சற்று முன்
சினிமா செய்திகள்
இலங்கையில் கேக் வெட்டி நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாள் கொண்டாட்டம்!
Updated on : 19 January 2022

"அகில இலங்கை விஜய் சேதுபதி நற்பணி மன்ற இயக்கம்" என்ற பெயரில் இலங்கையில் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஒன்றினைந்து, அங்குள்ள ஏழை மக்களுக்கு பலதரப்பட்ட நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு "அகில இலங்கை விஜய் சேதுபதி நற்பணி மன்ற இயக்கத்தினரால்" இலங்கையில், சிறுவர் இல்லங்களில் கேக் வெட்டி, மதிய உணவு வழங்கி கொண்டாடினார்கள்.
ரசிகர்கள் ஒவ்வொரு இடங்களிலும் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவதோடு, விஷேச இரத்ததான முகாம்களை அமைத்து உயிர்காக்கும் ரத்ததானம் வழங்கும் நிகழ்விலும் பல ரசிகர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வுகளில் ஆண்டவன் கட்டளை நடிகர் அரவிந்தனும் பங்கேற்றிருந்தார்.
சமீபத்திய செய்திகள்
புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை கே.ராஜன் சந்தித்தார்
புதுவை மாநில ஆளுநர் மேதகு தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை தமிழ் திரைப்படப் பாதுகாப்புக்கழகத் தலைவர் நடிகர் கே.ராஜன் மற்றும் கர்ஜனை, கன்னித்தீவு படங்களின் இயக்குனர் ப.சுந்தர் பாலு ஆகியோர் சந்தித்தனர்.
புதுவையில் திரைப்பட நகர் உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு கே.ராஜன் வேண்டுகோள் வைத்தார்.
விஷ்ணு விஷால் 'நெஞ்சுக்கு நீதி' படத்துக்கு வாழ்த்து
விஷ்ணு விஷால் 'நெஞ்சுக்கு நீதி' படத்துக்கு வாழ்த்து
விமல் ஆரம்பித்த 'யூடியூப்' சேனலால் தேடிவந்த பிரச்சனை..!
'ஓடியன் டாக்கீஸ்' சார்பாக கே.அண்ணாத்துரை தயாரிப்பில் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’.( Thudikkum Karangal ) மும்பையை சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துள்ளதுடன், கன்னடத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தை இயக்குனர் வேலுதாஸ் இயக்கியுள்ளதுடன், இணை தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றுளார்.. இவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, நந்தா பெரியசாமி, 'வெற்றிவேல்' இயக்குனர் வசந்தமணி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர். கனவு என்கிற குறும்படத்தை இயக்கியதற்காக கனடா சர்வதேச திரைப்பட விருது பெற்றவர்.
இந்தப்படம் குறித்து இயக்குனர் வேலுதாஸ் கூறும்போது, “இந்தப்படத்தில் யூடியூப் சேனல் நடத்தும் நிருபராக விமல் நடித்துள்ளார். அவரது நண்பராக சதீஷ் நடித்துள்ளார்.. ஒரு நிருபர் தன் வேலையை செய்கிறார். அதனால் அவருக்கு மிகப்பெரிய இடத்தில் இருந்து ஏற்படும் எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகளை எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
இதுவரை நகரத்து இளைஞனாக அதிகம் நடித்திராத ஒருவர் நடித்தால், அந்த கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால், இந்த படத்திற்கு ஹீரோவாக விமலை தேர்வு செய்தோம்.. விமல் படப்பிடிப்பில் எங்களுக்கு அருமையாக ஒத்துழைப்பு தந்தார்.. நடிகர் சுரேஷ் மேனனும் ஒரு ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்பதால், எனக்கு இருக்கும் சுமையை புரிந்துகொண்டு, அதை எளிதாக்கும் விதமாக நடித்து கொடுத்தார்” என்கிறார்.
மும்பையை சேர்ந்த 'இந்தியன் சகீரா' என அழைக்கப்படும் சினேகா குப்தா இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். படத்தின் ஹைலைட்டான அம்சங்களில் ஒன்றாக அந்தப்பாடல் இருக்கும்.
பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் நிழலாகவே, அவருடன் 23 வருடங்கள் உதவியாளராக பணியாற்றிவரும், அவரது சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இந்தப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
நகரத்து கதை என்பதால் சென்னையிலேயே 45 நாட்கள் மொத்த படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்மி 'யாமிருக்க பயமே' படத்தில் பணியாற்றியவர். அதுமட்டுமல்ல இந்தியில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் மூன்று படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நயன்தாராவின் 'நெற்றிக்கண்' படத்திற்கு பணியாற்றிய லாரன்ஸ் கிஷோர் இந்தப்படத்தின் படத்தொகுப்பை கவனிக்கிறார். 'சக்ரா ' படத்திற்கு பணியாற்றிய கண்ணன் இந்தப்படத்தின் கலை வடிவமைப்பை கையாண்டுள்ளார். படத்தில் இடம்பெறும் நான்கு சண்டை காட்சிகளையும் சிறுத்தை கணேஷ் வடிவமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
’மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ‘மாலைநேர மல்லிப்பூ’ படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது.
21 வயதே ஆன புதிய அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயண் மிக வித்தியாசமான கதைக்களத்தில், பாலியல் தொழிலாளி ஒருவரின் ஆட்டோகிராஃப் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இயக்கியிருக்கும் படம் ‘மாலைநேர மல்லிப்பூ’. பாலியல் தொழிலாளி பாத்திரத்தில், பிரபல தியேட்டர் ஆர்டிஸ்டான வினித்ரா மேனன் நடித்துள்ளார். அவரது பத்து வயது மகனாக குழந்தை நட்சத்திரம் அஸ்வின் நடித்துள்ளார்.
மிக இளம் வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட லட்சுமியின் வாழ்வின் சில குறிப்பிட்ட காலங்களை, ஆவணப்படுத்தியிருக்கும் இயக்குநர் சஞ்சய், அத்தொழிலில் அவர் சந்திக்கும் வாடிக்கையாளர்கள், அவரது வீட்டு உரிமையாளர், சக பாலியல் தொழிலாளிகள் ஆகியோருடன் அவருக்கு நிகழும் அனுபவங்களை மிக நேர்மையாக காட்சிப்படுத்தியுள்ளார். இந்த சூழலில், தனது இருட்டான பக்கங்களை மறைத்து, பத்து வயதே ஆன, ‘என் அப்பா யார் என்று சதா கேள்வி எழுப்பி வரும் மகனை வளர்த்தெடுக்க அவர் காட்டும் தாய்ப்பாசம் பார்ப்பவர்களை நிச்சயம் நெகிழவைக்கும்.
பிரத்யேகமாக ஓ.டி.டி. தளங்களை மனதில் வைத்தே உருவாக்கப்பட்ட இந்த ‘மாலைநேர மல்லிப்பூ’ மிக விரைவில் முன்னணி ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
கான்ஸ் படவிழாவில் பா.இரஞ்சித்தின் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் ”வேட்டுவம்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்பட்டது.
இயக்குனர் பா.இரஞ்சித் படங்கள் இயக்குவதோடு தயாரிப்பாளராகவும் படங்கள் தயாரித்து வருகிறார். தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக பரியேறும்பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் உள்ளிட்ட படங்கள் தயாரிப்பில் வெளிவந்தன. இதனைதொடர்ந்து சேத்துமான், பொம்மை நாயகி, ஜெ.பேபி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.
இன்னிலையில் பா.இரஞ்சித் ”நீலம் ஸ்டுடியோ” எனும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியிருக்கிறார். இந்த நிறுவனத்தோடு கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து முதல் தயாரிப்பாக இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ”வேட்டுவம் ” எனும் திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.
வேட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கான்ஸ்படவிழாவில் வெளியிடப்பட்டது ,இந்த நிகழ்வில் இயக்குநர் பா.இரஞ்சித்,தயாரிப்பாளர்கள் அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
கேங்ஸ்டர்கள் பற்றிய கதையாக உருவாகவிருக்கும் வேட்டுவம் படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்
எல்லாரும் சமம்னா யார் சார் ராஜா !
கருணாநிதியின் ‘ஒரே ரத்தம்’ படத்தில் நந்தக்குமாராக நானும் நடித்தேன். கதாபாத்திரத்தின் பெயரே நான் யார் என்பதை எடுத்து சொல்லும்- ஸ்டாலின்!
