சற்று முன்
சினிமா செய்திகள்
புதிய திரைப்படங்களுக்கு இலவச டிக்கட்டுகள் !
Updated on : 09 January 2022

எமோஷனல் எண்டர்டெயின்மென்ட் நெட் வொர்க் நிறுவனம் ஒரு புதிய ஓ.டி.டி.தளத்தை துவக்கி உள்ளது. தியேட்டர் ஹுட் . காம் என அதற்கு பெயர் சூட்டியுள்ளது. ஜனவரி 15-ந் (2022) தேதி முதல் மக்களின் பார்வைக்கு படங்களை ஒளிபரப்ப உள்ளது.
இதன் விவரம் வருமாறு :-
அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்டபொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் எண்டர்டெயின்மெண்ட்நெட்வொர்க் புதிய ஓ.டி.டி.ஸ்ட்ரியில் தளத்தை theatre hoods.com என்ற பிராண்ட் பெயரில் 2022 ஜனவரி 15 ஆம் தேதி இந்தியா மற்றும் உலக அளவில் வெளியிடுகிறது. இது சினிமா தியேட்டர் மற்றும் ஓ.டி.டி. அது பண்தை இணைத்து கொண்டுவருகிறது. அனைத்து இந்திய பிராந்தியமொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளில் திரைப்படங்கள், தொடர்கள், டி.வி.நிகழ்ச்சிகள்| இசை போன்ற உள்ளடக்கங்களை ஒரே தளத்தில் கண்டு மகிழலலாம். திரையரங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கான இலவச டிக்கட்டுகளையும், அவர்களின் ஓ.டி.டி.இயங்குதளத்தில் வரம்பற்ற உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தையும் வழங்குகிறார்கள்.
அவர்களின் இந்திய பிராந்திய சந்தைபடுத்துதல் பற்றி இதன் தலைவர் பிரசாத் வசிகரன் கூறுகையில், " இந்திய சினிமா ஆர்வலர்களை நாங்கள் ஆழமாக புரிந்துகொண்டுள்ளோம். நமது சினிமாக்களை பற்றி நான் பெருமைப்படுகிறேன். அது நம் வாழ்க்கையில் ஒரு பகுதியாக உள்ளது. அது நம் உணர்வுடன் கலந்திருக்கிறது.
எங்களது ஓ.டி.டி. இணையதளத்தில் பயனாளர்களுக்கு ஒவ்வொரு கணமும் சுவாரஸ்யமாக்குவதை எங்கள் முதன்மையான குறிக்கோளாக கொண்டுள்ளோம். நாங்கள் உலகத்தரம் வாய்ந்த உள்ளடக்கத்தை வழங்குகிறோம். ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பிராந்திய மொழிகள் உள்ளடக்க நூலகத்தையும் , ஆயிரம் அசல் திரைப்படங்கள் மற்றும் தொடர்களையும் உருவாக்கி வருகிறோம். இப்பொழுது மிகக்குறைவான திரைப்படங்களே ஓ.டி.டி. தளங்களில் நேரடியாக திரையிடப்படுகின்றன. மேலும் பெரிய படங்கள் பெரும்பாலும் திரையரங்குகளில் வெளியாகிறது. சினிமா ரசிகர்கள் ஓ.டி.டி.யில் படங்களை பார்க்க 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்கிறார்கள். மேலும் சினிமா தியேட்டர் அனுபவங்கள் வித்தியாசமானவை. இந்த கிடைவெளியை நிரப்ப நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியாவில் திரையாங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கான, இலவச டிக்கட்டுகளையும், எங்கள் தியேட்டர்ஹுட்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வரம்பற்ற உள்ளடக்கத்தை பார்க்கும் அனுபவத்தையும் இணைத்து வழங்குகிறோம். இது இணையம் மற்றும் ஆண்ட்ராய்டு , ஐஓஎஸ் மொபைல் ஆப்களில் உலகம் முழுவதும் கிடைக்கிறது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், உள்ளடக்க படைப்பாளர்களை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மில்லியன் கணக்கான சினிமா ரசிகர்களை கவரும் வண்ணம் அவர்கள் எதிர்பார்க்கும் திரைப்படங்களின் விளம்பரங்களை அவர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். என்று கூறுகிறார்.
சமீபத்திய செய்திகள்
சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப்படத்தையும் தயாரிக்கக் கூடாது !
வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது.. முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.
நாயகன் வெற்றி, நாயகி அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய நட்சத்திரங்களும் இந்த இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளனர். ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹமத், விஜே முபாசிர் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர்.
இந்தப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, பிரவீண் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், தம்பிராமையா, சீனுராமசாமி ஆகியோருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டார். ஜீவி-2 படத்தின் இசைத்தட்டை சீமான் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்
இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் விஜே கோபிநாத் பேசும்போது, “ஜீவி முதல் பாகம் ரிலீசான அன்றே அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மறுநாளே எனக்கு அடுத்த படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. விஷ்ணு விஷாலை வைத்து படம் இயக்குவதாக முடிவாகி கொரோனா காலகட்டம் காரணமாக அது தள்ளிப்போனது. அந்தசமயத்தில். தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் கார்த்தி கொடுத்த உற்சாகம் காரணமாக உருவானதுதான் ஜீவி-2 படத்தின் கதை.
