சற்று முன்
சினிமா செய்திகள்
கார்த்தியின் வித்தியாசமான தோற்றத்தில் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியானது!
Updated on : 14 November 2024
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் புதிய படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமேஷ் திலக், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கார்த்தியின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதுடன்.. இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால் படத்தை பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
சமீபத்திய செய்திகள்
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் பிரமாண்டமான தயாரிப்பு 'படையாண்ட மாவீரா'
வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா.
மண்ணையும் மக்களையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பில் படையாண்ட மாவீரனாகவே வாழும் வ.கௌதமனுக்கு எதிர் நாயகர்களாக (வில்லன்களாக) மன்சூரலிகான், "ஆடுகளம்" நரேன், "பாகுபலி" பிரபாகர், "வேதாளம்" கபீர், மதுசூதனராவ், தீனா என ஆறு பேர் மோதுகின்றனர்.
பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இப்படைப்பில் நெருப்பு தகிக்கும் நான்கு சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைக்க நடனக் காட்சிகளை டான்ஸ் மாஸ்டர் தினேஷ் காட்சிப் படுத்தியுள்ளார். மேலும் படையாண்ட மாவீராவில் மிக முக்கிய கதாப்பாத்திங்களாக சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், "ரெடின்" கிங்ஸ்லி, "நிழல்கள்" ரவி, இளவரசு, தமிழ் கெளதமன், "தலைவாசல்" விஜய், ஏ.எல். அழகப்பன் ஆகியோரோடு பூஜிதா நாயகியாக நடிக்கிறார். பேரழகான இசையை ஜிவி.பிரகாஷ் குமாரும், பாடல்களை '"கவிப்பேரரசு" வைரமுத்து அவர்களும் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவு வெற்றிவேல் மகேந்திரன், கோபி ஜெகதீஸ்வரன், கலை மோகன், வசனம் பாலமுரளி வர்மன், படத்தொகுப்பு ராஜா முகமது, ஸ்டில்ஸ் அன்பு, மக்கள் தொடர்பு நிகில் கவனிக்கின்றனர்.
இப்படைப்பைப் பற்றி இயக்குநர் வ.கௌதமன் " என் வாழ்நாள் லட்சியமே தமிழர்களின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத சந்தனக்காடு, முந்திரிக்காடு, வன்னிக்காடுகளில் வாழ்ந்த மாவீரர்களின் வரலாற்றை படைப்பாக்கி ஒரு தரிசனமாக இவ்வுலகிற்கு தருவது மட்டுந்தான். சந்தனக்காட்டு மாவீரன் வீரப்பனை படைத்துவிட்டேன். முந்திரிக்காடும் வன்னிக்காடும் மட்டுமே மீதமுள்ளது. தமிழ் மண்ணில் ஆகப் பெரும் பேரதிர்வுகளை உருவாக்கப் போகும் இப்படைப்பு உன்னையும் இந்த மண்ணையும் காக்க ஒருத்தாய் மக்களாக நில்லுங்கள்" என்று உரக்கப் பேச வருகிறது. "மாவீரம்" சுமந்த இப்பெரு வரலாற்றின் படப்பிடிப்பு இதுவரை 76 நாட்கள் நடைபெற்று மீதமுள்ள ஐந்து நாட்கள் மெய்சிலிர்க்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு க்காக படையாண்ட மாவீரா குழு தயாராகிக் கொண்டிருக்கிறது என உற்சாக நெகிழ்வோடு பேசி நிறைவு செய்கிறார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்திய 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்!
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வீர தீர சூரன்- பார்ட் 2 ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
முன்னணி நட்சத்திர இயக்குநரான எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'வீர தீர சூரன் - பார்ட் 2 'எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு , துஷாரா விஜயன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜி. கே. பிரசன்னா மேற்கொள்ள, கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் கவனித்திருக்கிறார். ஆக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படத்தின் கிளிம்ப்ஸ் ஏற்கனவே வெளியாகி பதினான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 'வீர தீர சூரன் பார்ட் 2 ' எனும் இந்த திரைப்படத்தின் டீசரில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்தி இருப்பதால்... படத்தைப் பற்றிய ஆர்வத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
சீயான் விக்ரம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ராஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் டீசர்!
நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா மற்றும் திறமைமிகு நடிகர் தீக்ஷித் ஷெட்டி ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் "தி கேர்ள்பிரண்ட்". பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை, கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மெண்ட் பேனர்கள் இணைந்து தயாரிக்கிறது. ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள "தி கேர்ள்பிரண்ட்" படம் ஒரு அழகான காதல் கதையைச் சொல்கிறது. இப்படத்தை தீரஜ் மொகிலினேனி மற்றும் வித்யா கோப்பினிடி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இன்று, பிரபல முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா "தி கேர்ள்பிரண்ட்" படத்தின் டீசரை வெளியிட்டார்.
படம் குறித்து விஜய் தேவரகொண்டா கூறியதாவது.. ""தி கேர்ள்பிரண்ட்" டீசரில் உள்ள ஒவ்வொரு காட்சியும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை சந்தித்தேன். பல பெரிய வெற்றிகளைப் பெற்றாலும், இன்னும் அவர் மிகவும் அடக்கமாகவே இருக்கிறார். "தி கேர்ள்பிரண்ட்" படம், ஒரு நடிகையாக அவருக்கு அதிக பொறுப்பை அளித்துள்ளது, அந்த பொறுப்பை அவர் முறையாக ஏற்றுக்கொண்டு, தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களின் இதயங்களைக் கவரும் "தி கேர்ள்பிரண்ட்" படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள்," என்று அவர் கூறியுள்ளார்.
"தி கேர்ள்பிரண்ட்" டீஸர் ராஷ்மிகா கல்லூரி விடுதிக்குள் நுழைவதிலிருந்து தொடங்குகிறது. டீசர் ஹீரோ தீக்ஷித் ஷெட்டி மற்றும் ராஷ்மிகாவின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது, அவர்களுக்கு இடையேயான அழகான உறவைக் காட்டுகிறது. கல்லூரியில் படிக்கும் காலத்தில் முன்னணி ஜோடியின் உணர்வுபூர்வமான பயணம் இதயப்பூர்வமான தருணங்களுடன் அவர்களின் உறவைச் சித்தரிக்கிறது. கவித்துவமான உரையாடல்களுடன் விஜய் தேவரகொண்டாவின் குரல்வளம் நம்மை கவர்கிறது. ஹேஷாம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசையும், டீசரின் முடிவில் ராஷ்மிகாவின் உரையாடலும் அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது. வித்தியாசமான காதல் கதையாக உருவாகி வரும் "தி கேர்ள்பிரண்ட்" விரைவில் திரைக்கு வர உள்ளது.
இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில் முதல் ஆன்மிக ஆல்பம் 'அஷ்ட ஐயப்ப அவதாரம்'!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் 225 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றவர், இசையமைப்பாளர் வித்யாசாகர். முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிப்பாடல்கள் முதல், காலத்தால் அழியாத பல அற்புதமான மெலடி பாடல்களைத் தந்து, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த வித்யாசாகர், முதன் முறையாக ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
சுயாதீன ஆல்பங்கள், திரைப்பட பாடல் இசை, ஆன்மீக ஆல்பம் என இந்திய இசைத்துறையில் கோலோச்சும் முன்னணி இசை நிறுவனமான
சரிகமா நிறுவனம் இந்த “அஷ்ட ஐயப்ப அவதாரம்” இசை ஆல்பத்தினை வெளியிட்டுள்ளது.
“அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தின் 10 பாடல்களுக்கும் வித்யாசாகர் இசையமைக்க, முன்னணி நட்சத்திர பாடகர்கள் சித்ரா, ஷங்கர் மகாதேவன், ஹரிசரண், விஜய் பிரகாஷ், புஷ்பவனம் குப்புசாமி முதலாக பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.
