சற்று முன்
சினிமா செய்திகள்
Updated on : 01 January 1970
சமீபத்திய செய்திகள்
வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரைத்துறையில் நடிகராக வலம் வரும் ரிச்சர்ட் ரிஷி, சவாலான கதைகளையும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து, தனது நடிப்புத் திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். காதல் நாயகனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், காலப்போக்கில் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்துத் தனக்கென ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளார்.
அந்த வரிசையில், இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுத் திரைப்படமான ‘திரௌபதி 2’ ரிச்சர்ட் ரிஷியின் திரை வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயன் என்ற வரலாற்றுப் பாத்திரத்தில், இதுவரை ரசிகர்கள் காணாத வீரத் தோற்றத்தில் அவர் திரையில் தோன்றவுள்ளார். ஜனவரி 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், இந்த அனுபவம் குறித்து ரிச்சர்ட் ரிஷி தனது மனதாரப் பகிர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
நடிகர் ரிச்சர்ட் ரிஷி கூறியதாவது,
"திரௌபதி 2" படத்தில் மன்னர் வீர சிம்ம கடவராயனாக நடித்திருப்பது என் வாழ்க்கையின் முக்கிய திருப்புமுனை. இது வெறும் நடிப்பு அல்ல; தமிழ்நாட்டில் ரத்தம் சிந்திய வீரமும் தியாகமும் நிறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்திருக்கும் அனுபவம். இயக்குநர் மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ சினிமா என்பதைத் தாண்டி வரலாற்றின் மறுபிறப்பாக உள்ளது. ’திரௌபதி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் பணியாற்றுவது, நம்பிக்கையுள்ள தளபதியுடன் மீண்டும் போர்க்களம் சென்ற அனுபவம் போல இருந்தது” என்றார்.
மேலும் பகிர்ந்து கொண்டதாவது, “இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசை பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாகப் பதிவு செய்கிறது. ஆக்ஷன் சந்தோஷ் அமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி ஆகியோருடன் இணைந்து நடித்தது ஒவ்வொரு காட்சியையும் மேலும் சிறப்பாக்கியுள்ளது. ‘திரௌபதி 2’ வரலாற்று திரைப்படம் என்பதைத் தாண்டி, நம் முன்னோர்களின் மறைக்கப்பட்ட போர்க்குரலை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு வரலாற்றுப் பயணம். நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், தலைமுறைகள் கடந்து ஒலிக்கும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்றுக் காவியமாக இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை கட்டிப்போடும் அனைத்து அம்சங்களுடனும் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், வரலாற்றுத் திரைப்படம் என்பதைத் தாண்டி, நம் முன்னோர்களின் மறைக்கப்பட்ட போர்க்குரலை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு காவியப் பயணமாக உருவாகியுள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை கட்டிப்போடும் அனைத்து வணிக மற்றும் உணர்ச்சி அம்சங்களுடனும் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’, தலைமுறைகள் கடந்தும் பேசப்படும் தமிழ் சினிமாவின் மிகத் துணிச்சலான வரலாற்றுக் காவியங்களில் ஒன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு
இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகி வரும் கிராமியப் பின்னணியிலான கமர்சியல் திரைப்படமான ‘அறுவடை’ படத்தின் படப்பிடிப்பு, அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் நாளில் கோயம்புத்தூரில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக இயக்குநர் எம். கார்த்திகேசன் நடித்துள்ளதுடன், அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக சிம்ரன் ராஜ் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடித்துள்ளார். இவர்களுடன் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக ரகு ஸ்ரவண் குமார், இசையமைப்பாளராக ஆனந்த், படத்தொகுப்பாளராக கே. கே. விக்னேஷ் பணியாற்றியுள்ளனர். பாடல்களை கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன் மற்றும் கானா சக்தி எழுதியுள்ளனர்.
கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம், பண்பாடு மற்றும் பாரம்பரியங்களை உணர்வுப்பூர்வமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தை, எம். கே. ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரித்து வருகிறார்.