முதல் பாகத்திற்கு கதை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்த கதாசிரியர் பாபு தமிழ் தான் இயக்கும் படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்ததால் இந்த கதையை நானே 2 நாட்களில் உருவாக்கினேன். இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டியதன் அவசியம் குறித்து அரை மணி நேரம் விளக்கம் அளித்தார். அதன்பின் தான் எனக்கு மனம் நிறைவடைந்தது. இன்னும் உலக அளவில் அதிக பார்வையாளர்களை சென்றடையும் என்கிற மகிழ்ச்சியும் ஏற்பட்டது” என்று கூறினார்.
இந்த படத்தை ஆஹா தமிழ் ஓடிட்டு தளத்தில் வெளியிடும் அதன் சிஇஓ சீகா பேசும்போது, “நேரடியாக படங்கள் ஓடிடியில் வெளியாவதை விட தியேட்டரில் வெளியானபின் இங்கு வந்தால் தான் எங்களுக்கு அது சக்சஸ். தமிழ் மக்களை உயர்வாக காட்டும் படங்களை வெளியிடுவது தான் எங்களது குறிக்கோள். விரைவில் எங்களது தளத்தில் ஒரு முக்கியமான பிரபலத்தை வைத்து ரியாலிட்டி ஷோ ஒன்றையும் துவங்க இருக்கிறோம்.
ஜீவி முதல் பாகத்திற்கு ஆஹாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.. அந்தவகையில் ஜீவி-2 நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாவது எங்களுக்கு பெருமை தான். 160 நாடுகளில் இந்த படத்தை பார்த்து ரசிக்க முடியும். சமீபத்தில் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் படமும் எங்களுக்கு கிடைத்தது ஒரு கௌரவம். இயக்குனர் சீனுராமசாமியை பொருத்தவரை எங்களது நிறுவனத்தின் தூதராகவே மாறிவிட்டார் என சொல்லும் அளவிற்கு அவரது படத்தை புரமோட் செய்து வருகிறார். படத்தில் பங்குபெறும் அனைத்து கலைஞர்களும் இதுபோல தங்களது பட்ங்களை புரமோட் செய்ய முன்வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் பேசும்போது, “ஜீவி-2 மாதிரியான படங்களுக்கு ஆஹா ஓடிடி தளம் சரியான பிளாட்பார்ம். இந்த படத்தின் இயக்குனர் விஜே கோபிநாத் ஒரு அறிவுஜீவி என்று சொல்லலாம். இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்தாலும் மனநிறைவாக இருந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அது நல்ல படங்களைத் தான் எடுப்பேன் என பிடிவாதம் பிடிக்கும் கெட்ட பழக்கம். இந்த பழக்கம் தொடர்ந்து அவரிடம் இருக்க வேண்டும். அதே போல ஆஹா ஓடிடி தளம் நாடகங்களையும் ஒளிபரப்ப முன்வரவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
நாயகி அஸ்வினி பேசும்போது, “ஜீவி படம் தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு நல்ல என்ட்ரி ஆக அமைந்தது நான் பணியாற்றிய படங்களிலேயே ஜீவி முதல் பாகம், இரண்டாம் பாகம் என இரண்டு படங்களுக்கும் மிகச்சிறந்த தயாரிப்பாளர்கள் கிடைத்து விட்டனர். முதல் பாகத்தில் பாடல் காட்சி தருவதாக சொல்லி ஏமாற்றி விட்டார்கள். ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் அந்த குறை தீர்ந்து விட்டது” என்று கூறினார்.
நாயகன் வெற்றி பேசும்போது, ‘ஆந்திராவில் நான் செல்லுமிடங்களில் பலர் என்னை அடையாளம் கண்டு கொண்டு பேசுகிறார்கள் என்றால் அதற்கு ஜீவி திரைப்படம் ஆஹா ஓடிடி தளம் மூலமாக தெலுங்கு மக்களை சென்றடைந்தது தான் காரணம். நிச்சயமாக இந்த நிறுவனத்தினர் இந்த இரண்டாம் பாகத்தையும் இன்னும் பிரமாதமாக கொண்டு சேர்ப்பார்கள்.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு போன்ற பிரம்மாண்டமான படத்தை தயாரித்துவிட்டு, ஜீவி-2 போன்ற சிறிய படத்தை தயாரிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.. ஆனால் கதை மேல் கொண்ட நம்பிக்கை காரணமாக அவர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அவருக்கு என் நன்றி” என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் தம்பிராமையா பேசும்போது, ‘பெரும்பாலும் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு முன் இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கும் ஆனால் ஜீவி-2 படக்குழுவினர் குறுகிய காலத்திலேயே இரண்டாம் பாகத்தையும் எடுத்துவிட்டனர். நாயகன் வெற்றி ஒரு படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்றால் அதில் நிச்சயமாக ஏதாவது இருக்கும் என நம்பலாம். இந்தப்படம் உயரத்தை தொடுமா என சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் தயாரிப்பாளருக்கு துயரத்தை தராது என்று தாராளமாக சொல்லலாம். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ராஜா கிளி மூலம் மீண்டும் இயக்குனராக மாறியுள்ளேன்.. அதனால் இனி நிறைய படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்துள்ளேன்” என்று கூறினார்.