காங்கிரஸ் கட்சியின் பட்டியலினத்தவர் பிரிவு சார்பில், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற ‘தலித் உண்மைகள்’ புத்தக அறிமுக விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ’புத்தகம் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான அரசியலமைப்பு சட்டம் எந்தளவு செயல்பாட்டில் உள்ளது என்பதை ராஜூ’ அலசி ஆராய்ந்துள்ளார். முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை 13 பேரின் கட்டுரையும் கருத்து பெட்டகமாக அமைந்துள்ளது.
பட்டியலின,பழங்குடியின மக்களுக்கு, அரசியல் சட்டம் வழங்கியிருக்கக்கூடிய வாக்குறுதிகளைத் நிறைவேற்றி இருக்கக்கூடிய கட்சி திமுக தான்.
1971-ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் அமைந்த ஆட்சிதான், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டில் இருந்து, 18 விழுக்காடாக நிறைவேற்றிக் கொடுத்தது. 2009-ல் அருந்ததியின மக்களுக்கு உள்ஒதுக்கீடாக மூன்று விழுக்காடு வழங்கியதும் திமுக ஆட்சிதான்.
நாட்டிலேயே முதலாவதாக டாக்டர் அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகத்தை அமைத்ததும் கலைஞர் தலைமையில் இருந்த திமுக ஆட்சிதான்.
‘பெண் சிங்கம்’ படத்தில் கருணாநிதி எழுதிய கதை வசனத்திற்கு கிடைத்த 50 லட்சத்துடன், தனது பணத்தையும் சேர்த்து 61 லட்சத்து 5 ஆயிரத்தை பொறியியில் படித்த முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கருணாநிதி வழங்கினார்.
திரைப்பட இயக்குனர் ரஞ்சித் இந்தியாவில் தலித் சினிமா என்ற கட்டுரையில், சமூக ஆதிக்கங்களுக்கு எதிராக திராவிட இயக்கத் திரைப்படங்கள் அமைந்திருந்ததை இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும், திமுக காலம் என்பது, அத்தகைய முற்போக்கு புரட்சிக் கருத்தியல் திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிய காலமாக இருந்ததையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கருணாநிதியின் ‘ஒரே ரத்தம்’ படத்தில் நந்தக்குமாராக நானும் நடித்தேன். கதாபாத்திரத்தின் பெயரே நான் யார் என்பதை எடுத்து சொல்லும்.
அண்ணா, கலைஞர் இப்படி ஏராளமானவர் திரைத்துறையில் பழமைவாதத்திற்கு எதிராக முற்போக்குக் கருத்துக்களை கையாண்டு இருக்கிறார்கள். இப்போது அவர்கள் வழியில் நானும் அந்தப் பணியில் ஈடுபட்டு இருக்கிறேன்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கி, என்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வருகிற 20ஆம் தேதி வெளிவர இருக்கிறது. அந்தப் படத்தை நான் பார்த்தேன். பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்தும், அண்ணல் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக வழங்கியிருக்கக்கூடிய உரிமைகள் குறித்தும் அந்தத் திரைப்படம் பேசியிருக்கிறது.
மதவாத ஆதிக்க சக்திகளை எதிர்க்க, நமது உரிமைகளை உரக்கப் பேசும் பகுத்தறிவுக் கருத்துக்கள் நிரம்பிய திரைப்படங்களைத் திரைத்துறையினர் எடுக்க வேண்டும்.
அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டம்தான் சமூக தீமைகளுக்கான தீர்வாக அமைந்திட முடியும். தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு, அம்பேத்கர் கண்ட அரசியல் சட்டத்தின் கனவுகளைப் பிசகாமல் நிறைவேற்றி வருகிறது, தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்று ஸ்டாலின் பேசினார்.