‘அறுவடை’ திரைப்படத்தின் சார்பில் கோயம்புத்தூரில் பொங்கல் விழாவை பாரம்பரிய முறையில் உற்சாகமாகக் கொண்டாடியதுடன், அதே நாளில் படப்பிடிப்பையும் முழுமையாக நிறைவு செய்துள்ளனர். அறுவடைத் திருநாளில் படப்பிடிப்பு முடிவடைந்தது, படக்குழுவினருக்கு ஒரு நல்ல தொடக்கத்தின் அடையாளமாகவும், படத்தின் வெற்றிக்கான நல்ல முன்னறிவிப்பாகவும் கருதப்படுகிறது.
கிராமிய மணம் கமழும் கதை, வணிக அம்சங்கள் மற்றும் உணர்ச்சிப் பூர்வமான காட்சிகள் இணைந்து உருவாகும் ‘அறுவடை’ திரைப்படம், ரசிகர்களிடையே தற்போதே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
'' ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு 'அறுவடை' என பெயரிட்டிருக்கிறோம். விரைவில் படத்தை வெளியிட உள்ளோம் " என்றார்.
300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி
உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி பிரம்மாண்டமான பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைப் பெற்றுள்ள ‘மான சங்கர வர பிரசாத் (MSG)’ திரைப்படம், தெலுங்கு திரையுலகில் புதிய வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. மிகக் குறுகிய காலத்திலேயே இந்த இலக்கை எட்டிய முதல் தெலுங்குத் திரைப்படமாக இது அமைந்துள்ளது.
வட அமெரிக்காவில் மட்டும் 3 மில்லியன் டாலர் வசூல் என்ற மைல் கல்லைக் கடந்து, மெகா ஸ்டார் சிரஞ்சீவி – இயக்குநர் அனில் ரவி புடி கூட்டணியில் இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய வசூல் சாதனை படமாக MSG உருவெடுத்துள்ளது. வெளியான எட்டாவது நாளிலும் வலுவான வசூலை பதிவு செய்த இப்படம், பெரும் முன்பதிவுகளின் ஆதரவுடன் ஒன்பதாவது நாளில் கூடுதல் வேகத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே பல சாதனைகளை முறியடித்துள்ள இந்த திரைப்படம், தொடர்ந்து புதிய சாதனைகளை நோக்கி பயணித்து வருகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் பின்னணியில், வசூல் கணக்குகளை விட ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் படக்குழுவினரின் உழைப்பையே முக்கியமாக பேசும் விதமாக, மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது இதயம் கனிந்த – உணர்ச்சி பூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளார். அதன் மூலம் தெலுங்கு ரசிகர்களுடனான தன்னுடைய பிரிக்க முடியாத பிணைப்பை அவர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
'மெகா ஸ்டார் 'சிரஞ்சீவியின் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது...
''நமது எம் எஸ் ஜி யின் இந்த பிரம்மாண்டமான வெற்றியை பார்க்கும் போது என் இதயம் நன்றியுணர்வால் நிரம்புகிறது. நான் எப்போதும் உங்கள் அன்பின் விளை பொருள் என்று கூறி வருகிறேன். இன்று நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள்.
இந்த சாதனை தெலுங்கு ரசிகர்களுக்கும், அன்பான விநியோகஸ்தர்களுக்கும், பல தசாப்தங்களாக எனக்கு துணையாக நிற்கும் எனது அன்பான மெகா ரசிகர்களுக்கும் சொந்தமானது. திரையரங்குகளில் நீங்கள் எழுப்பும் ஆரவாரமே என்னை முன்னோக்கி செல்ல வைக்கும் ஆற்றல். சாதனைகள் வரும். போகும். ஆனால் நீங்கள் என் மீது பொழியும் அன்பு ...என்றென்றும் நிலைத்திருக்கும்.
இந்த பிளாக் பஸ்டர் வெற்றி நமது அனில் ரவி புடி - தயாரிப்பாளர்களான சாஹூ மற்றும் சுஷ்மிதா ஆகியோருடனான முழு படக் குழுவினரின் கடின உழைப்பிற்கும், என் மீது நீங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் ஒரு காணிக்கையாகும். இந்த கொண்டாட்டத்தை தொடர்வோம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்''.
இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சி அலைகளை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின்னால் இருக்கும் கூட்டு உழைப்பையும், ரசிகர் – நட்சத்திர உறவின் ஆழத்தையும் சிரஞ்சீவியின் இந்த வார்த்தைகள் மீண்டும் நினைவூட்டுகின்றன.