இயக்குநர் சீனுராமசாமி பேசும்போது, “தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் போல, தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி போல முக்கியமான தயாரிப்பாளராக இருக்கிறார். அவரிடம் கதை அறிவும் நேர்மையான வணிகமும் இருக்கிறது. மாமனிதன் ரிலீஸ் சமயத்தில் எனக்கு ரொம்பவே உதவியாக இருந்து சிசேரியனாக மாற இருந்த அந்த படத்தை சுகப்பிரசவமாக வெளியிட உறுதுணையாக நின்றார். தியேட்டர் மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் கிடையாது. காரணம் என்னுடைய மாமனிதன் படம் தியேட்டர்களில் வெளியாகி யாருக்குமே தெரியாமல் போயிருக்க வேண்டிய சூழலில், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியானதன் மூலம் 160 நாடுகளில் உள்ள பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. வெற்றியின் கண்களில் ஒரு அன்பு தெரிகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய முகமாக அவர் இருப்பார். பிரேம்ஜி பாடியுள்ள டயர்டா இருக்கு என்கிற பாடல் உற்சாகத்தை ஊட்டும் விதமாக இருக்கிறது. விமர்சகர்கள் எல்லா படத்துக்கும் ஒரே தராசு கொண்டு அளவிடக்கூடாது என்று பேசினார்.
இயக்குனர் கே.பாக்யராஜ் பேசும்போது, “முன்பெல்லாம் இயக்குனர்கள் தான் ஹீரோக்களை உருவாக்குவார்கள். ஆனால் இப்போது கேப்டன் ஆப் தி ஷிப் என்றால் அது ஹீரோ என்று மாறிவிட்டது. ஹீரோ கைகாட்டுபவர் தான் இயக்குனர் என்கிற நிலை உருவாகிவிட்டது. அதேசமயம் நடிகர் வெற்றி விஜே கோபிநாத்தை இயக்குனராக தேர்ந்தெடுத்து, அவர் மீது வைத்த நம்பிக்கையை காட்டிவிட்டார்.
இன்று சினிமாவை பற்றிய புரிதல் இல்லாமல் பலர் இருக்கிறார்கள். திரைக்கதையில் உருவாக்கப்படும் ஒரு காட்சியைக் கூட ஏதோ எடிட்டர் செய்தது போன்று நினைத்துக் கொள்கிறார்கள். இயக்குனர் கோபிநாத்துக்கு சுரேஷ் காமாட்சி கொடுத்த விளக்கம் எனக்கு சமாதானம் ஆகவில்லை. ஓடிடி தளத்தில் வெளியிடுவது பாதுகாப்பானது தான் என்றாலும் தியேட்டரில் வெளியாகி விட்டு பின்னர் ஓடிடிக்கு வந்தால் நன்றாக இருக்கும்..
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பொருத்தவரை எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர். எனது மகன் சாந்தனுவின் படத்திற்கு ராமநாதபுரம் படப்பிடிப்பின்போது ஒரு பிரச்சினை ஏற்பட்டது. அந்த சமயத்தில் சுரேஷ் காமாட்சியை அணுகியபோது தன்னுடைய வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடன் ராமநாதபுரத்திற்கு நேரில் வந்து மூன்று நாட்கள் கூடவே இருந்து அதை சரிசெய்து கொடுத்தார். இது போன்றவர்களை சினிமாவில் பார்ப்பது அரிது” என்று கூறினார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “எனக்கு பிடித்த கதைகளாகத்தான் தேர்ந்தெடுக்கிறேன் என்றாலும் எனக்கு மட்டும் பிடித்தால் போதாது.. ரசிகர்களுக்கும் பிடிக்கவேண்டும். சின்ன படங்களுக்கு ஓபனிங் கிடைப[ப்பது கஷ்டமாக இருக்கிறது. மாமனிதன் படம் கூட அப்படித்தான். அதேசமயம் ஓடிடியில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. வெற்றி நல்ல நடிகர். இப்படி இரண்டாம் பாகத்தை தயாரிக்க போகிறேன் என்றதும் அவரது தந்தை வெள்ளப்பாண்டி கதைக்கான எந்த உரிமையும் கோராமல் என்னிடம் தந்தார். எங்களது தயாரிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது போல, இந்த ஜீவி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும். தியேட்டர் நெருக்கடிகள் காரணமாக தான் இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம்” என்றார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, ‘தம்பி ராமையா இங்கு பேசியது போல அவர் படங்களில் நடிப்பதை குறைக்கக் கூடாது. அப்படி செய்தால் அவர் வீட்டு வாசலில் முற்றுகையிடுவோம்” என்று அன்புடன் எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர் பேசும்போது, “ஆஹா ஓடிடி தளத்தை தமிழிலும் கொண்டுவர வேண்டுமென அவர்கள் நினைத்ததற்காகவே அவர்களை பாராட்டலாம். எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ் தானே கிடைக்கிறது. தம்பி சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக விட்டாலும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கில் வெளியான கொண்டபெல்லம் என்கிற படத்தை ஓடிடி தளத்தில் தான் பார்த்தேன்.. அவ்வளவு நேர்த்தியான படம் தியேட்டர்களில் வெளியானதா என்று கூட தெரியாது. ஆனால் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தம்பி சுரேஷ் காமாட்சி சினிமா மீது தீராத பற்று கொண்டவன். பணத்தை சம்பாதித்து வைத்திருக்கிறானோ இல்லையோ நல்ல நண்பர்களை சேர்த்து வைத்திருக்கிறான். அதில்தான் அவனது வண்டி ஓடுகிறது என்று நினைக்கிறேன். சிறிய முதலீட்டு படங்களுக்கு தியேட்டர்களில் இடம் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் வெள்ளப்பாண்டி, தன் மகன் என அறிமுகப்படுத்தாமல் ஒரு தகுதியான கலைஞனை தான் அறிமுகம் செய்திருக்கிறார்.
விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு கூட 10 கோடி, 20 கோடி என அரசுகள் போட்டி போட்டு பரிசு வழங்குகின்றனர். ஆனால் விருது வென்று வரும் படைப்பாளிகளுக்கு பாராமுகம் காட்டுகின்றன. சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப்படத்தையும் தயாரிக்கக் கூடாது.. நிச்சயமாக ஒருநாள் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும்.. அந்த நாளும் வரத்தான் போகிறது” என்று கூறினார்
கார்த்திக்கு மாலை அணிவித்த விநியோகஸ்தர்
கார்த்தி நடிப்பில் வெளியான 'விருமன்' திரைப்படம், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்று, வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம், வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் முதல் நாள் வசூல், 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு கிடைத்த வசூலை விட மூன்று மடங்கு கூடுதல் தகவல் வெளியானது. இதனால் உற்சாகமடைந்த படத்தை தமிழகம் முழுவதும் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, இயக்குவர் முத்தையா, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு மாலை அணிவித்து வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்.
கார்த்தி முத்தையா கூட்டணியில் உருவான 'விருமன்' வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீதா ராமம்' பட குழுவுடன் லைகா இணைந்து பணியாற்றியது பெருமையாக உள்ளது - தமிழ் குமரன்
வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த 'சீதா ராமம்' எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் செய்தியாகவும் 'சீதா ராமம்' பெரிய வெற்றியைப் பெற்றதால், சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினர் வெற்றி விழாவை கொண்டாடினர். இவ்விழாவில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், படத்தில் இயக்குநர் ஹனு ராகவபுடி, கதாநாயகன் துல்கர் சல்மான், படத்தை தமிழில் வெளியிட்ட லைகா நிறுவனத்தில் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே. தமிழ் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் லைகா தமிழ் குமரன் பேசுகையில், '' சீதாராமம் படத்தின் வெற்றிக்கு கடுமையாக உழைத்த பட குழுவினருக்கு லைகா நிறுவனத் தலைவர் சுபாஷ்கரன் அவர்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டது பெருமிதமாக உள்ளது. நாங்கள் தயாரிக்கும் படங்களை மட்டுமல்லாமல் வேறு தயாரிப்பாளர்கள் தயாரித்த 'புஷ்பா', 'ஆர். ஆர். ஆர்', 'டான்' என அடுத்தடுத்து படங்களை வெளியிட்டோம். அந்த வரிசையில் தற்போது 'சீதா ராமம்' படத்தை வெளியிட்டோம். இந்தப் படத்தை மைல் கல்லாகவே கருதுகிறோம். 'சீதா ராமம்' படத்தின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விட்டதாக தெரிவித்தனர். எதிர்பாராத பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கும் 'சீதா ராமம்' பட குழுவுடன் லைகா இணைந்து பணியாற்றியது பெருமையாக உள்ளது.'' என்றார்.
இயக்குநர் ஹனுராகவ புடி பேசுகையில், '' சீதாராமம் படத்திற்கு தமிழ் ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவும், வரவேற்பும் மறக்க இயலாததாக அனுபவமாக இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் 'சீதா ராமம்' திரைப்படத்தை கொண்டாடுவதை காணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பட வெளியிட்டிற்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிற்கும், 'சீதா ராமம்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்விலும் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த தருணத்தில் படத்தின் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டிருந்ததால் நானும், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகரரும் கலந்து கொள்ள இயலவில்லை. இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
தரமான படைப்புகளாக இருந்தால் அதனை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு கொண்டாடுவார்கள் என்பதை 'சீதாராமம்' மூலம் உணர்ந்திருக்கிறேன். படத்தின் உலகளாவிய வெற்றிக்கு நீங்கள் அளித்த ஆதரவும் ஒரு காரணம். இந்தப் படத்தில் வெவ்வேறு பிராந்தியங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் இடம் பெற்றதால் அவற்றை இணைப்பதிலும், அதனை நேர்த்தியாக வழங்குவதிலும் எதிர்பாராத பல சிரமங்கள் இருந்தன. இருப்பினும் படக்குழுவினர் கடினமாக உழைத்து 'சீதா ராமம்' படைப்பை உருவாக்கினோம். குறிப்பாக காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது இரவு நேரத்தில் பணியாற்றியபோது தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகளும் அங்கு நிலவும் பருவநிலையை எதிர்கொண்டு, போர்க்கால சூழலை போல் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். '' என்றார்.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசுகையில், '' இயக்குநர் ஹனு ராகவ புடி என்னை தெலுங்கில் அறிமுகப்படுத்தினார். அவருடன் மூன்று படங்களில் தொடர்ந்து பணியாற்றிருக்கிறேன். 'சீதா ராமம்' படத்தின் மூலம் என்னை புதிதாக திரை இசையுலகிற்கு அடையாளப்படுத்தி இருக்கிறார். இதற்காக இந்த தருணத்தில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் நாயகன், நாயகி, இடைவேளை, உச்சகட்ட காட்சி என ஒவ்வொரு தருணத்திலும் இடம் பெற்ற பின்னணியிசையை தனியாக பதிவு செய்து, அதனை என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இணைத்து, ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பையும், ஆதரவையும், பாராட்டையும் வழங்கி இருக்கிறார்கள். இந்த வகையிலான பாராட்டு புதிது என்பதால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து திரைப்படங்களுக்கு சிரத்தையுடன் உழைக்க வேண்டும் என்ற பொறுப்பும் அதிகரித்திருக்கிறது. 'சீதா ராமம்' படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பிரம்மாண்டமான பட்ஜெட்டுகளில் தயாராகும் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. '' என்றார்.
நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், '' 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை போலவே வித்தியாசமாக உருவான 'சீதா ராமம்' படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் அளித்த ஆதரவு, வித்தியாசமான படைப்புகளுக்கு உங்களின் ஆதரவு உண்டு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
'சீதா ராமம்' என்ற படமே ஒரு கனவு போன்றது. இயக்குநர் ஹனு, கதையை சொல்லும் போது இது ஒரு காவிய காதல் கதை என்பது மட்டும் புரிந்தது. இதற்கு முன் கேட்காத காதல் கதையாகவும் இருந்தது. கதையை முழுவதும் கேட்டதும் அசலாக இருந்தது. ஏனெனில் இயக்குநர் இந்த கதையை அவரது மனதின் அடியாழத்திலிருந்து எழுதியிருந்தார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு போர் போல் நடைபெற்றது. இயக்குநர் என்ன சொன்னாரோ.. அதனை ஒட்டுமொத்த பட குழுவினரும் மறுப்பே சொல்லாமல் பின்பற்றினோம்.
படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சிறந்த கலைஞர்கள் நடித்தனர். ரஷ்மிகா மந்தானா, பிரகாஷ் ராஜ், வெண்ணிலா கிஷோர் என தெலுங்கு, இந்தி, பெங்காலி திரைத்துறையில் நட்சத்திர அந்தஸ்தில் உள்ள கலைஞர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் ராம் எனும் கதாபாத்திரம் என் வாழ்க்கையில் மறக்க இயலாத வேடம். இந்தப் படத்தை இதுவரை நான்கைந்து முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் இசை என்னை முழுதாக ஆக்கிரமிக்கிறது. 'சீதா ராமம்' படத்தை திரையரங்குகளுக்கு சென்று காண்பதில் தான் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்பதையும் உணர்ந்தேன்.
இயக்குநரிடம் கதை கேட்கும் போது கூட கடிதம் எழுதும் பழக்கம் தற்போது பெரியளவில் இல்லை என்பதால் எப்படி வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஏராளமானவர்கள் மீண்டும் கடிதம் எழுத தொடங்கி இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு தாளில் கடிதம் எழுதி, அதனை புகைப்படமாக எடுத்து, என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகிறார்கள். இத்தகைய டிஜிட்டல் கடித வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது.
பட வெளியிட்டிற்கு முன்னர் இந்த படத்தை எப்படி விளம்பரப்படுத்துவது என்பது எங்களுக்கு தெரியாதிருந்தது. ஆனால் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரப்படுத்தி இருக்கலாமே..! என தற்போது நினைக்கிறோம். இருப்பினும் இந்த திரைப்படத்தை எதிர்பாராத வகையில் பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.
ஓடிடி தளத்தில் விரைவில் ஜீவி-2
கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி..
இயக்குநர் விஜே கோபிநாத் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது.
மாநாடு என்கிற வெற்றி படத்தை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரித்துள்ளது.
முதல் பாகத்தில் இடம்பெற்ற அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி உள்ளிட்ட கலைஞர்களும் அதே தொழில்நுட்பக் குழுவினரும் தான் இந்தப்படத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
ஒய்ஜி மகேந்திரன், நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத் உள்ளிட்ட வெகு சிலர்தான் இந்த இரண்டாம் பாகத்தில் புதிதாக இணைந்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்தப்படம் நேரடியாக "ஆஹா" ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்தநிலையில் படத்தின் நாயகன் வெற்றி இரண்டாம் பாகத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“எட்டு தோட்டாக்கள், ஜீவி, ஜீவி 2 என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீரியஸான படங்களிலேயே நீங்கள் நடிக்கிறீர்களே?! எனக் கேட்கிறார்கள்..