ஓடிடி தளத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான, இவ்வாண்டின் மிகச்சிறந்த ரோம் - காம் பொழுதுபோக்குத் திரைப்படமான, 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம், மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக தங்களது ஒடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் ரசிகர்களுக்கு தொடர்ந்து சிறந்த கதைகள் மற்றும் ஒரிஜினல் திரைப்படங்களை வழங்குவதன் மூலம் தமிழகத்தில் சிறந்த ஓடிடி தளமாக புகழ் பெற்று வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான ‘டாணாக்காரன்’ விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. தற்போது மே 27, 2022 அன்று இந்த ஆண்டின் மிகப்பெரிய ரோம் - காம் பொழுதுபோக்குத் திரைப்படமான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தினை ரசிகர்களுக்கு வழங்குவதில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெருமை கொள்கிறது.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ரிலீஸுக்கு முந்தைய கட்டத்திலேயே ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியதோடு, பாக்ஸ் ஆபீஸிலும் சிறந்த வெற்றியைப் பெற்றது. தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரின் நடிப்புடன், இயக்குனர் விக்னேஷ் சிவனின் அட்டகாசமான உருவாக்கமும், அசத்தலான திரைக்கதையும், அனிருத்தின் துள்ளலான இசையும் திரையரங்குகளில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது. சென்டிமெண்ட், வேடிக்கை, காதல் மற்றும் சார்ட் பஸ்டர் பாடல்கள் என அனைத்து அம்சங்களும் அடங்கிய இப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இப்போது இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறது. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் சிறந்த காட்சி மற்றும் ஆடியோ அம்சங்களுடன் பார்வையாளர்களுக்கு வீட்டிலேயே திரையரங்கு அனுபவத்தை தரும்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள, எதிர்பார்ப்பை கூட்டியுள்ள பொழுதுபோக்கு படைப்பான ‘O2’ திரைப்படம் விரைவில் இத்தளத்தில் வெளியாகுமென்று அறிவித்துள்ளது.
”இதயத்தை விட்டு என்றும் நீங்காத படம்” 'சாணி காயிதம்’
அருண் மாதேஸ்வரனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’சாணி காயிதம்’ படம் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் மே 6 அன்று வெளியிடப்பட்டது,
பழிவாங்கும் அதிரடி ஆக்ஷன் படமான அது ஒவ்வொரு சினிமா ரசிகரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடினமான கதையாகவும், புத்திசாலித்தனமான மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் சினிமாவாகவும் இருப்பது போக, அனைவருக்கும் பிடித்த கீர்த்தி சுரேஷ் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் செல்வராகவன் ஆகியோரின் வித்தியாசமான நடிப்புக்காகவும் படம் மிகவும் சிலாகிக்கப்பட்டது.
’சாணிகாயிதம்’படம் தொடங்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்களும் சமூக வலைதளவாசிகளும் செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் போற்றிப் புகழ்ந்து கொண்டாடிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சர்யமான நிகழ்வு என்றுதான் சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக சங்கையாவாக வாழ்ந்த இயக்குநர் செல்வராகவனின் பாத்திரச் சித்தரிப்பை பலரும் வியந்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது..இன்னொரு பக்கம் பொன்னி பாத்திரத்தில் மிகச்சரியாகப் பொருந்திய கீர்த்தி சுரேஷ் இன்னொரு முறை தேசிய விருது வாங்கும் அளவுக்கான நடிப்பை வழங்கியிருக்கிறார் என்பதையும் நிச்சயமாகச் சொல்லலாம்.
இப்படத்துக்குக் கிடைத்த அமோக வரவேற்பு மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலளித்த நடிகர் செல்வராகவன், “சாணி காயிதம் மூலம் நடிகராக எனது பயணத்தை தொடங்கியதில் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். நான் நடித்த பாத்திரம் ஒரு ஆற்றல் வாய்ந்தது மற்றும் என்றென்றும் என்னுடன் இருக்கும். இந்தப் புத்திசாலித்தனமான படத்திற்காக என்னைப் பெற வலியுறுத்திய என் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுக்கும், இந்த தலைசிறந்த படைப்பை உருவாக்கிய அபாரமான குழுவுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து வரும் அன்பு மற்றும் பாராட்டுக்காக நான் பெருமைப்படுகிறேன்.” என்கிறார்.
படத்தின் வெற்றி குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்கள் மற்றும் சகாக்களால் ’சாணி காயிதம்’ விரும்பப்பட்டு ரசிக்கப்படுவதற்கு நன்றியுடன் தலைவணங்குகிறேன். ஒரு நடிகருக்கு பார்வையாளர்களின் பாராட்டுகளை விட மகிழ்ச்சி தருவது வேறு எதுவும் இல்லை. இந்த பொன்னி பாத்திரத்துக்கு நான் பொருந்தி வருவேனா என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் என் மீது வைத்திருந்த நம்பிக்கையுடன் அந்தப் பாத்திரமாகவே என்னால் மாற முடிந்ததில் மகிழ்ச்சி.. என் இதயத்தை விட்டு எப்போதும் நீங்காத இப்படத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது சக நடிகர் செல்வா சாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்கிறார்.
ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் தயாரிக்கப்பட்டு, எழுத்தாளர்-இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவாளராக, சாம் சிஎஸ் இசையமைப்பாளராக, ராமு தங்கராஜ் கலை இயக்குநராக, நாகூரன் ராமச்சந்திரன் எடிட்டராக ஸ்டண்ட்ஸ் இயக்குநராக திலிப் சுப்பராயன் மற்றும் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக சித்தார்த் ராவிபட்டி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
சாணி காயிதம் பிரைம் வீடியோவில் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இப்படம் தெலுங்கில் சின்னி என்ற பெயரிலும் மலையாளத்தில் சாணி காயிதம் என்ற இதே பெயரிலும் காணக்கிடைக்கிறது.
மாஸ்டர் பட தயாரிப்பாளருக்காக விஜய் சேதுபதி செய்த உதவி
மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்களின் “எஸ்தல் எண்டர்டெய்னர்” நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் “அழகிய கண்ணே”. இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனரும் அவருடைய உடன் பிறந்த தம்பியுமான R.விஜயகுமார் இயக்குகிறார்.
இந்த படத்தில் திண்டுக்கல் ஐ லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மக்கள்செல்வன் விஜய்சேதுபதி மற்றும் இயக்குநர் பிரபுசாலமன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் N.R.ரகுநந்தன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் மூன்று பாடல்களும், யுகபாரதியின் ஒரு பாடலும், ஏகாதேசியின் ஒரு பாடலுமாக மொத்தம் ஐந்து முத்தான பாடல்கள் இனிமையாக அமைந்துள்ளன.
மேலும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் சிங்கம்புலி, இயக்குநர் ராஜ்கபூர், காதல் சுகுமார், விஜய் டிவி ஆன்டிருவ்ஸ் , அமுதவானன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத் தமிழன் கவனிக்கிறார். சண்டை பயிற்சி ஸ்டண்ட் சில்வா.
இந்த படத்தின் பாடலான "ஒரு சின்ன பறவை...." என்ற பாடல் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மற்றும் பாடகி பிரியங்காவின் இனிமையான குரலில் வைரலாகியுள்ளது.
"அழகிய கண்ணே" ஒரு மண் சார்ந்த கதை என்றாலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம். இதன் படப்பிடிப்பு மதுரை உத்துப்பாட்டி மற்றும் திண்டுக்கல்லை சுற்றி இதுவரை யாரும் படமாக்கப்படாத இடங்களில் 45 நாட்கள் படமாக்கப்பட்டு இரண்டு மணி நேர படமாக ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இயக்குநர் பேரரசு அதிரடி பேச்சு
“புதிய முயற்சிகளுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் ஆதரவு உண்டு” என்று படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு:
ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார்.
'கார்கில்' படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியுள்ளார்.விரைவில் வெளியாகவிருக்கும் 'டேக் டைவர்ஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குநர் பேரரசு, இயக்குநர் 'எத்தன்' சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
படக்குழுவினரை வாழ்த்தி இயக்குநர் பேரரசு பேசுகையில்,
'' இப்படத்தின் கதாநாயகன் சிவக்குமார், தமிழ் சினிமாவின் 'என்றும் மார்க்கண்டேயன்' ஆன சிவகுமாரைப் போல் இவரும் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன். நாயகன் சிவக்குமார் பேசும்போது, 'என்னுடைய தாயார் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டார்' எனக் குறிப்பிட்டார். இந்த உலகத்தில் எதையும் எதிர்பார்க்காத ஒரு ஜீவன் என்றால் அது தாய் தான். அவர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால், 'தன் பிள்ளை நன்றாக பெயரெடுக்க வேண்டும். தன் பிள்ளை வெற்றி பெற வேண்டும். நன்றாகச் சம்பாதிக்க வேண்டும்' என்றுதான் எதிர்பார்ப்பார்கள். ஆனால் மகனிடமிருந்து ஒன்றையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்கள்தான் தாய்.
இப்படத்தின் நாயகன் சிவகுமார் மேடையில் பேசும்போது தன்னுடைய குருவிற்கு நன்றிகள் தெரிவித்த பிறகுதான் தாய்க்கு நன்றி தெரிவித்தார். இப்போதே அவர் கலைஞராகிவிட்டார். ஒரு கலைஞனுக்கு முதலில் குரு தான் அனைத்தும். அதன்பிறகுதான் தாய் உள்ளிட்ட பலர்.
அண்மைக்காலமாக தமிழைக் காப்பாற்ற வேண்டும். இந்தி எதிர்ப்பு.. இந்தி திணிப்பு ...என குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் தமிழ் அழியாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறேன். முன்பெல்லாம் விழாக்களில் கலந்து கொள்ளும் கதாநாயகிகள், ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தை பேசிவிட்டு அமர்ந்து விடுவார்கள். அண்மைக்காலமாக நான் கலந்து கொள்ளும் விழாக்களில் கதாநாயகிகள் தமிழில் பேசுகிறார்கள். இந்தப் படத்தின் கதாநாயகி பெயர் பாடினி. அருமையான இலக்கியத் தமிழ்ப் பெயர். அவர்கள் தமிழில் பேசுவதே அழகு. அழகான பெண் தமிழில் பேசினால் அதைவிட அழகு. அதனால் இனிமேல் அழகான பெண்கள் தமிழில் பேசி, தமிழைக் காப்பாற்ற வேண்டும்.
சென்னையைப் பொறுத்தவரை எல்லாருக்கும் டேக் டைவர்ஷன் தான். ஒரு கிலோ மீட்டருக்கு செல்லவேண்டிய தூரத்திற்கு, ஆறு கிலோமீட்டர் வரை டேக் டைவர்ஷன் எடுத்துச் செல்வோம். தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள்.. சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், 'டேக் டைவர்ஷன்' என்பது இயல்பான. பழகிப்போன, ஒரு பொருத்தமான தலைப்பு.
இன்றைய தேதியில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால், அதில் பெரிய ஹீரோ நடித்திருக்க வேண்டும் அல்லது கதை ஹீரோவாக இருக்க வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தருகிறார்கள். அந்தவகையில் டேக் டைவர்ஷனில் கதை தான் ஹீரோ.
இயக்குநர் ஷிவானி செந்தில் ஏற்கெனவே 'கார்கில்' என்ற ஒரே ஒரு நடிகர் நடித்த திரைப்படத்தை இயக்கியவர். அந்தப் படத்திலும் ஒரு புது முயற்சியை மேற்கொண்டவர். தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சிக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' படத்திற்கு ஆதரவு கிடைத்தது போல், அவரது 'இரவின் நிழல்' என்ற புதிய முயற்சிக்கும் ஆதரவு கிடைக்கும். அந்தப் படத்தை பார்த்து விட்டேன். பார்த்திபனின் புதிய முயற்சிக்குப் பாராட்டுகள். அவர் ஒரு தமிழ் இயக்குநர் என்பதால் நானும் பெருமிதம் அடைகிறேன்.
டேக் டைவர்ஷன் பலருக்கு நல்ல வழியை காட்டி விடும். இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிகராக வெற்றி பெறுவதற்காகத்தான் திரை உலகிற்கு வந்தார். ஆனால் அவர் டேக் டைவர்ஷன் எடுத்து இயக்குநராகி, பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். ஒரு கிராமவாசி திரை உலகில் நுழைந்து வெற்றிகரமான இயக்குநராக முடியும் என்பதை அவர் நிரூபித்தார். இதனால் நூற்றுக்கணக்கான கிராமத்து வாசிகள் இயக்குநர் கனவோடு தமிழ் திரையுலகில் படையெடுத்து வருகிறார்கள். அவர் வெற்றி அடைய வில்லை என்றால், இன்று பேரரசு உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் திரையுலகில் அறிமுகமாகி இருக்க மாட்டார்கள். அதனால் பல தருணங்களில் டேக் டைவர்ஷன் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஷிவானி செந்தில் இயக்கியிருக்கும் டேக் டைவர்ஷன் அவருக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, ஏற்றத்தை அளிக்க வேண்டும் .