சாதனைகள் மாறக்கூடும், ஆனால் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையேயான அன்பு – எப்போதும் நித்யமானதே.
சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “மை லார்ட்” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. முன்னணி இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார் மற்றும் வசுமித்ரா போன்ற பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவை நீரவ் ஷா, இசையமைப்பை ஷான் ரோல்டன், பாடல்களை யுகபாரதி, கலை இயக்கத்தை முனி பால்ராஜ், படத்தொகுப்பை சத்யராஜ் நடராஜன், ஆடை வடிவமைப்பை டி. ஆர். பூர்ணிமா, நடனத்தை எம். ஷெரீப், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட் மேற்பார்வை எடுத்து உள்ளனர்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்து வழங்கும் இந்த படத்தில், அரசியல் ஆதிக்கத்தில் சிக்கி வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திய காட்சிகள் டிரெய்லரில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. சிறுநீரக திருட்டு சம்பவம், ஜனநாயக உரிமைகள், சசிகுமார் வசனங்கள் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜு முருகன் மற்றும் தொடர்ச்சியான வெற்றிபெற்ற படங்களை வழங்கிய சசிகுமார் ஆகியோர் முதன்முறையாக இணைந்த இந்த படம், டிரெய்லர் மட்டுமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் குரலில் அரங்கேற்றப்பட்ட திருவாசகத்தின் முதல் பாடல்!
தமிழ் ஆன்மிக இசையின் பெருமையை மீண்டும் கொண்டு வரும் திருவாசகம் புதிய இசை வடிவில் ரசிகர்களை கவர்கிறது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்தப் பாடல், வரும் ஜனவரி 22 அன்று அவரது அதிகாரப்பூர்வ YouTube சேனலில் வெளியிடப்படுகிறது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட பாடல், நேரடியாக நிகழ்ச்சியினை ரசிக்கும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
பாரம்பரிய ஆன்மிகத்தையும் நவீன இசை மொழியிலும் இணைத்த ஜி.வி. பிரகாஷ், திருவாசகத்தின் ஆழமான பக்தி உணர்வை இன்றைய தலைமுறைக்கும் எளிதில் உணரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு. இந்த முதல் பாடல் அந்த கனவின் ஆரம்பப் படியாகும். பிரதமர் மோடி அவர்களின் பாராட்டையும் பெற்ற பாடல், ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.

நகரின் சுழற்சியும் குடும்ப உறவுகளும் கலந்த “கான் சிட்டி” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களும் குடும்ப உணர்வுகளும் கலந்த படைப்புகள் தொடர்ந்து வெளிவருவதில், புதிய “கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களை கவர உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார், இது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
படத்தில் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, வடிவுக்கரசி, மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
போஸ்டர் நகர பின்னணியில் நிகழும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் உணர்வுகளை நெருக்கமாகக் காட்டுகிறது. அர்ஜூன் தாஸ் ஹேண்ட் பேக்குடன், அன்னா பென் அவரைச் சுற்றி, யோகிபாபு பயணப்பெட்டி உடன், மற்றும் குழந்தை அகிலன் வெற்றிக் கோப்பையுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் படத்தின் காமர்ஷியல் மற்றும் குடும்ப மனதை வெளிப்படுத்துகிறது.
Power House Pictures தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்குகிறார். படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்து, மங்களூர், சென்னை, மும்பை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் திட்டத்தில் உள்ளது. புதிய தலைப்பு மற்றும் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ரசிகர்களுக்கும் திரை ஆர்வலர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“VVVSI.com” கட்டணமில்லா வேலைவாய்ப்பு இணையதளம் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார்
கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும், மேலும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களிலும், இளைஞர்களுக்கு நம்பிக்கை மற்றும் எதிர்கால நிச்சயம் வழங்கி வரும் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம், இன்று ஒரு புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. வேலை தேடும் இளைஞர்களையும், வேலை வழங்கும் நிறுவனங்களையும் கட்டணமின்றி ஒரே தளத்தில் நேரடியாக இணைக்கும் VVVSI.com என்ற புதிய வேலைவாய்ப்பு இணையதளம் மதுரையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இந்த இணையதளத்தை சமூக அக்கறை மற்றும் மனிதநேயப் பொறுப்புடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொடங்கி வைத்தார். அவர் நிகழ்வில் கூறியதாவது:
“ஒரு இளைஞனுக்கு வேலை கிடைப்பது அவன் குடும்பத்தின் எதிர்காலத்தை மாற்றும். அந்த மாற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் கட்டணமின்றி உறுதியான பாலமாக இருந்து வருகிறது.”