"அப்படி படம் பண்ணினால் தானே கூட்டத்தை கூட்ட முடியும்? முதலில் ஒரு பார்வையாளராக, படம் பார்க்கும்போது எனக்கு போர் அடிக்காமல் இருக்க வேண்டும்.. நாலு நண்பர்கள், ஒரு காதலி, டூயட் இவற்றுடன் வலுவான கதையும் இருந்தால் அதிலும் நடிப்பதற்கு எனக்கு தயக்கம் இல்லை. நான் தற்போது நடித்துவரும் பம்பர் படம் அப்படிப்பட்ட ஒன்றுதான்".
"ஜீவி-2 எடுக்கப் போகிறோம் என்று சொன்னதுமே எல்லோருமே சொன்ன ஒரே பதில் ‘நாங்கள் வெயிட்டிங்’ என்பதுதான்"..
"ஆஹா" ஓடிடி தளத்தில் 19ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் போல் இதுவும் ரசிகர்களை இழுத்துக் கொள்ளும்."
"படத்தில் இடம் பெற்றுள்ளது போல முக்கோண விதி, தொடர்பியல் போன்ற விஷயங்களை நிஜத்தில் நான் உணர்ந்ததில்லை. ஆனால் கர்மா என ஒன்று இருப்பதையும் நாம் ஏதாவது தவறு செய்தால் நமக்கு அது திருப்பி அடிக்கும் என்பதையும் நம்புகிறேன்"..
"அதே சமயம் ஜீவி படம் பார்த்துவிட்டு நிறைய பேர், தங்கள் வாழ்க்கையில் இதுபோன்று நிகழ்வுகள் நடந்திருப்பதாக கூறியபோது ஆச்சரியப்பட்டேன்".
"ஜீவி 2 படப்பிடிப்பை திட்டமிட்டு அழகாக அதே வேளையில் படத்தின் பிரமிப்பில் குறைவில்லாமல் முடித்துள்ளோம்".
" இந்த படத்தில் நடித்தது ஒரு ரீ-யூனியன் போல தான் இருந்தது".
"எங்கள் குழு "ஜீவி" இவ்வளவு வரவேற்பு பெறும் என்றோ அதற்கு இரண்டாம் பாகம் உருவாகும் என்றோ நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை என்று கூறி தங்களது வியப்பை வெளிப்படுத்தினார்கள்".
"ஒய்.ஜி.மகேந்திரன் போன்ற சீனியர் நடிகருடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது".
"முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரியாக இடம் பெற்ற மலையாள நடிகர் அணில் முரளியின் மறைவு துரதிஷ்டவசமானது. அவருக்குப் பதிலாக அந்த கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடிகர் நாசரின் சகோதரர் அஹ்மத் நடித்துள்ளார்."
லாக்டவுன் சமயத்தில் தான் ஜீவி-2 எடுக்கலாம் என இயக்குநர் கோபி முடிவு செய்தார். அதே சமயம் இந்த படத்தின் முதல் பாகத்திற்கு கதை எழுதிய பாபு தமிழ் அடுத்ததாக புதிய படம் இயக்கும் வேலைகளில் இறங்கி விட்டதால் ஜீவி 2 படத்தில் அவரால் பங்களிக்க இயலவில்லை. அதனால் கோபிநாத்தே இந்த முழு ஸ்கிரிப்ட்டையும் எழுதி விட்டார்.
இப்போது ஜீவி-2 முடிந்ததுமே இதற்கு மூன்றாம் பாகம் உருவாகுமா என பலரும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த படத்திற்கு கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பும் விமர்சனங்களும் தான் அதை முடிவுசெய்ய வேண்டும்.
இந்த படத்தில் நடித்து முடித்தபோது ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை மிக திருப்தியாக முடித்துள்ளோம் என்கிற எண்ணம் தான் எழுந்தது. மீண்டும் இதே குழுவுடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்றும் ஆசையும் இருக்கிறது. ஆனால் அது மூன்றாம் பாகமா என்பது தெரியாது” என சஸ்பென்ஸ் வைத்து முடிக்கிறார் நடிகர் வெற்றி.
33 கோடி ரூபாய் வசூலில் சாதனை செய்த 'சீதா ராமம்'
துல்கர் சல்மான்- ஹனு ராகவபுடி - வைஜெயந்தி மூவிஸ் = ஸ்வப்னா சினிமா கூட்டணியில் உருவான ‘சீதா ராமம்’ வெளியான ஐந்தே நாட்களில் 33 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. ‘சீதா ராமம்’ படத்தின் வசூல் பயணம், சாதனையுடன் தொடரும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
காவிய காதல் கதையான 'சீதா ராமம்' கதையை பார்வையாளர்களும், விமர்சகர்களும் எல்லையற்ற வகையில் காதலித்து வருகின்றனர். போரின் பின்னணியில் நடைபெறும் உணர்வுபூர்வமான காதல் கதை என்பதால், பார்வையாளர்களுக்கு மனதிற்கு நெருக்கமான சுகானுபவத்தை அளித்து வருகிறது.
