சற்று முன்
சினிமா செய்திகள்
'ஜிகர்தண்டா 2' குறித்து ராகவா லாரன்ஸுக்கு தனுஷ் போட்ட பதிவுக்கு பதில் அளித்த ராகவா லாரன்ஸ்
Updated on : 09 November 2023

தமிழின் முன்னணி நடிகர், நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி கொண்டாட்டமாக நாளை வெளியாகிறது "ஜிகர்தண்டா 2" திரைப்படம். இப்படத்தைப் பார்த்த நடிகர் தனுஷ் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
முன்னணி நடிகராக மிகச்சிறந்த எண்டர்டெயினராக வலம் வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், தொடர்ச்சியாக குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை கலந்த ஹாரர் படங்கள் மூலம், ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை, தந்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா 2 படத்தில், முதல் முறையாக வழக்கத்திற்கு மாறாக தன் தோற்றம் மேனரிசம் முதல் அனைத்தையும் மாற்றி, வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.
ஜிகர்தண்டா படத்தின் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் எனப் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் நாளை 10.11.2023 தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தினை முன்னதாக பார்த்த நடிகர் தனுஷ், தன் சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தையும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பையும் பாராட்டிப் பதிவு செய்துள்ளார் அப்பதிவில்…
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் பார்த்தேன். @karthiksubbaraj இன் அருமையான படைப்பு, அற்புதமான நடிப்பைத் தருவது @iam_SJSuryahக்கு வழக்கமானதாகிவிட்டது. ஒரு நடிகராக @offl_Lawrence புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். @Music_Santhosh படத்திற்கு அழகு. கடைசி 40 நிமிடம் இந்த திரைப்படம் உங்கள் இதயத்தைத் திருடிவிடும். படக்குழுவினர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் தனுஷின் பதிவையொட்டி நடிகர் ராகவா லாரன்ஸ்
சகோதரரே உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻♥️♥️. உங்களின் கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய ராகவேந்திரா ஸ்வாமியை பிரார்த்திக்கிறேன். என்று நன்றி கூறி பதிவிட்டுள்ளார்.
இரண்டு முன்னணி நடிகர்களின் ஈகோ இல்லாத இந்த உரையாடல்களை, ரசிகர்கள் இணையத்தில் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய செய்திகள்
மலேசியாவில் கோலாகலமாக நிறைவு பெற்றது 'விஜய் சேதுபதி 51' படப் படப்பிடிப்பு!
7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரிப்பில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில், ஆக்சன் காமெடி கமர்சியல் படமாக உருவாக்கப்பட்டு வரும் விஜய் சேதுபதி 51 படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்து அம்சங்களுடன் முழு நீள கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கி வருகிறார்.
இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்படாத பல முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சைனீஸ் சண்டைக்ககலைஞர்களுடன், விஜய் சேதுபதி கலந்துகொள்ள, பிரம்மாண்ட சண்டைக்காட்சியும் சேஸிங் காட்சியும் மலேசியாவில் திரையில் இதுவரை காணாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் மிகப்பிரபலமான பத்துமலை முருகன் கோவிலில், இறுதிக்காட்சியை படமாக்கி, படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது படக்குழு. மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட அனைத்து இடங்களில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு, தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். படம் முழுதும் பயணிக்கக்கூடிய முக்கிய பாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார். இவர்களுடன் பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை ஆர். கோவிந்தராஜ் மேற்கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை 7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது
படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விரைவில் போஸ்ட் புரடக்சன் பணிகளைத் துவங்கவுள்ளது படக்குழு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
'குட் நைட்' கூட்டணியின் அடுத்த பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் ( Youtube சீரிஸ் லிவ்இன் புகழ் ) இயக்கத்தில் குட்நைட் மணிகண்டன் நடித்திருக்கும் “லவ்வர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
ரொமான்ஸ் டிராமாவாக உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், படத்தில் மணிகண்டனின் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் வகையிலும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.
உலகின் ஆதி உணர்வு காதல். ஆனால் எப்போதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு, சிக்கல் மிகுந்ததாகவே இருந்து வருகிறது. இக்கால இளைஞர்களின் உலகையும், ரிலேஷன்ஷிப்பில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களின் காதல் என எல்லாவற்றையும் பற்றி அழகாக பேசும் ஒரு ரொமான்ஸ் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. அனைவரையும் கவரும் வகையில், இப்படத்தை ஒரு கமர்ஷியல் கொண்டாட்டமாக, அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ளார்.
குட்நைட் படம் மூலம் அனைவரையும் கவர்ந்த நடிகர் மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன்லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணாரவி முக்கியவேடத்தில் நடிக்கிறார்.
இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா,படத்தொகுப்பு பரத் விக்ரமன், கலை ராஜ்கமல் பாடல்கள் மோகன்ராஜன் வலிமையான தொழில் நுட்பக்குழு இப்படத்தில் பணியாற்றி வருகின்றனர்.
சென்னை மற்றும் கோவா அருகேயுள்ள கோகர்ணா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு நடத்தியுள்ளது.
முன்னதாக மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் மணிகண்டன் நடித்த குட்நைட் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்நிலையில் இக்கூட்டணி இணையும் இரண்டாவது படம் இதுவென்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நசரேத் பசிலியான், மகேஷ்ராஜ் பசிலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் டீசர், டிரெய்லர் குறித்த அறிவிப்புகளை தயாரிப்பு தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
விஜய் சேதுபதி, இயக்குனர் மிஷ்கின் முதன்முறையாக கைகோர்க்கும் படம் பூஜையுடன் ஆரம்பம்!
சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்து உள்ளார். ட்ரெயின் (Train) திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார்.
இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே ட்ரெயின் (Train) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார், மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்.டிம்பிள் ஹயாதி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் மிஷ்கின் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை V.மாயபாண்டி மேற்கொள்கிறார்.
ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம், புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் கே ஆர்!
திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் கே ஆர், பல புதுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
அவரது வித்தியாசமான முயற்சிகளில் சில பின்வருமாறு: உலகப் புகழ் பெற்ற 'மை டியர் குட்டிச்சாத்தான்'. இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான இது மாபெரும் வெற்றி பெற்றது. குழந்தைகளுக்கான 3டி படமான 'ஸ்பை கிட்ஸ்' அனகிலிஃப் (Anaglif) தொழில்நுட்பத்தில் வெளியாகி பாராட்டுதல்களையும் வெற்றிகளையும் குவித்தது. 'எங்களையும் வாழ விடுங்கள்' திரைப்படம் விலங்குகளை பேச வைத்ததோடு விலங்குகளுக்காகவும் பேசியது. 'உலக நாயகன்' கமல்ஹாசன் நடித்த 'பேசும் படம்' வசனங்களே இல்லாமல் வாழ்த்துகளை அள்ளியது. மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை பறைசாற்றிய 'டான்சர்' உள்ளூர் முதல் சர்வதேச விருதுகளை பெற்றது. இந்த வரிசையில், கே ஆர் வழங்கும் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர் உள்ளிட்டோர் நடிக்கும் 'ஆயிரம் பொற்காசுகள்' திரைப்படத்தை புதுமையான முறையில் வெளியிட கே ஆர் தயாராகி வருகிறார்.
டிசம்பர் 22 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் ரெட் ஜெயண்ட் செண்பகமூர்த்தி மூலமாக இப்படம் வெளியாக உள்ளது. கலகலப்பான நகைச்சுவை திரைப்படமான 'ஆயிரம் பொற்காசுகள்' படத்தின் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம், முதல் நாள் முதல் காட்சிக்கு மட்டுமே இது பொருந்தும் என்று கே ஆர் அறிவித்துள்ளார். இலவச டிக்கெட்டுக்கான கட்டணத்தை விநியோகஸ்தரே ஏற்றுக்கொள்வார்.
இது குறித்து பேசிய அவர், "ஒரு படத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பதே முதல் நாள் முதல் காட்சி தான். பெரிய படங்கள் வியாபார ரீதியில் வசூலை அள்ளும் நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் நல்ல கதையம்சத்துடன் இருந்தாலும் கடந்த ஒரு வருடத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரே வாரத்தில் அதிகளவில் படங்கள் வெளியாவதும் இதற்கு ஒரு காரணம். சிறு பட்ஜெட் படங்களே எடுக்க வேண்டாம் என்று சிலர் கூறி வரும் நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு இதுவல்ல. ஏதாவது செய்து பார்வையாளர்களை எப்படி திரையரங்குகளை வர வைப்பது என்பது குறித்து நாம் யோசிக்க வேண்டும். அதற்கு ஒரு தீர்வாகத் தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்," என்றார்,
தொடர்ந்து பேசிய கே ஆர், "பெரிய படங்கள் வந்து மாபெரும் வெற்றி பெறுவது ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் சிறு திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்றால் தான் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும். இன்று பெரிய இடத்தில் உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறிய படங்களின் மூலம் தங்களது பயணத்தை தொடங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சிறு பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களை புதுமையான முறையில் ஊக்குவிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தின் விளைவாக இந்த முடிவை எடுத்துள்ளேன்," என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கு உரிமையாளர்களுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளதால் இந்த திட்டத்திற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரசிகர்களும் தங்களது மேலான ஆதரவை 'ஆயிரம் பொற்காசுகள்' திரைப்படத்திற்கு வழங்கி திரையரங்குகளில் இப்படத்தை கண்டு ரசித்து மகிழ்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் :ஆயிரம் பொற்காசுகள்' உருவாகியுள்ளது," என்று தெரிவித்தார்.
ஜார்ஜ் மரியான், வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, பவுன்ராஜ், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம், ஜிந்தா மற்றும் ராஜா ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜோகன் இசையமைக்க, பானு முருகன் ஒளிப்பதிவை கவனிக்க, ராம்-சதீஷ் படத்தொகுப்பை கையாள, அசோக் ராஜ் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். கலை இயக்கம்: பி சண்முகம், சண்டை பயிற்சி: ஃபயர் கார்த்திக், சவுண்ட் மிக்ஸிங்: ஏ எஸ் லட்சுமி நாராயணன், சவுண்ட் எஃபெக்ட்ஸ்: ஏ சதீஷ்குமார், பாடல் வரிகள்: நந்தலாலா, கபிலன், தனிக்கொடி, முத்துவேல், டப்பிங்: வெங்கட் சி, பலராம், ஜெமினி ஸ்டுடியோ, ஸ்டில்ஸ்: மோதிலால், டிசைன்ஸ்: சபிர், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
கே ஆர் வழங்கும் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், ஜார்ஜ் மரியான், அருந்ததி நாயர் உள்ளிட்டோர் நடிக்கும் 'ஆயிரம் பொற்காசுகள்' டிசம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முதல் நாள் முதல் காட்சியில் இத்திரைப்படத்தை பார்க்க விரும்புபவர்கள் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என்ற புதுமையான திட்டத்தை முதல் முறையாக கே ஆர் வெளியிட்டுள்ளார்.