கடந்த 10 ஆண்டுகளில், இந்த இயக்கம் 34,000-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, 2.17 லட்சம் இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை வழங்கி, பல குடும்பங்களில் பொருளாதார நிலைத்தன்மையும், சமூக முன்னேற்றமும் உருவாக்கியுள்ளது.
இணையதள தொடக்க நிகழ்வில், இயக்கத்தின் ஊழியர்கள், தன்னார்வலர்கள், அறங்காவலர்கள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஒருங்கிணைப்புகளை இயக்கத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் வீரராஹவன் முன்னிட்டு நடத்தினார்.
இந்த புதிய இணையதளம், வள்ளலார் வழியிலான மனிதநேயம், கருணை, சமத்துவம் மற்றும் சேவை மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டு, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் புதிய வாசலாக திகழும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் உறுதியான நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விஜய் சேதுபதி, பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியான “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக்
விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர், ஜே.பி. நாராயண் ராவ் கொண்ட்ரோலா, பூரி கனெக்ட்ஸ், ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் (JB Motion Pictures’ Film ) இணையும் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா முயற்சி #PuriSethupathi, திரைப்படம், ஸ்டைலிஷ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் அதிரடி கூட்டணியில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Motion Pictures நிறுவனத்தின் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா (JB Narayan Rao Kondrolla) இணைந்து தயாரிக்கிறார்.
விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று வெளியிட்டுள்ளது. “ஸ்லம் டாக்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு “33 டெம்பிள் ரோடு” என்ற டேக்லைன் வழங்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், கலைந்த முடி மற்றும் தாடியுடன், பிச்சைக்காரன் உடையில், நீளமான ஸ்கார்ஃப் மற்றும் பூட்ஸ் அணிந்து, மங்கலான வெளிச்சம் மற்றும் பனிமூட்டம் சூழ்ந்த குடிசைப் பகுதியில், கையில் பெரிய கதையை பிடித்தபடி, சுற்றிலும் பணக்கட்டுகள் பறக்கும் நிலையில் விஜய் சேதுபதி ஒரு வெறித்தனமான அவதாரத்தில் தோன்றுகிறார். இந்த டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் இப்படத்தின் ஆக்சன் எண்டர்டெய்னர் தன்மைக்கு, பெரும் ஹைப்பை உருவாக்குகின்றன.
தன் நாயகர்களை தனித்துவமான மேக்கோவர்களுடன் மாஸாக உருவாக்குவதில் பெயர் பெற்ற பூரி ஜெகன்னாத், இந்த படத்திலும் அதை நிரூபித்துள்ளார். விஜய் சேதுபதி, இதுவரை தனது திரை வாழ்க்கையில் முயற்சிக்காத, முற்றிலும் புதிய ஒரு பாத்திரத்தில் இப்படத்தில் தோன்றுகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.மேலும், பிரம்மாஜி மற்றும் VTV கணேஷ் நகைச்சுவை பாத்திரங்களில் கலக்கியுள்ளனர்.
அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களில் துடிப்பான இசையமைப்பை வழங்கிய தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படம், தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான்-இந்தியா பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
“காந்தி டாக்ஸ்” வார்த்தைகளின்றி உணர்ச்சிகளை உருமாற்றும் புதிய திரைப்பட டீசர் வெளியாகியது
திரைப்பட உலகில் வார்த்தைகள் மட்டுமல்ல, காட்சி, இசை மற்றும் மௌனமும் கதையை உருமாற்ற முடியும் என்பதை நிரூபிக்கும் புதிய முயற்சி – “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ஒரு வசனம் கூட இல்லாமல், தீவிரமான காட்சிகள் மற்றும் மௌன இடைவெளிகள் மூலம் பார்வையாளர்களின் உள்ளத்தை தொடும் விதமாக உருவாக்கப்பட்ட இந்த டீசர், “காந்தி உண்மையில் என்ன பேசப் போகிறார்?” என்ற கேள்வியை தூண்டுகிறது. சொல்லப்படாத விஷயங்கள் மௌனத்தின் மூலம் சக்திவாய்ந்ததாக உணரப்படுகின்றன.
விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் வார்த்தைகள் இல்லாமல், காட்சிகளின் மூலமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமையை டீசரில் நிரூபித்துள்ளனர்.
கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையினால் மௌனத்திற்கும், கதையின் பதற்றத்திற்கும் புதிய உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
Zee Studios வழங்கும் “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தை Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரித்துள்ளனர். 2026 ஜனவரி 30 அன்று உலகமெங்கும் வெளியாகும் இப்படம், மௌனத்தை ஒரு சக்திவாய்ந்த கதையாக்கமாக மாற்றி, பார்வையாளர்களுக்கு புதிய திரையரங்கு அனுபவத்தை தரவுள்ளது.
'ஒளடதம்' படத்திற்குப் பிறகு தனது அடுத்த பயணத்தைத் தொடங்கியுள்ளார் நேதாஜி பிரபு
தமிழ்த் திரையுலகில் அறிமுக கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் ‘ஒளடதம்’ படத்தின் மூலம் தனித்த கவனத்தை ஈர்த்தவர் நேதாஜி பிரபு. மருத்துவ மாஃபியாக்களை மையமாகக் கொண்டு சமூக அக்கறையுடன் பேசப்பட்ட அந்தப் படம், அவரது சினிமா பார்வையின் நேர்மையையும் துணிச்சலையும் வெளிப்படுத்தியது.
‘ஒளடதம்’ படத்திற்குப் பிறகு சிறு இடைவெளி எடுத்திருந்த நேதாஜி பிரபு, தற்போது தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த பயணத்தை தொடங்கும் வகையில் ஒரு அழகிய, பிரமாண்ட போட்டோ ஷூட்டை நடத்தி முடித்துள்ளார். இது வெறும் தோற்ற மாற்றம் அல்ல; அவரது உள்ளார்ந்த தயாரிப்பின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
தனது தோற்றத்திற்காக உடல் எடையைக் கூட்டி, உடலை முறுக்கேற்றி, சுமார் ஓர் ஆண்டாக தாடி வளர்த்து முழுமையான மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். இந்த போட்டோ ஷூட்டில் 15 மணி நேரத்தில் 30 உடைகள் மாற்றி, 8 விதமான ஸ்டைல்களில் 8 மாறுபட்ட தோற்றங்களில் கேமராவை எதிர்கொண்டுள்ளார்.
500-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி, இதுவரை யாரும் செய்யத் துணியாத அளவிலான அர்ப்பணிப்பின் சின்னமாக அமைந்துள்ளது. இதன் மூலம் தமிழ்த் திரையுலகில் தனது அடுத்த கணக்கை தொடங்கும் நம்பிக்கையுடன் நேதாஜி பிரபு களம் இறங்கியுள்ளார்.
எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஏற்று வாழத் தயாராக, உடல், உள்ளம், தோற்றம், ஆர்வம், ஈடுபாடு, அர்ப்பணிப்பு என அனைத்துக் கோணங்களிலும் தன்னை முழுமையாகத் தகுதிப்படுத்திக் கொண்டு வந்துள்ளார்.
சினிமா என்பது அதை காதலுடனும் மரியாதையுடனும் அணுகுபவர்களை ஒருபோதும் கைவிடாது என்பதற்கான அமைதியான சாட்சி இந்த முயற்சி. அலட்சியமாக அல்ல; தகுதியுடன் வந்தவர்களை அது அணைத்துக் கொள்ளும் என்பதை நினைவூட்டும் வகையிலேயே இந்த போட்டோ ஷூட் அமைந்துள்ளது.
இதுவரை கனவுகளைச் சேகரித்தவர், இப்போது அதை வாழ்வாக்கத் தயாராக உள்ளார் என்ற உணர்வை இந்த புகைப்படங்கள் ஏற்படுத்துகின்றன. நேதாஜி பிரபுவின் அயராத உழைப்பும், நம்பிக்கையும், கனவுகளும் ஒன்றிணைந்து உருவான இந்த போட்டோக்கள் தற்போது காட்சி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கவனம் ஈர்த்து வருகின்றன.
- உலக செய்திகள்
- |
- சினிமா