திரை காதல் ஜோடிகளான துல்கர் சல்மான் மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகியோரின் தனித்துவமான நடிப்பு... இயக்குநர் ஹனுராகவபுடியின் கவித்துவமான எழுத்து மற்றும் பிரத்யேகமான இயக்கம். .. விஷால் சந்திரசேகரின் மதிமயக்கும் இசை... பி எஸ் வினோத்தின் வியக்கத்தக்க ஒளிப்பதிவு.. ஸ்வப்னா சினிமா - வைஜெயந்தி மூவிஸ் போன்ற முன்னணி படத் தயாரிப்பு நிறுவனத்தின் தரமான தயாரிப்பு மற்றும் வெளியீடு... ஆகிய காரணங்களுக்காகவும் இப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
நடிகர் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்த காவிய காதல் கதையான 'சீதா ராமம்', உலகம் முழுவதும் பார்வையாளர்களின் இதயங்களை வென்று வருகிறது. படம் வெளியான தருணத்திலிருந்து ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் வசூல் ஏறுமுகத்துடன் தொடர்கிறது.
இதுநாள் வரை நீடித்த இப்படத்தின் வசூல் வேகம், செவ்வாய் கிழமையன்று, கடந்த அனைத்து நாட்களையும் விட வேகமெடுத்தது. பொதுவிடுமுறை மற்றும் மக்களின் நேர்மறையான வாய்மொழி விமர்சனங்களால் திரையரங்குகளை நோக்கி ஏராளமானவர்கள் படையெடுத்ததால், திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பிவழிந்தன. இதன் காரணத்தால் செவ்வாய் கிழமையுடன் நிறைவடைந்த ஐந்து நாட்களில் ‘சீதா ராமம்’ உலகளவில் 33 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் மட்டுமல்லாமல் சிறுநகரங்களில் இருக்கும் ஒற்றை திரையரங்குகளிலும் 'சீதா ராமம்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்க்கப்பட்டதை அதிகமாக வசூலிக்கும் என திரை உலக வணிகர்கள் கணித்துள்ளனர். மேலும் இப்படத்தின் வசூல் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பாக்ஸ் ஆபிஸிலும் இந்த படம், செவ்வாய் கிழமையன்று பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அன்று மட்டும் 90K டாலர்களுக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை படத்தின் மொத்த வசூல் 750 K டாலரைக் கடந்துள்ளது. வார இறுதிக்குள் 'சீதா ராமம்' படத்திற்கு ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் விளையாட்டு வீரர்களுக்கு நன்றி தெரிவித்த வீடியோ வைரல் !
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை வென்றெடுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பான் இந்திய சூப்பர் ஸ்டாரான நடிகர் பிரபாஸ் வாழ்த்துகளுடன் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.
'பாகுபலி' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி, பான் இந்திய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் ' டார்லிங்' நடிகர் பிரபாஸ். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இவரை கோடிக் கணக்கிலான பார்வையாளர்கள் பின் தொடர்கிறார்கள். சமூக முன்னேற்றம், சமூக நல்லிணக்கம், தேச பக்தி, தேசப்பற்று போன்ற விசயங்களில் தன்னுடைய முதன்மையான நேர்மறை விமர்சனத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இவர், இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்ஹாம் எனும் இடத்தில் நடைபெறும் 70-க்கும் மேற்பட்ட காமன்வெல்த் நாடுகள் கலந்து கொண்ட 22 வது காமன்வெல்த் போட்டிகளில், இந்தியா சார்பில் இடம்பெற்ற வீரர் வீராங்கனைகளில், தங்கப்பதக்கம், வெள்ளி பதக்கம், வெண்கலம் பதக்கம் வென்ற அறுபதுக்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகளின் பதக்க பட்டியலின் புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...
'' எங்களை பெருமைப்படுத்தியதற்காகவும், நமது தேசத்திற்கு பெருமை சேர்த்ததற்காகவும் அனைத்து சாம்பியன்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களுடைய அர்ப்பணிப்பிற்கும், உழைப்பிற்கும் நன்றி!!'' என பதிவிட்டிருக்கிறார்.
விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நன்றி தெரிவித்து வாழ்த்தியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனிடையே அண்மையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான தேசபக்தியை மையப்படுத்திய ' ஹர் கர் திரங்கா..' எனத் தொடங்கும் பாடலில் விளையாட்டுத்துறை மற்றும் திரையுலக துறையிலிருந்து ஏராளமான ஆளுமைகள் இடம்பெற்றனர். அதில் பிரபாசும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பான் இந்திய சூப்பர் ஸ்டாரான பிரபாஸ் தற்போது இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் 'ப்ராஜெக்ட் கே' எனும் படத்திலும், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் 'ஆதி புருஷ்' எனும் படத்திலும், 'கே ஜி எஃப்' பட புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படங்கள் அனைத்தும் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி படத்திலிருந்து திடீரென்று விலகிய ஒளிப்பதிவாளர் - காரணம் இதுதான் !
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ரஜினிகாந்த்தின் 169 ஆவது படம்0 "ஜெயிலர்". இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மனோஜ்பரமஹம்சாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் அதில் அதிரடி மாற்றம் நடந்திருக்கிறதாம்.
ஆடை, சிந்துபாத் மற்றும் இயக்குநர் நெல்சனோடு சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்திலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய விஜய்கார்த்திக்கண்ணன் "ஜெயிலர்" படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.