அதிரடி ஆக்சன் அதகளத்துடன் வெளியானது பிரபாஸின் 'சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்' டிரெய்லர்!
ஹோம்பாலே பிலிம்ஸ் சலார்: பார்ட் 1 சீஸ்ஃபயர் படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்தே படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது சிறு சிறு அப்டேட்களால் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கி வந்த தயாரிப்பாளர்கள் தற்போது, இறுதியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் அதிரடியான ஆக்சன் மிகுந்த டிரெய்லரை, இரவு 7:19 மணிக்கு வெளியிட்டனர்.
பிரபாஸ் நடிப்பில் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தின் டிரெய்லர் முழுக்க முழுக்க திரில், அதிரடி மற்றும் ஆக்சன் கலந்த பெரிய விருந்தாக வெளி வந்துள்ளது. பிரசாந்த் நீலின் ஆக்ஷன் நிறைந்த உலகத்தைப் பற்றிய ஒரு பரந்த பார்வையை அளிக்கும் இந்த டிரெய்லர், உண்மையிலேயே பார்வையாளர்களாகிய நம் கற்பனையைத் தாண்டி, ஒரு பெரும் உலகைக் காட்டுகிறது. நடிகர் பிரபாஸின் முத்திரையான அதிரடி மாஸ் ஆக்ஷன் என அனைத்தையும் இந்த டிரெய்லர் அட்டகாசமாக காட்சிப்படுத்துகிறது. சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் இந்த ஆண்டின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று டிரெய்லர் உறுதிப்படுத்துகிறது.
ஹோம்பாலே பிலிம்ஸ், சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 22, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.
இங்கிருந்து பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள்!
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டி சீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும் “அனிமல்” திரைப்படம், டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படக்குழுவினர் இந்தியா முழுதும் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று சென்னையில் படக்குழுவினர், தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர்.
இந்நிகழ்வினில்..
தயாரிப்பாளர் பூஷன் குமார் கூறியதாவது..
இது சந்தீப் வங்காவின் படம், அவருடன் கபீர் சிங் படத்தில் இணைந்து வேலை பார்த்தோம். அவர் இந்தக்கதையைச் சொன்ன போது, மிக வித்தியாசமானதாகப் புதுமையானதாக இருந்தது. அவரது திரை உருவாக்கம் பற்றி தெரியும் என்பதால் உடனடியாக இப்படத்தை ஆரம்பித்தோம். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். ரன்பீர், ராஷ்மிகா, பாபி என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர்.
தயாரிப்பாளர் பிரனய் ரெட்டி வங்கா கூறியதாவது..
சந்தீப் மிக இண்டென்ஸான பெர்ஸன் என்பதால் அவருக்கு இண்டென்ஸான படம் செய்யவே பிடிக்கும். அர்ஜூன் ரெட்டி படம் போலவே இப்படத்திலும் கடுமையாக வேலை பார்த்திருக்கிறார். ரன்பீரை இப்படத்தில் புதுமையாகப் பார்ப்பீர்கள். இப்படத்தில் இண்டர்வெல் சீன் 18 நிமிட சண்டைக்காட்சி உள்ளது. தமிழ் டெக்னீசியன்சன் தான் இதில் வேலைப்பார்த்துள்ளார்கள். கண்டிப்பாக ரசிகர்கள் அந்தக்காட்சியைக் கொண்டாடுவார்கள். இப்படம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்
சண்டைப்பயிற்சி இயக்குநர் சுப்ரீம் சுந்தர் கூறியதாவது..
இது என்னோட முதல் இந்திப்படம் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. பூஷன் சார் அவருக்கு நன்றி. ரன்பீர் சார், பாபி சார் உடன் வேலைப்பார்த்தது சவாலாக இருந்தது. அர்ஜுன் ரெட்டி பார்த்த போதே இயக்குநருடன் வேலைப் பார்க்கும் ஆசை வந்தது. தள்ளுமாலா மலையாளப் படம் பார்த்து என்னைக் கூப்பிட்டார்கள். கதையைக் கேட்ட பிறகு ரன்பீர் சார் வைத்து டிரெயினிங் எடுக்க வேண்டும் என்றேன். ஒத்துக்கொண்டு வந்தார்கள் ரன்பீர் அவர்களுக்கு நன்றி. முதல் ஃபைட் 18 நிமிடம் வரும். மிக வித்தியாசமானதாக இருக்கும். இங்கிருந்து பாலிவுட் செல்பவர்கள் மீது நிறைய மரியாதை வைத்துள்ளார்கள். புரடக்சன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் மிகவும் உதவியாக இருந்தார் அவரின் பணி பெரிதாகப் பேசப்படும். சந்தீப் இந்தப்படத்தை மிக வித்தியாசமானதாக எடுத்துள்ளார் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
புரடக்சன் டிசைனர் சுரேஷ் செல்வராஜன் கூறியதாவது..