திரையுலகைப் பொறுத்தவரை புதிய முயற்சிகள் தான் கவனத்தை கவர்ந்து வெற்றி பெற்று வரலாறாகும். என்னைப் பொறுத்தவரை பெரிய நடிகர்களை வைத்து வெற்றிப்படத்தை அளிக்கும் இயக்குநர்களை விட, புதுமுகங்களை வைத்து பெரிய வெற்றியை வழங்குபவர்கள் தான் சிறந்த இயக்குநர்கள். அதுபோன்றதொரு வெற்றியை இயக்குநர் ஷிவானி செந்தில் பெறுவார். நான் இன்னும் முழுமையான இயக்குநராக வெற்றி பெறவில்லை. நான் எப்போது புதுமுகங்களை வைத்து படம் எடுத்து வெற்றி பெறுகிறேனோ அப்போதுதான் முழுமையான இயக்குநராவேன். 'திருப்பாச்சி', 'சிவகாசி', 'திருப்பதி' இந்தப் படங்கள் எல்லாம் பெற்ற வெற்றி ஒரு மாய வெற்றிதான். இந்த மாதிரியான வெற்றி ஒரு குறிப்பிட்ட ரசிகர்களுக்கு நிறைவைத் தந்தாலும், புதுமுகங்களை வைத்து படம் இயக்கி அந்தப் படம் வெற்றி பெறும் போது தான் ஒட்டுமொத்த திரையுலகமும் ஆரோக்கியமாகப் பயணிக்கும். அந்தப் பயணத்தில் டேக் டைவர்ஷன் படமும் இடம் பெற வாழ்த்துகிறேன்'' என்றார்.
இயக்குநர் ஷிவானி செந்தில் பேசுகையில்,
'' நேராகப் பயணிக்க வேண்டிய பயணத்தில் டேக் டைவர்ஷன் இருந்தால் ஒரு மாற்றுப்பாதையில் பயணிக்க வேண்டியிருக்கும். முதலில் தயக்கம் இருந்தாலும், டென்ஷன் ஏற்பட்டாலும், பயணித்தால்... சென்றடைய வேண்டிய இலக்கு நல்லதாகவே இருக்கும். இந்தத் திரைப்படத்தில் உங்களுக்கு டேக் டைவர்ஷன் ஏற்பட்டால், அதனால் ஏற்படும் டென்ஷனைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பதை மையப்படுத்தி இருக்கிறேன். வாழ்க்கையே ஒரு டேக் டைவர்ஷன் தான். இயக்குநர் பேரரசு குறிப்பிட்டதைப் போல் டேக் டைவர்ஷனால் நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள் ஏராளம். இந்தப்படத்திலும் டென்ஷனை ஏற்றுக்கொண்டு டேக் டைவர்ஷனில் பயணித்தால் நமக்கும் பொக்கிஷங்கள் கிடைக்கும் என்பதைச் சுவராசியமாக சொல்லி இருக்கிறேன்.
ஒரே நாளில் நடைபெறும் கதை. அதிலும் பயணம் தொடர்பான கதை என்பதால் முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய நடிகர், நடிகைகளுக்கும், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் சினிமாவில் சாதிக்க ஆசைப்படுவேன். அதனை கடவுள் வெவ்வேறு நண்பர்களின் ரூபத்தில் நிறைவேற்றி வைப்பார்; வைத்திருக்கிறார். இந்தப்படத்தின் ட்ரெய்லரை நாயகன் சிவகுமார் மூலமாக கே ஜி எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பாராட்டினார். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களும் இப்படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது எனப் பாராட்டினார். இது போன்ற பாராட்டுகள் என்னை உற்சாகமடைய வைத்திருக்கின்றன.
என்னைப்பொறுத்தவரை ஒரு கனவு நனவாக வேண்டும் என்றால், உழைப்பு மட்டும் போதாது. மக்களின் கைகளில்தான் இருக்கிறது. டேக் டைவர்ஷன் படைப்பை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று முழுமையாக நம்புகிறேன். என்னுடைய கனவிற்கும் நிஜத்திற்கும் இடையில் இருப்பவர்கள் மக்கள். அதனால் அவர்களின் ஆதரவை வேண்டுகிறேன்.'' என்றார்.
இந்நிகழ்வில் படத்தின் நாயகன் சிவக்குமார், நடிகர் ராம்ஸ், நடிகை பாடினி குமார், ஒளிப்பதிவாளர் ஈஸ்வரன் தங்கவேல், படத்தொகுப்பாளர் விது விஷ்வா, இசை அமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் தயாரிப்பாளர் சுபா செந்தில் உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
- உலக செய்திகள்
- |
- சினிமா