ஏன் இந்த திடீர் மாற்றம் என்றால், மனோஜ்பரமஹம்சாவிடம் அவருடைய தற்போதைய சம்பளத்தை விட குறைவான சம்பளத்தை வாங்கிக்கொள்ள கூறியதாகவும் அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் குறைந்த சம்பளத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்ட விஜய்கார்த்திக் கண்ணனை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் அதனால் இந்த திடீர் அதிரடி மாற்றம் என்று தகவல் வந்துள்ளது
உதயநிதிக்கு மட்டும் அனுமதி தருவார்களா? நமக்கு இல்லையா? - இயக்குனர் ஷங்கர் கொந்தளிப்பு
ஷங்கர் இயக்கும் இந்தியன் 2. பல தடைகளைக் தாண்டி மீண்டும் இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.
இந்த படத்தில் கமல், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சென்னை எழிலகம் அருகே உள்ளே பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பைப் பத்துநாட்கள் நடத்த அனுமதி கேட்டார்களாம். அங்கு அரசு அலுவல்கள் நடைபெறுவதால் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே அனுமதி என்ற விதிமுறையை கூறியிருக்கிறார்.
ஏற்கனவே மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படப்பிடிப்பு விதிமுறையின் படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது என்றும் ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால் திங்கட்கிழமையும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டும் அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதன்பின், கடும் முயற்சிகளுக்குப் பின் சிறப்பு அனுமதி பெற்று திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் படப்பிடிப்பு நடந்ததாம்.
இதனால் ஷங்கர் தரப்பில் இருந்து அவர்களுக்கு மட்டும் அனுமதி தருவார்களா? நமக்கு இல்லையா? என்று கேட்டதாகச் கேள்வி எழுப்பியதாகச் சொல்லப்படுகிறது.
விஷாலுக்கு விபத்து; மருத்துவமனையில் சிகிச்சை !
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம், ’மார்க் ஆண்டனி’.
எனிமி' படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில் விஷாலும் எஸ்.ஜே. சூர்யாவும் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்கள்.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ' பட நாயகி ரிது வர்மா நாயகியாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகிவருகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக பாடலும் ஆக்ஷனும் சேர்ந்த காட்சியை படக்குழுவினர் படமாக்கி வந்தனர். நேற்று நடந்த படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியில் பங்கேற்ற போது நடிகர் விஷால் கால் முட்டியில் காயமடைந்தார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இப்போது ஓய்வு எடுத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'லத்தி' படத்தின் ஆக்ஷன் காட்சி படப்பிடிப்பின்போதும் நடிகர் விஷால் சில முறை காயமடைந்திருந்தார்.
அரிராஜன் வசனம் எழுதி இயக்கியுள்ள குறும்படம் 'ஒழுக்கம்'
சன் தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியுடன் தாய்க்குலத்தால் வரவேற்கப்பட்ட " மங்கை" மெகாதொடர் உட்பட 23க்கும் மேற்பட்ட மெகாதொடர்களை இயக்கிய மங்கை அரிராஜன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள குறும்படம்தான் " ஒழுக்கம்" . இவர் சத்தியராஜ் நடித்த அய்யர் ஐ.பி.எஸ்., சத்தியராஜ் மற்றும் கவுண்டமணி இணைந்து நடித்த " பொள்ளாச்சிமாப்பிள்ளை" நமீதா நடித்த "இளமை ஊஞ்சல்" மற்றும் கன்னடம், மலையாளம், தெலுங்கிலும் படங்களை இயக்கி உள்ளார். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது, " போதைப்பொருட்களால் சீரழியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வளர்ப்பில் சரியான கவனத்தை செலுத்தி அவர்களுக்கு நல்லொழுக்கம் சொல்லிதரும் முதல் ஆசிரியர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் குறும்படம்தான் " ஒழுக்கம்". இதில் நிழல்கள் ரவி, ஜே. லலிதா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், உமாசங்கர்பாபு, சாரா, சித்ரா, வெங்கய்யா பாலன், முகமது ரபி, கீதா இன்னும் பலர் நடிச்சிருக்காங்க". என்று கூறினார்.
கஜாதனு இசையையும், பார்த்திபன் ஒளிப்பதிவையும் கவனித்துள்ளனர்.
இந்த குறும்படத்தின் வெளியீட்டு விழாவில் சுதந்திர போராட்ட தியாகியும், கம்பூனிஸ்ட் கட்சியின் மூத்த அரசியல்வாதியுமான ஆர்.நல்லகண்ணு, சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்பு மிரு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திரைப்பட இயக்குனர் எஸ்பி.முத்துராமன் , நடிகரும் திரைப்பட இயக்குனருமான கே.பாக்யராஜ், கதாசிரியரும் தயாரிப்பாளருமான கலைஞானம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஆர்.நல்லகண்ணு அவர்கள் " ஒழுக்கம்" குறும்படத்தினை வெளியிட அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பெற்றுக்கொண்டார். விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி உட்பட ஏராளமான திரை உலகினர் கலந்துகொண்டனர்.
இயக்குனர் மங்கை அரிராஜன் வரவேற்புரை வழங்க பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரும், குறும்படத்தின் தயாரிப்பாளருமான ஜெ. முகமது ரபி நன்றி நவில , நந்தினி விழா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா