட்டெடுக்க முயலும் கதையைக் களமாக கொண்டு உருவாகி வரும் பிரம்மாண்டமான வெப் தொடர் ‘லெகஸி’.
‘லெகஸி’ குறித்து படக்குழு பகிர்ந்து கொண்டதாவது,
“‘லெகஸி’ எங்களுக்கெல்லாம் ஒரு முக்கியமான சாப்டர். அதிகாரம், வெற்றி, தோல்வி, குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான மோதல்கள் ஆகியவற்றை ஆழமாக உணர்ந்து இந்தக் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளோம். குற்ற உலகத்தை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், கடந்த தலைமுறைகளில் விட்டுச் சென்ற பாரம்பரியம், தற்போதைய ஆசைகளுடனும் விசுவாசத்துடனும் எவ்வாறு மோதுகிறது என்பதே மையமாக இருக்கும்,” என்றனர்.
மேலும், இந்தக் கதையை திரையில் உருவாக்குவது பிரம்மாண்டமான முயற்சியும், பலரின் கூட்டு உழைப்பும் தேவைப்பட்டதாகவும், அந்த நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கிய நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு படக்குழு தனது நன்றியை தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள ‘லெகஸி’, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில், அதிகாரம், குடும்பம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு வலுவான க்ரைம் டிராமாவாக உருவாகி இருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி
புதிய திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதும், ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் கதாபாத்திரங்களையும் நடிகர்களையும் திரையில் அறிமுகப்படுத்துவதும், சமூகத்தை பிரதிபலிக்கும் வலுவான கதைகளை முன்னிலைப்படுத்துவதுமாக ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டுகளில் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதுகள் வழங்கி கௌரவித்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் வெளியான விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற ‘கூழாங்கல் (Pebbles)’ திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான மாநில விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் செல்லபாண்டி, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுள்ளார். எந்தவித சமரசமும் இன்றி உணர்வுகளின் வலிமையோடு கதையை திரையில் வடித்த இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ் அவர்களுக்கு ரௌடி பிக்சர்ஸ் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
அதேபோல், 2021 ஆம் ஆண்டு வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் பெண்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு, சமூகத்திற்கு வலுவான கருத்துகளை எடுத்துரைத்ததற்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது. சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய கருத்தை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் திரையில் வடிவமைத்த இயக்குநர் மிலிந்த் ராவ் அவர்களுக்கு ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
மேலும், சமூக நெறிமுறைகளை வலியுறுத்திய ‘அறம்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா, 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை விருதை பெற்றிருப்பதும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இப்படத்தை இயக்கிய கோபி நயினார், தயாரிப்பாளர்கள் கோடபாடி ஜே. ராஜேஷ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஆகியோருக்கும் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.
இந்த விருதுகள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கிரியேட்டிவ் குழுக்களின் முழு அர்ப்பணிப்பின் விளைவே என்றும், சமூக பொறுப்புணர்வுடன் கூடிய தரமான திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்கவும், புதிய திறமையாளர்களுக்கான தளமாகவும் ரௌடி பிக்சர்ஸ் செயல்பட இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