முதன் முதலில் கதை கேட்கும்போது எனக்கு நிறையச் சவால்கள் இருந்தது. கதையோடு சேர்ந்து மிகவும் உணர்வுப்பூர்வமான ஆக்சன் இருந்தது. படத்தில் வரும் மிஷுன்கன் 4 மாதங்கள் உழைத்து பெரிய பட்ஜெட்டில் உருவாக்கினோம். டிரெய்லர் பார்த்து சிஜியா என நண்பர்களே கேட்டார்கள், முடியாததைத் தான் சிஜி செய்வார்கள், அதனால் அந்த கேள்வி சந்தோஷமாக இருந்தது. இப்படத்தில் ஒவ்வொரு பத்து நிமிடத்திலும் வித்தியாசமான ரன்பீர் இருப்பார். படம் தீ மாதிரி பறக்கும். கண்டிப்பாக ரசிப்பீர்கள் நன்றி.
திரைப்பட விநியோகஸ்தர் திரு முகேஷ் மேத்தா கூறியதாவது..
அர்ஜூன் ரெட்டி படம் எனக்கு மிகவும் பிடித்தது. சந்தீப் ரெட்டி நல்ல கதையுடன் படம் எடுப்பவர், இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்த போதே, இந்தப்படத்தை நான் தான் தமிழில் ரிலீஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்து விட்டேன். புஷ்பா படத்தை முன்பு இது போல் மலையாளத்தில் ரிலீஸ் செய்தோம். அர்ஜூன் ரெட்டி இங்கு தமிழில் நாங்கள் தான் தயாரித்தோம். இந்தப்படத்தின் தமிழ் டப்பிங் சூப்பராக இருக்கிறது. இந்தப்படத்தைக் கண்டிப்பாக இங்குள்ள ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்.
நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது..
இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவம். நானாகக் கதைகள் தேடிப்போவதில்லை, வரும் கதைகளைக் கேட்டுப் பிடிக்கும் கதைகளில் நடிக்கிறேன் அவ்வளவு தான், இந்தப்படம் மிகவும் இண்டென்ஸான படம் . உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி இண்டஸ்ட்ரிக்கு பெரிய வித்தியாசம் இல்லை. இந்தப்படம் பொறுத்தவரை நான் செய்ததில் மிகவும் அழுத்தமான கேரக்டர் இந்தப்படம் தான். எந்த சுகர்கோட்டும் இல்லாத மிக ஒரிஜினலான கேரக்டர் இது. நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரன்பீருடன் வேலை பார்த்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. அவருக்கு நன்றி.
நடிகர் பாபி தியோல் பேசியதாவது..,
நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரன்பீர்கபூர்.அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எப்போதாவது தான் வாழ்க்கை முழுதும் மனதில் நிற்கும் படம் கிடைக்கும். அந்த வகையான படம் இது. இந்தப்படத்தில் சந்தீப் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இப்படத்தில் கதை தான் மிக முக்கியமான ஹீரோ. நல்லவன் கெட்டவன் எல்லாம் இல்லை கதை மிக உணர்வுப்பூர்வமாக இருக்கும், திரையில் நீங்கள் பார்க்கும் போது அதை உணர்வீர்கள். இந்தப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிக தத்ரூபமாக இருக்கும். சிஜி இல்லை எல்லாமே ஒரிஜினல் ஃபைட். மிக கஷ்டப்பட்டு எடுத்துள்ளோம். இரண்டு அனிமல்கள் சண்டைபோட்டுக்கொள்வது போல் இருக்கும். கண்டிப்பாக உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
நடிகர் ரன்பீர் கபூர் கூறியதாவது..
மீண்டும் சென்னையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. நான் இங்கு ஷீட் செய்திருக்கிறேன். எனக்குச் சென்னை ரொம்பப் பிடிக்கும். இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே சந்தீப் இது ரீமேக் இல்லை இது ஒரிஜினல் ஆனால் மிக இண்டென்ஸான படம் என்றார். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கதாபாத்திரத்திற்குத் தயாராவார்கள் என்னைப் பொறுத்தவரை நான் இயக்குநரோடு அதிக நேரம் செலவிடுவேன். இயக்குநருக்கும் எனக்கும் உள்ள புரிதல் தான் படம் நன்றாக வரக் காரணம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் சந்தீப் மிக ஓப்பனாக இருந்தார். அவரிடம் தெளிவான பார்வை இருந்தது. நான் சந்தித்ததில் மிக ஒரிஜினலான டைரக்டர்களில் ஒருவர். தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது, ஆனால் தந்தைப்பாசம் பற்றி படம் அதிகம் வந்ததில்லை. எப்படி இந்தக்கதை? ஏன் இந்தக்கதை? என்று அவரிடம் கேட்டேன். ஒருவன் தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்வான், அவனைக் கொண்டு செல்லும் அந்த புள்ளி எது, என்பதுதான் இந்தப்படம் என்றார். அதை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அனிமல் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி செயல்படும் இந்த ஹீரோவும் அப்படித்தான். படம் பார்க்கும் போது, இந்த டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இப்போது பான் இந்தியப் படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி. இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் ஜெயிலர் விக்ரம் ஓடுகிறது. மொத்தமாக நாங்கள் எண்டர்டெயின் செய்யத் தான் படம் எடுக்கிறோம் அதை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப்படத்தை டிசம்பர் 1 தியேட்டரில் பார்த்து ஆதரவு அளியுங்கள் நன்றி.
பூஷன் குமார், முராத் கெடானி, பிரனய் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ், சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
ரன்பீர் கபூர் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்காவின் மாறுபட்ட காம்பினேஷனில் மேலும் பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரன்பீருக்கு ஜோடியாக, நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க, நடிகர் அனில் கபூர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
இந்தியாவின் மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் பங்காற்றும் இத்திரைப்படம் டிசம்பர் 1 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒரு மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை!
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவான 'அனிமல்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை கண்டிராத காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பிடித்திருந்ததால் பெரும் வரவேற்பையும் பெற்றிருந்தது. இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தானா, பாபி தியோல், அனில் கபூர் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்திருப்பதால் இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கிற்கு கிடைத்த அமோகமான வரவேற்பே இந்த உற்சாகத்திற்கு மிகப்பெரும் ஆதாரம். பூஷன் குமார் தயாரிப்பில் உருவான 'அனிமல்' எனும் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகின. அதன் பின்னர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10,000 டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது.
மிகச் சில இந்திய திரைப்படங்களின் முன்பதிவுகள் இந்த வகையான வரவேற்பைப் பெற்றிருக்கும். அதனால் இந்த திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட். 'அனிமல்' திரைப்படம் என்னவாக இருக்கும் என்பதை மட்டுமே இந்த டிக்கெட் முன்பதிவு நிரூபிக்கிறது. பூஷன் குமார் மற்றும் கிரிஷன்குமாரின் டி சீரீஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து 'அனிமல்' திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். கிரைம் டிராமா ஜானரிலான இந்த திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, பார்வையாளர்களை பரபரப்பான பயணத்தில் அழைத்துச் செல்லும் என உறுதியளிக்கிறது.
விஜய் சேதுபதி படத்தின் கதாசிரியர் அருள் செழியன் இயக்குனராக அறிமுகமாகும் குய்கோ!
எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் திரைப்படம் ‘குய்கோ’. இதில் கதையின் நாயகர்களாக விதார்த் மற்றும் யோகி பாபு நடித்து இருக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இப்படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராம் பாண்டியன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சுப்ரமணியன் நாராயணன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் வெளியீட்டுக்குத் தயாரான நிலையில், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், "மலைக்கிராமத்துக்கான கதை என்றதும், மனதில் ஏற்காடு, ஊட்டி போன்ற விஷுவல் கண் முன் தோன்றும். அவர் லோக்கேஷனை ஃபோட்டோஸாகக் காட்டினார். இந்தக் கதை உருவான இடத்துல ஒரு வருடம் பயணித்து, ஒவ்வொரு சீசனும் எப்படி இருக்கும் எனச் சொன்னார். அழகிய கிராமம் எனச் சொல்வது சுலபம். ஆனா அதைக் காட்சிப்படுத்துவது சவாலா இருக்கும். லோக்கேஷனைப் பார்த்துடலாம் எனக் கேட்டேன். அந்தக் கிராமத்தில் மொத்தம் 40 வீடுதான் இருந்தது. அந்த ஊரில் இறங்கியதும் சிக்னல் கட்டாகிடுச்சு. அந்த ஊர் முழுவதும் பூந்தோட்டமாக இருந்தது. அந்த ஊர்ல பூக்களைப் பயிரிட்டுக் கொண்டிருந்தார்கள். நல்ல பசுமையான லோக்கேஷனாகப் பார்த்து வச்சுட்டு வந்தோம். ஆனா படம் தள்ளிப் போய் மே மாசத்து வெயிலில் ஷூட்டிங் போகும்படி இருந்தது. ‘வேலூரில் மே மாசம் ஷூட்டிங்கா?’ என பயமுறுத்தினாங்க. எல்லோரும் பயமுறுத்தின மாதிரி மலை எங்களை பயமுறுத்தலை. ஆனா மலையில் இருந்து இறங்கிய ரெண்டு நாளும் வெயில் நல்லா காட்டிடுச்சு. ஒரு பாடல் படப்பிடிப்புக்காகப் பார்த்த இடத்தில் வனத்துறையின் அனுமதி இல்லாததால், வேற லோக்கேஷன் பார்த்தோம். அணைக்கட்டு முருகர் கோயில் பக்கத்தில் இருக்கும் மலையில் ஷூட்டிங் போனோம். அதனால் வேலூரை ஸ்விட்சர்லாந்து மாதிரி காட்ட முடிஞ்சது.”
யோகிபாபுவிற்கு ஜோடியாக ஜோடியாக நடித்திருக்கும் துர்கா பேசியதாவது, "விதார்த் சார் என் காட்ஃபாதர். இதை நான் கிண்டலாகச் சொல்லவில்லை. அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நானும் இளவரசு சாரும், ஒருநாள் ஷூட்டிங் முடித்துவிட்டு காஃபி குடித்துக் கொண்டே பேசினோம். அவர் பேசினாரு, பேசினாரு, அவ்ளோ ஞானத்தை எங்க ஒளிச்சு வச்சார் எனத் தோணுமளவுக்குப் பேசினார். யோகிபாபு சாரு, நார்மலா நாம எல்லாரும் ஸ்க்ரீன்ல பார்க்கிற மாதிரி தான் இருப்பார். சிரிச்சுட்டே, சிரிக்க வச்சுட்டே இருப்பார்.”
நடிகர் முத்துக்குமார் பேசியதாவது, " சார்பட்டா பரம்பரைக்குப் பிறகு நிறைய கதை சொன்னாங்க. அருள்செழியன் சொன்ன கதை ரொம்பச் சுவாரசியமாக இருந்தது. எளிய மனிதர்களின் வாழ்வியலைப் பற்றிய படம். எனக்கு, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கேரக்டர். வட்டிக்குப் பணம் தர்றவங்களோடு வலியை இதுல சொல்லியிருக்கார். இந்தப் படம் எந்தச் சூழ்நிலையிலும் பார்வையாளர்களை ஏமாத்தாது. நூறு சதவிகிதம் பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் அளிக்கும்.”