இந்த பாடல்களின் ஆடியோ வடிவம் வெளியாகி, இசை தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வீடியோ வடிவில் இது வரை 4 பாடல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான “கருப்பு வராரு” வீடியோ பாடலில், தினேஷ் மாஸ்டர் நடனமைக்க, இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நடனமாடியுள்ளார்.
“அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பம் பாடல் விபரம்
1.அஷ்ட ஐயப்ப அவதாரம்
வித்யாசாகர், திருப்புகழ் மதிவண்ணன், விஜய் பிரகாஷ்
2.காடேரி மலையேரி வித்யாசாகர், முரளிகிருஷ்ணன் ரங்கன்
3.தங்கத்திலே வீடு கட்டி
வித்யாசாகர், கே.எஸ்.சித்ரா
4.அய்யனே
வித்யாசாகர், சந்தீப் நாராயண்
5.ஹரி ஓம்
வித்யாசாகர், விஜய் பிரகாஷ், டாக்டர் கிருத்தியா
6.கருப்பு வராரு
வித்யாசாகர், சங்கர் மகாதேவன், டாக்டர் கே.பி. வித்தியாதரன்
7.கண்ட கண்ட
வித்யாசாகர், ஹரிசரண், நெல்லை ஜெயந்தா
8.துள்ளி வரகுது வேல்
வித்யாசாகர், அபிநயா செண்பகராஜ், மாளவிகா ராஜேஷ், சுஷ்மிதா நரசிம்மன், அபர்ணா நாராயணன், வாலி
9.வில்லாளி வீரனே
வித்யாசாகர், புஷ்பவனம் குப்புசாமி, டாக்டர் கிருத்தியா
10.பம்பா கணபதி
வித்யாசாகர், மது பாலகிருஷ்ணன், பா.விஜய்
கீழ்காணும் லிங்கில் அனைத்து பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம்.
https://linktr.ee/ashtaayyappaavatharam
பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள 'திரு.மாணிக்கம்' வெளியீடு அறிவிப்பு!
“எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக "தேவைக்கு கிடைக்காததும்... தேவைக்கு அதிகமாக கிடைக்கிறதும்...
எப்பவுமே ஒரு வலிதான்..." என பாரதிராஜா குறிப்பிடும் வசனம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தி வைரலாகி கொண்டு வருகிறது.
திரு.மாணிக்கம் படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் பெருவாரியான திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.
மேலும் ZEE தொலைக்காட்சி நிறுவனம் திரைக்கு வரும் முன்னரே திரு.மாணிக்கம் திரைப்படத்தை பார்த்து இதயம் கரைந்து இந்தப் படம் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற படமாகவும் மனதை நெகிழவைக்கும் படமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து, திரு.மாணிக்கம் திரைப்படத்தின் OTT மற்றும் SATELLITE உரிமையை வாங்கி உலகமெங்கும் வெளியிடவிருக்கிறார்கள்...
‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி திரு.மாணிக்கம் திரைப்படத்தை விறுவிறுப்பான திரைக்கதையாக எழுதி இயக்கியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார்.
ஆதங்கம்... ஆற்றாமை... தவிப்பு... தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன் அனன்யா, தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன், இரவின் நிழல் சந்துரு..ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள்.
‘சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்திலும் கவரவிருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட இசைகலைஞர்களை வைத்து ஹங்கேரியில் பின்னணி இசையை இரவு பகல் பாராது உயிரோட்டத்துடன் உருவாக்கியுள்ளார்.
பாடலாசிரியர்கள் சினேகன், ராஜு முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான இத்திரைப்படத்தை ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து தயாரித்துள்ளனர்.
'மெட்ராஸ்காரன்' திரைப்பட இரண்டாவது சிங்கிள்' காதல் சடுகுடு' பாடல் வெளியீட்டு விழா!
SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெளியீட்டு விழா, தனியார் மாலில், மக்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது.
ஆடல், பாடல், நடனம் மற்றும் மேஜிக் ஷோ என மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில்…
இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது…
மிக மிகச் சந்தோசமாக இருக்கிறது. படம் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டது. விரைவில் உங்களை மகிழ்விக்கத் திரையில் இப்படத்தைக் கொண்டு வருகிறோம். இந்தப்படம் ஆரம்பமாக மிக முக்கிய காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு நன்றி. சதீஷ் மாஸ்டர், அருமையாக வேலை பார்த்துத் தந்ததற்கு நன்றி. எடிட்டர் வசந்த் பார்க்க சின்னப்பையன் போல இருப்பார், ஆனால் அருமையாக வேலை பார்த்துள்ளார். ஷேன் நிகாம், நிஹாரிகா இருவரும் பெரும் ஒத்துழைப்பு தந்தனர், இருவருக்கும் நன்றிகள். தயாரிப்பாளர் ஜகதீஸ் என் மீது நம்பிக்கை வைத்து முழுதாக கதை கேட்காமல் தயாரித்தார் அவருக்கு நன்றி. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.
டான்ஸ் மாஸ்டர் சதீஷ் பேசியதாவது…
மிக மகிழ்ச்சியாக உள்ளது. எப்போதும் கோரியோகிராஃபராக என் வேலை கேமராவுக்கு பின்னால் முடிந்து விடும். பல வருடங்களுக்குப் பிறகு, கோரியோகிராஃபராக மேடை ஏறியுள்ளேன். மெட்ராஸ்காரன் படக்குழுவிற்கு நன்றி. காதல் சடுகுடு பாடல் இனிமையான அனுபவம். இந்தப் பாடலுக்கு கல்லூரி காலத்தில் நடனமாடியுள்ளேன், இந்த பாடலை ரீமேக் செய்ய வேண்டும் என சொன்ன போது, மகிழ்ச்சியாக இருந்தது. ஷேன் நிகாம் ரசிகன் நான், மனிதர் எப்படி இப்படியெல்லாம் நடிக்கிறார் என வியந்திருக்கிறேன். அவர் இந்தப்பாடலில் இருக்கிறார் என்பது மகிழ்ச்சி. நிஹாரிகாவும் மிக அருமையாக ஒத்துழைத்தார். என்னிடம் இருந்த ஐடியாவை பிரசன்னா மிக அட்டகாசமாக எடுத்து தந்தார். பாடல் பார்த்து எல்லோரும் பாராட்டுகிறார்கள். இயக்குநர் மிகவும் ஆதரவாக இருந்தார். தயாரிப்பாளர் ஜகதீஸ் பட்ஜெட்டை மீறி இப்பாடலுக்காகச் செலவு செய்தார். பிருந்தா மாஸ்டர், மணிரத்னம் சார் என ஜாம்பவான்கள் செய்த பாடல், அவர்களுக்கு அர்ப்பணிப்பாக இந்த பாடல் செய்துள்ளோம். எனக்குப் பெரிய சம்பளம் தந்துள்ளார் தயாரிப்பாளர். இந்தப்படத்தை மிகவும் நம்புகிறார். கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றிகள்.
நடிகர் கலையரசன் பேசியதாவது…
இங்குள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நாம் எல்லாப்படத்திலும் உண்மையாக அர்ப்பணிப்போடு உழைப்போம், ரசிகர்கள் தரும் ஆதரவு தான் நாம் நடிகர்களாக வெற்றி பெறுகிறோம். தயாரிப்பாளர் ஜகதீஸ் நல்ல மனசுக்காரர், அவருக்காக இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். ஷேன் டார்லிங், நிஹாரிகா சூப்பராக நடித்துள்ளனர். ஐஸு இந்தப்படத்தில் வித்தியாசமான ரோல் செய்துள்ளார். டைரக்டர் வாலிக்கு நன்றி. இந்தப்படத்தில் எல்லோரும் சின்சியராக உழைத்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.
நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…
SR PRODUCTIONS என்னுடைய புரடக்சன் மாதிரி தான். இந்த புரடக்சன் ஆரம்பித்த நாட்களிலிருந்து உடன் இருந்துள்ளேன். ஜகதீஸ் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். அவரது மனதுக்கு இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என நம்புகிறேன். நான் ஒரு நல்ல நடிகையாகப் பெயரெடுக்க, வாலி ஒரு நல்ல வாய்ப்பை தந்துள்ளார். ஷேன் நிகாம் அவருக்கு இங்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நிஹாரிகாவுக்கு வாழ்த்துக்கள். வாலி மிகப்பெரிய டைரக்டராக வர வாழ்த்துக்கள். அலைபாயுதே என் ஃபேவரைட் ஃபிலிம், இந்தப்பாடலைத் தந்த மணிரத்னம் சார், ஏ ஆர் ரஹ்மான் சார், சரிகமாவிற்கு நன்றி. இந்தப்பாடல் எங்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.
நடிகை நிஹாரிகா பேசியதாவது...
எல்லோருக்கும் நன்றி. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. எனது கனவு நனவாகியிருக்கிறது. மணி சார் மாதிரி ஜாம்பவான் செய்த பாடல் எங்களுக்குக் கிடைத்தது வரம். என்னை ஆட வைத்த சதீஷுக்கு நன்றி. பாடல் அழகாக வரக் காரணம் ஜகதீஸ் சார் தான் அவருக்கு நன்றி. வாலி சார் இந்தப்படத்தை என்னை நம்பி தந்ததற்கு நன்றி. எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது, ஆனால் பாடல் பார்த்து பாராட்டுக்கள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் படம் உங்களை மகிழ்விக்கும் நன்றி.
நடிகர் ஷேன் நிகாம் பேசியதாவது...
தயாரிப்பாளர் ஜகதீஸுக்கு நன்றி. மலையாளத்தில் நிறையத் தயாரிப்பாளர்களுடன் வேலை பார்த்துள்ளேன். ஆனால் யாரும் இவர் அளவு ஒத்துழைப்பு தந்ததில்லை நன்றி. சதீஷ் , என்னை ஆட வைத்ததற்கு நன்றி. நிஹாரிகா நல்ல ஒத்துழைப்பு தந்தார். வாலி மோகன் தாஸ் இந்தப்படம் தந்ததற்கு நன்றி. தமிழ்ப் படங்களின் ரசிகன் நான், என் முதல் தமிழ்ப்படம் இது, கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்தப்படம் பிடிக்கும் நன்றி.
தயாரிப்பாளர் B.ஜகதீஸ் பேசியதாவது…
என் தாய் தந்தைக்கு முதல் நன்றி. பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. எங்களுக்கு இந்த பாடலைத் தந்த ஏ ஆர் ரஹ்மான் சார், மணிரத்னம் சார், சரிகமா நிறுவனத்திற்கு நன்றி. இந்தப்பாடலுக்கு யாரை டான்ஸ் மாஸ்டராக போடலாம் என்ற போது சதீஷ் தவிர யாரும் ஞாபகத்திற்கு வரவில்லை. அவர் பாடல் கேட்டு விட்டு இந்தப்பாடல் பயங்கர ஹிட்டாகும் நானே செய்கிறேன் என்றார். நான் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாகச் செய்தார், ஆனால் அவர் செய்த விஷுவல் பார்த்த போது ஏன் இந்த பட்ஜெட் வந்தது எனத் தெரிந்தது. பிரசன்னா அவரும் அருமையான விஷுவல் தந்துள்ளார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஷேன் நிகாம் தயாரிப்பாளரிடம் இவ்வளவு நெருக்கமாக ஒரு ஆக்டர் இருப்பாரா எனத் தெரியவில்லை, நான் எப்போது கொஞ்சம் சோகமாக இருந்தாலும் உடனே உற்சாகப்படுத்துவார். இந்தப்படம் வந்த பிறகு தமிழில் மிக முக்கியமான நடிகராக இருப்பார். கலை பிரதர் உரிமையாகப் பழகுவார். மெட்ராஸ் அன்பு மாதிரிதான் நிஜத்திலும், நிறையக் கஷ்டப்பட்டிருக்கிறார். இப்படத்தில் துரை சிங்கமாகக் கலக்குவார். நிஹாரிகா மேடம் பெரிய புரடியூசர் ஆகிவிட்டார். மிகவும் அன்பானவர். இந்தளவு டான்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கவில்லை. மிக நன்றாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா மிகச்சிறந்த நண்பர், நான் வெற்றி பெற வேண்டுமென மனதார நினைப்பவர். எனக்கா நிறைய உழைத்துள்ளார். வாலி மோகன் தாஸ் கதை சொன்ன போதே பிடித்தது. மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். இந்தப்படம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும். பல தடைகளைக் கடந்து தான் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறேன். இதே மவுண்ட் ரோட்டில் டீ வித்திருக்கிறேன். இப்போது தயாரிப்பாளராக மாறியுள்ளேன். கண்டிப்பாக இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் கலையரசன் முதன்மைப் பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.
ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைக்கிறார்.
பெரும் பொருட்செலவில், உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜகதீஸ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
திருநங்கைகளை பற்றி அழுத்தமாக பேசும் படைப்பாக 'சைலண்ட்' படம் வந்திருப்பது அழகு
SR Dream Studios சார்பில், S.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், சமயமுரளி திரைக்கதை வசனத்தில் இன்று தமிழகமெங்கும் வெளியாகியிருக்கும் திரைப்படம் சைலண்ட்.
முழுக்க புதுமுகங்கள் பணியாற்றியிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தருகிறது.
ஒரு பெண் கொலையில் படம் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. இதன் புவனேஸ்வரி எனும் பெண் இருப்பதாக நம்புகிறார் போலீஸ் ஆனால் அது புவனேஷ் எனும் ஆண் என்பது தெரிய வருகிறது. அவனைப் போலீஸ் பிடித்ததா? அந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன ? என்பது தான் சைலண்ட் திரைப்படம்.
சமூகத்தில் ஒரு பாலினம் கைவிடப்பட்டிருக்கிறதா? என்ன தான் நவீன சமூகமாக மாறினாலும், திருநங்கைகளை நாம் பார்க்கும் பார்வை பெரிதாக மாறவில்லை அதை அழுத்தமாக பேசும் படைப்பாக சைலண்ட் படம் வந்திருப்பது அழகு.
இயக்குநர் கணேஷா பாண்டி மிக அழுத்தமான களத்தை தேர்ந்தெடுத்து சுவாரஸ்யம் குறையாமல் படத்தை தந்துள்ளார். முதல் பட சிக்கல்கள் குறைகள் தாண்டி ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை படம் தருகிறது.
ஒரு கொலை அதை தொடர்ந்து விசாரணை என அடுத்தடுத்த கொலை, என விரியும் திரைக்கதையை அறிமுகப்படத்திலேயே அட்டகாசமாக எழுதி அசத்தியுள்ளார் சமய முரளி. போலீஸ் கதாப்பாத்திரத்தில் அவரது நடிப்பு அசத்தலாக உள்ளது.
இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே கதாப்பாத்திரத்தில் வெளிப்படுத்தும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டியே நடித்துள்ளார், இயக்கத்தை விட அவர் நடிப்பு பிரமாதம்.
மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து என எல்லோரும் கதாப்பாத்திரத்திற்கான உழைப்பத் தந்துள்ளார்கள்.
குறைந்த படெஜெட் என்றாலும் சேயோன் முரளி ஒளிப்பதிவு படத்தை ஈடு செய்கிறது. எடிட்டிங் ஓகே.
இசை சமயமுரளி செய்துள்ளார் ஆச்சரியம் முதல் படம் போல தெரியவில்லை, பாடல்கள் தேர்ந்த இசையமைப்பாளர் இசையமைத்தது போல உள்ளது. மூன்று பாடல்களுமே ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசையும் அட்டகாசம்.
படத்தில் கதை திரைக்கதையில் எந்த ஓட்டையும் இல்லை, ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் உருவாக்கத்தில் ஆரம்ப கட்ட தடுமாற்றங்கள் தெரிகிறது. அதை சரி செய்து, இன்னும் மெருகேற்றியிருக்கலாம்.
தமிழ் சினிமாவுக்கு புதிதான திரில்லர் இல்லையென்றாலும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியைத் தரும் டீசண்டான திரில்லர் படம்.
கண்டிப்பாக ரசிகர்கள் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.
நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது
பழம்பெரும் நடிகர் நந்தமுரி தாரக ராம ராவின் பேரனும், நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகனுமான நந்தமுரி மோக்ஷக்யா, தனது சமீபத்திய பிளாக்பஸ்டர் ஹனுமான் மூலம் அறியப்பட்ட கிரியேட்டிவ் ஜெம் பிரசாந்த் வர்மா இயக்கும், ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் அறிமுகமாகிறார். மோக்ஷக்யாவின் முதல் படம் பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (PVCU) ஒரு பகுதியாக இருக்கும்.
மோக்ஷக்யா இப்படத்திற்காக நடிப்பு, சண்டை மற்றும் நடனம் ஆகியவற்றில் விரிவான பயிற்சியைப் பெற்று வருகிறார், இந்நிலையில் மோக்ஷக்யா, ஸ்டைலான தோற்றத்தில் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்கும் புதிய ஸ்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டைலான செக்கர்ஸ் சட்டை அணிந்து, நீண்ட, கச்சிதமாக ஸ்டைல் செய்யப்பட்ட முடி மற்றும் தாடியுடன், அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அவரது நேர்த்தியான தோற்றம் அவர் தெலுங்குத் திரையுலகில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக வலம் வருவார் என்பதைக் காட்டுகிறது.
மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை எஸ்.எல்.வி சினிமாஸின் சுதாகர் செருகூரி, லெஜண்ட் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறார், M தேஜேஸ்வினி நந்தமுரி இப்படத்தை வழங்குகிறார். மோக்ஷக்யாவின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்ட இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பழங்கால புராண இதிகாசத்தின் அடிப்படையில் உருவாகும் இப்படம், தற்போது முன் தயாரிப்பு பணிகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளது.
இந்த பிரம்மாண்ட திரைப்படத்தின் மற்ற விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.
கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்து பொங்கல் வெளியீடாக வரும் 'தருணம்'!
'தேஜாவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கியுள்ள தருணம் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பால சரவணன், ராஜ் அய்யப்பன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராஜா பட்டார்ஜி ஒளிப்பதிவாளராகவும், அருள் சித்தார்த் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ள இப்படத்திற்க்கு தர்புகா சிவா பாடல்களுக்கான இசையும், அஸ்வின் ஹேமந்த் பிண்ணனி இசையும் மேற்கொண்டுள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது வரும் 2025 பொங்கல் வெளியீடாக இப்படம் வெளியிடவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!
முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யாவின் அடுத்த மெகா என்டர்டெய்னர் படமான 'சூர்யா 45' படத்தின் பூஜை, இன்று ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவிலில், இனிதே நடை பெற்றது.
அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் மற்றும் ஓக்கே ஓக்க ஜீவிதம் போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை, நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். அனைவரும் ரசிக்கும்படியான, காமெடி கலந்த ஆக்ஷன் என்டர்டெய்னராக, இப்படம் உருவாகவுள்ளது. முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழு இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். இது தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
இன்றைய பூஜைக்குப் பிறகு, ஆர்ஜே பாலாஜி கோயம்புத்தூரில் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்தவுள்ளார். இப்படப்பிடிப்பில், சூர்யா மற்றும் பிற முன்னணி நடிகர்கள் இடம்பெறும் முக்கிய காட்சிகளைப் படமாக்கவுள்ளனர்.
இப்பிரம்மாண்ட திரைப்படத்தை, தயாரிப்பாளர்கள் எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
- உலக செய்திகள்
- |
- சினிமா