நடிகர் இளவரசு பேசியதாவது, "இளம் பத்திரிகையாளர்களுக்கு சினிமா கனவு இருந்தா சீக்கிரம் சினிமாக்கு வந்துடுங்க. காத்திருக்காதீங்க. இப்பவே வந்து சினிமாவுல முட்டுங்க, மோதுங்க. பத்திரிகை துறை உங்க நேரத்தையும் உழைப்பையும் உறிந்துவிடும். நல்லவேளையா அருள்செழியன் இப்பயாவது வந்துட்டார். படம் கிடைச்சிடுச்சு, செல்லப்பிள்ளை யோகிபாபு, ஃபெர்பார்ம் பண்ற ஹீரோ விதார்த், ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் உள்ள வந்துட்டாங்க. ஆனா முதல் நாள் ஷூட்டிங்கில், அறுபது சீனில் எதை முதல் ஷாட்டாக வைப்பீங்க? அகிரா குரோசாவோவாக இருந்தாலும், இந்தப் பிரச்சனை வரும். அதைச் சமாளிக்க, அசோசியேட் இயக்குநர், கேமராமேன் என இருவரின் தயவு அவசியம் தேவை. அப்படியொரு டீம் அருள் செழிலனுக்கு அமைஞ்சது. அதைத் தாண்டி, இந்தப் படத்துல என்ன சிறப்பு? மலையாளப்படத்துல தான் நூல் பிடித்தாற்போல் சுவார்சியம் குறையாமல் டக்கு டக்குன்னு திரைக்கதை அமைச்சுட்டே போவாங்க. சினிமாவுல, கதையை விட திரைக்கதை தான் ரொம்ப முக்கியம். அது சில ஸ்க்ரிப்ட்க்கு அமையும். இந்தப் படத்துல அமைஞ்சிருக்கு. அவர் கதையில், ஃப்ரீசர் பெட்டிக்கு ஒரு எமோஷன் வச்சு அருமையான திரைக்கதையாக அமைச்சிருக்கார்.
பெண்கள் பொதுவாகத் தன்னை அழகாகக் காண்பிச்சுக்க நினைப்பாங்க. இந்தப் படத்துல, கதாநாயகி ஸ்ரீபிரியங்கா எண்ணெய் ஒழுகும் முகத்தோடு நின்னுட்டிருந்தாங்க. நான் போய், ‘டச் அப் பண்ணிக்கோம்மா’ எனச் சொன்னேன். ‘இல்ல சார், கதைக்கு இப்படித்தான் இருக்கணும்’ எனச் சொன்னாங்க. கன்டினியுட்டி மிஸ் ஆகிடக்கூடாதுன்னு சிச்சுவேஷனுக்கு ஏற்ற முகத்துடன் இருக்கணும் என ஒரு கதாநாயகி படத்தோடு இன்வால்வ் ஆகி நடிச்சது ஆச்சரியமாக இருந்தது.
விதார்த்திற்கு அவரது திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் இன்னும் கிடைக்கவில்லை. விமல், விதார்த், விஜய் சேதுபதி ஆகியோர் ஹீரோவின் நண்வர்களாக நடிச்சு இப்போ ஹீரோவாகி இருக்காங்க. விதார்த் சினிமாவுல சாதிச்சது தெரியும். ஆனா அவர் பாரதம் நாடகத்துல, துச்சாதனாக துயில் உறியுற காட்சி நடிச்சுட்டு, ஸ்க்ரீனுக்குப் பின்னாடி போறப்ப அவர் மேல தண்ணி ஊத்தினா, பொஸ்ஸ்ன்னு ஆவி போகும். பொசுக்குன்னு தண்ணி ஊத்தினா ஆவி பறக்கும். ஒரு நடிகன் ஒரு கதாபாத்திரமாகவே மாறுவது என்பதெல்லாம் சாதாரண விஷயமே இல்லை. அவர் இன்னும் பெரிய உயரத்துக்குப் போகணும். இது ஓட வேண்டிய படம். படத்தை இன்னும் கொஞ்சம் விளம்பரத்தைத் தயாரிப்பு நிறுவனம் அதிகப்படுத்தலாம்.”
நடிகை ஸ்ரீபிரியங்கா பேசியதாவது, “எங்க படத்தோட தலைப்பு மட்டும் வித்தியாசமானது இல்லை. எங்க டீமே வித்தியாசமானதுதான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து எதார்த்தமாக உருவாக்கப்பட்டிருக்கு. ஒளிப்பதிவாளரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாகக் காண்பிச்சிருக்கார். படம் வரும் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகப் போகுது. அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க.” என்றார்.
நடிகர் விதார்த் பேசியதாவது, "இன்றைய நிகழ்வின் நாயகனான இசையமைப்பாளர் அந்தோணிதாசன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இந்தப் படத்தின் ப்ரொடக்ஷன் தொடங்குவதற்கு முன்பே, இயக்குநர் அருள் செழியன் சொல்லி, அந்தோணிதாசன் படத்துக்கு மியூசிக் போட்டு, அந்தப் பாடலை நான் கேட்டு அவருக்குப் பேசினேன். இந்தப் படத்தில் இசை மிகப் பிரமாதமாக வந்திருக்கு. படத்தில், இந்தப் பாடல்களுக்கு, நான் ஆடணும்னு நினைச்சேன். ஆனா படத்துல எனக்கு அந்த வாய்ப்பு அமையல. இயக்குநர் அருள் செழியனை, எனக்கு காக்கா முட்டை மணிகண்டன் தான் அறிமுகப்படுத்தினாரு. அப்போ அவர், 'என்கிட்ட ஒரு நல்ல கதை இருக்கு. படிக்கிறீங்களா?' என 'ஃப்ரீஸர் பாக்ஸ்' கதையைக் கொடுத்தார். அந்தக் கதை எனக்கு முன்பே தெரியும். மைனா படத்திற்குப் பிறகு, எனக்குத் தோல்விப் படங்களாக அமைந்த போது, என் குடும்ப உறுப்பினர்கள் எனக்காக ஒரு படம் தயாரிக்க முடிவு பண்ணாங்க. அப்போ இயக்குநர் மணிகண்டன் எனக்குச் சொன்ன கதைதான் இது. நான் இந்தக் கதையைத் தயாரிக்கலாம்னு இருந்தேன். அப்போ, 'நீங்க வில்லேஜ் சப்ஜெக்டில் நடிச்சுட்டீங்க. எனக்கும் காக்கா முட்டை முடிஞ்சது. நாம வேற ஜானர்ல பண்ணலாம் என குற்றமே தண்டனை படம் பண்ணோம். மீண்டும், இந்தப் படம் திரும்பி என்னையே தேடி வந்தது. என் கேரக்டரில் ரமேஷ் திலக் நடிப்பதாக இருந்தது. தயாரிப்பு நிறுவனம், ஒரு ஹீரோவாகப் போகலாம் என முடிவெடுத்ததால், நான் நடிக்கிறேன் என ஒத்துக்கிட்டேன். ஆனா, நான் உள்ள வர்றதுக்கு நிஜமான காரணம் கதை தான். அவ்வளவு அழகான கதை. எப்படி 'ஒரு கிடாரியின் கருணை மனு' படம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதோ, அப்படியான ஒரு வாழ்வியல் சார்ந்த கதை. இந்தப் படத்தின் திரைக்கதையை மிகச் சுவாரசியமான ஒன்றாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் T. அருள் செழியன். அற்புதமான இந்த இயக்குநர் வெற்றி பெறனும். மக்களுக்கு இந்தப் படம் போய்ச் சேரனும்" என்றார்.
இசையமைப்பாளர் அந்தோணி தாசன் பேசியதாவது, “என்னைப் பெத்தெடுத்த எங்கம்மாவுக்கு நன்றி. கோ.மு.-ல ஆரம்பிச்சு கோ.பி.-ல முடியுது. கொரோனாக்கு முன்னாடி தொடங்கி, கொரோனாக்குப் பின்னாடி வெளியாகப் போகுது. படம் தொடங்கி 5 வருஷமாகுது. கலச்சாரத் தூதுவனா, மக்களை சந்தோஷப்படுத்துற பணியை மண்ணுக்குப் போறவரை செய்வேன். நான் கரகாட்டக் கலைஞன் என்பதால் நடனமும் ஆடுவேன். படத்துல, பாடல்களுக்கு நானே ஆடுறேன் எனக் கேட்டுப் பார்த்தேன். இயக்குநர் ஒத்துக்கலை. அவரது அடுத்த படத்துல எனக்கு முக்கியமானதொரு கதாபாத்திரம் தருவாருன்னு நம்புறேன்.” என்றார்.
இயக்குநர் அருள்செழியன் பேசியதாவது, “ஜீ தமிழ்ல வேலை பார்த்துட்டு இருக்கும்போது, 3 ஸ்க்ரிப்ட் பெளண்ட் பண்ணேன். அதுல ஒன்னுதான் ஆண்டவன் கட்டளை. மணிகண்டனோட ‘காக்கா முட்டை’ படம் பார்த்துவிட்டுப் பாராட்டுறதுக்காகக் கூப்பிட்டேன். அப்போ அவர் எனது ‘ஆண்டவன் கட்டளை’ கதையைக் கேட்டார். அவர் மூலமாக ஃப்ரீசர் பெட்டி கதையைப் பற்றிக் கேள்விப்பட்டு, கடைசி விவசாயி தயாரிப்பாளர் சமீர் பரத் அழைத்தார். யோகிபாபுவுக்கு, ஆண்டவன் கட்டளை சமயத்திலேயே கதை சொல்லியிருந்தேன். கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகப் பண்ணியிருக்கார். விதார்த், மிகச் சிறந்த மனிதராக இருக்கிறார். யோகிபாபுவின் தேதி கிடைக்காததால், அவரது போர்ஷனை முதலில் முடிச்சோம். விதார்த்தைக் காக்க வைத்து ரொம்பவே கஷ்டப்படுத்திட்டோம்.
இளவரசு அண்ணனிடம் கதை சொன்னேன். அடுத்த நாள் அவர் எனக்கு போன் செய்து, ‘மூன்று மணிக்கு முழிப்பு வந்தது, இந்தக் கதை பற்றித்தான் யோசிச்சிட்டிருந்தேன். ரொம்பப் பிரமாதமாக இருக்கு’ என்றார். 2019 இல் படம் தொடங்கி தாமதம் ஆன பொழுதெல்லாம் மிக உறுதுணையாக இருந்தார். ஆயிரம் சினிமாக்கு பைனான்ஸ் பண்ணவரிடம் கூட்டிட்டுப் போனார். தனிப்பட்ட முறையில் தொடர்ந்து அக்கறையோடு இந்தப் பட உருவாக்கத்திற்கு உதவி பண்ணார்.
வெறொரு படத்திற்காக அந்தோணிதாசன் இசையமைத்த, 'ஏ! சிரிப்பழகி' பாட்டை, 'எனக்கு வேணும்'னு கேட்டு வாங்கினேன். ராஜேஷ் யாதவ் வேகமாக 35 நாளில் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கார். படத்தில் மோசமான கெட்ட பாத்திரங்களே இல்லை. ஏன் போலீஸை மட்டும் கெட்டவங்களா காட்டியிருக்கீங்க என சென்சாரில் கேட்டனர். 35 வருஷமா பத்திரிகையாளரா வேலை பார்த்தேன். நான் பார்த்த விஷயங்களைக் கொஞ்சம் நையாண்டியாக டீல் பண்ணேன் எனச் சொன்னேன்.”
குய்கோ எனும் தலைப்பு, ‘குடியிருந்த கோயில்’ என்பதன் சுருக்கமாகும். திரையரங்குகளில், நவம்பர் 24 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
கஷ்டப்படுகிற ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு நெகட்டிவ் ரோலில் கெத்தாக நடிக்கலாம்.
இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும் அவர்களில் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்ற வசுந்தரா, செலக்டிவான படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
அந்தவகையில் இந்த வருடத்தில் கண்ணை நம்பாதே, தலைக்கூத்தல் என இரண்டு படங்களிலும் மாடர்ன் லவ் சென்னை என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ள வசுந்தரா மீண்டும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். அது மட்டுமல்ல, இதுவரை செலக்டிவான கதைகளையும் கதாபாத்திரங்களையும் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த வசுந்தரா, இனி படங்களை தேர்வு செய்வதில் தானே வகுத்துக் கொண்டுள்ள விதிகளை கொஞ்சம் தளர்த்தி புதிய பாதையில் பயணிக்க போகிறேன் என்கிறார்.
“நான் எதிர்பார்ப்பது சவாலான கதாபாத்திரங்களைத்தான். அதில் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்றால் வருஷத்துக்கு ஒரு படம் தான் பண்ண முடியும். ஆனால் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்கும்போது முதலில் நமக்கே போர் அடிக்காது. நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்பும் இருக்கும். தமிழ் சினிமாவில் எப்போதுமே பெண்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது. முன்பெல்லாம் மக்கள் அப்படி நடிப்பவர்களை நிஜத்திலும் வில்லியாகவே பார்த்தார்கள். இப்போது காலம் மாறிவிட்டது.. மக்களும் அந்த கதாபாத்திரத்தை ரசிக்கும் அளவுக்கு மாறிவிட்டார்கள். நடிகை ரம்யா கிருஷ்ணன் பாசிடிவ், நெகடிவ் என இரண்டு கதாபாத்திரங்களிலும் சூப்பராக நடிப்பவர். அவருடைய ரசிகை நான்.. ஒரு பாவமான, கஷ்டப்படுகிற ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கெத்தாக நடிக்கலாம்.
அதனால் இனி கமர்சியல் படங்களில் கவனம் செலுத்தப் போகிறேன். அந்தவகையில் தற்போது ஒரு மல்டி ஸ்டாரர் கதையில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். இந்த படமே பெண்களை மையப்படுத்தி ஒரு மாடர்ன் க்ரைம் டிராமாவாகத்தான் உருவாகி வருகிறது. படத்தில் நிறைய திருப்பங்கள் இருக்கின்றன. அதில் நானும் ஒரு திருப்பமாக இருப்பேன். பப்கோவா என்கிற வெப்சீரிஸை இயக்கிய லட்சுமி நாராயணன் ராஜு தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இது தவிர ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன். அதை பற்றிய தகவல் விரைவில் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியாகும்.
தமிழ் தான் எப்போதுமே என் சொந்த வீடு.. என்றாலும் ஒரு நடிகையாக முழுமை பெற மற்ற மொழிகளிலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன். குறிப்பாக மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. மலையாள படங்களை பார்க்கும்போது இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாம் நடித்திருக்கலாமே என்கிற ஏக்கம் இயல்பாகவே எனக்குள் எழும். தெலுங்கில் ஆரம்பத்தில் எனக்கு சில வாய்ப்புகள் வந்தது. சில சூழல்கள் காரணமாக அந்த வாய்ப்புகள் மிஸ் ஆகி போனது. அந்த வகையில் மன திருப்திக்காக மலையாள படங்களிலும் கேரியர் வளர்ச்சிக்காக தெலுங்கு படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்..
இந்த வருடம் நான் நடித்த மூன்று படங்கள் வெளியாகி இருக்கின்றன. அடுத்த வருடம் நிச்சயம் இரண்டு படம் வெளியாகும்” என்கிறார் வசுந்தரா.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது!
இன்று எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் 'விஸ்காம்' எனப்படும் காட்சித் தொடர்பியல் துறையின் ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் திரையுலகில் தன் தனித்துவமான படங்களைத் தன் பாணியில் இயக்கி, தனக்கென முத்திரை பதித்து சாதனை படைத்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் வேந்தர் திரு ஏ.சி.சண்முகம் அவர்கள் 'திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் 'விருதினை வழங்கினார். விருது வழங்கும் முன் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் திரையுலகச் சாதனைகள் குறிப்பிடப்பட்டு விருது வழங்கப்பட்டது.
விருது வழங்கும் விழாவில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்
திரு அருண்குமாரும் உடன் இருந்தார். இவ்விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி திருமதி ஷோபா சந்திரசேகரும் கலந்து கொண்டார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா