சற்று முன்
சினிமா செய்திகள்
தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் பொருளாளராக செந்தில் V தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
Updated on : 09 October 2021
சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் சத்யா மூவிசின் தயாரிப்பாளரும், Health Care Entrepreneur நிறுவனத்தின் உரிமையாளருமாகிய திரு. செந்தில் V தியாகராஜன் அவர்கள் தமிழ்நாடு ஒலிம்பிக் அசோசியேஷன் பொருளாளராக ஆக போட்டியின்றி தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்.
மேலும், அவர் ட்ராக் அண்ட் ஃபீல்ட், ரக்பி மற்றும் கூடைப்பந்து ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் தேசிய அளவிலான தடகள வீரராவர்..அதுமட்டுமின்றி சர்வதேச ரக்பி விளையாட்டில், அமெரிக்கவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஒலிம்பிக் தலைமை பயிற்சியாளர் சார்லி கிரேக் அவர்களின் தலைமையின் கீழ் விளையாடி உள்ளார்.
மேலும், இவர் தமிழ்நாடு ரக்பி விளையாட்டு கழகத்தின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து விளையாட்டு கழகத்தின் துணை தலைவர் பொறுப்பிலும் இருக்கின்றார். அதுமட்டுமின்றி, இவர் Management Information Systems and International Trade and Relations from California State University மற்றும் Fletcher School of Law and Diplomacy from Tufts University ஆக இரண்டு முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.
சமீபத்திய செய்திகள்
விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!
இசை உலகில் தனது தனித்துவமான குரலும் பாணியும் மூலம் ரசிகர்களை கவர்ந்துவரும் Dr சாருலதா மணி, தனது புதிய சுயாதீன பாடலான “தென்றலில்” மூலம் மீண்டும் இசை ரசிகர்களை மகிழ்விக்க வந்துள்ளார்.
A. R. Rahman இசையில் உருவான "Thug Life" படத்தில் இடம்பெற்ற “அஞ்சு வண்ணப் பூவே” பாடலின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்த புதிய பாடல் வெளியாகியுள்ளது.
Divo Warner South வெளியீட்டில் வந்துள்ள “தென்றலில்” பாடலை, “மக்கள் செல்வன்” என அழைக்கப்படும் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். திறமையான கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் அவர், இந்தப் பாடலின் வெளியீட்டில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களிலும் Dr சாருலதா மணி தன்னுடைய முத்திரையை பதித்துள்ள ஒரு முக்கியமான படைப்பாக உருவாகியுள்ளது. பாரம்பரிய இசை மற்றும் நவீன மெலடிகளை இணைக்கும் அவரது திறமை, “தென்றலில்” பாடலில் தெளிவாக பிரதிபலிக்கிறது.
“என் உச்சி மண்டைல”, “Chillax”, “தீயே தீயே”, “கண்ணுக்குள் பொத்திவெப்பேன்”, “Sada Nannu”, “அஞ்சு வண்ணப் பூவே” போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ள அவர், இசை ரசிகர்களிடம் தனி இடத்தை பெற்றுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவின் Griffith University-யில் இசையில் PhD மற்றும் Postdoctoral Fellowship முடித்துள்ளதும் அவரது சிறப்பாகும்.
“தென்றலில்” பாடல் தற்போது அனைத்து டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகியுள்ளது. இதன் இசை வீடியோவும் YouTube-ல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
புது முகங்கள் மாளவிகா மற்றும் தவன் நடித்துள்ள இந்த இசை வீடியோவை தரேன் கார்த்திக் இயக்கியுள்ளார்.
மென்மையான மெலடியுடன், மனதை வருடும் உணர்வுகளைக் கொண்டு உருவாகியுள்ள “தென்றலில்”, இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Toxic: A Fairy Tale for Grownups’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2026 ஜூன் 4 அன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக CinemaCon நிகழ்வில் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு கூறப்படுகிறது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த பாராட்டுகள், இப்படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிடும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதனால், படக்குழு வெளியீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது.
படம் தற்போது முழுமையாக தயாராகி இருக்கும் நிலையில், உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தயாரிப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த திரைப்படத்தை யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோரால் எழுதப்பட்டு, கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இது குறித்து நடிகர் யாஷ் கூறியதாவது:
“சில படங்களை நாம் உருவாக்குகிறோம்… சில படங்கள் நம்மை மீண்டும் சினிமாவை காதலிக்க வைத்துவிடுகிறது. டாக்ஸிக் அப்படிப்பட்ட ஒரு பயணம். CinemaCon-ல் எங்கள் படத்தை வெளியிட்ட பிறகு, உலகளாவிய அளவில் கிடைத்த வரவேற்பு இந்த படம் இன்னும் பெரிய அளவில் செல்ல வேண்டிய படைப்பு என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.
டாக்ஸிக் படம் முழுமையாக தயாராகி விட்டது. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை உறுதி செய்யும் பணியில் இருக்கிறோம். இதனால், ஜூன் 4 அன்று படத்தை வெளியிடவில்லை. ஆனால் விரைவில் புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும்.
இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து நிற்கும் இந்த நேரத்தில், தரத்தை மேலும் உயர்த்துவது நம்முடைய பொறுப்பு. அதற்காகவே இந்த முடிவு. உங்கள் ஆதரவை நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன். சில கதைகள் பொறுமையை கேட்கும்… இந்தப் படம் அவற்றில் ஒன்று. நிச்சயமாக இது இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.”
இந்த திரைப்படத்தில் யாஷ் உடன் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள “Toxic” திரைப்படம், புதிய தேதியில் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கரா’ திரைப்படத்தின் டிக்கெட் ப்ரீ-புக்கிங் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஏப்ரல் 30, 2026 அன்று வெளியாகவுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் படத்திற்கான முன்பதிவு, ரசிகர்கள் மத்தியில் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் தளங்களில், குறிப்பாக BookMyShow போன்ற சேவைகள் மூலம் டிக்கெட்டுகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் திரையரங்கு ஷோக்கள் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த திரையரங்குகளில் முன்பதிவு செய்ய முடிகிறது.
மேலும், சமூக வலைதளங்களிலும் “Bookings Open Now” என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி, ரசிகர்கள் உற்சாகமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த படம், வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளதால், வெளியீட்டிற்கு முன்பே நல்ல ஹைப் உருவாகியுள்ளது. பல இடங்களில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக நிரம்பும் சூழல் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கரா’, ஓப்பனிங் நாளிலேயே ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் தொடங்கும் வாய்ப்பு அதிகம் என திரையுலக வட்டாரங்கள் கணிக்கின்றன. ரசிகர்கள் இப்போது First Day First Show அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு படத்தின் சிறப்புகளை பகிர்ந்தனர். ‘கருப்பு’ படத்தில் சூர்யாவுடன் திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், '' மதுரை எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக திகழ்கிறது. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் என் மீது பொழியும் இந்த அன்பிற்கும், பாசத்திற்கும் நான் பெரிதும் நெகிழ்ந்து போயிருக்கிறேன். மதுரையில் நடைபெறும் சித்திரை விழாவிற்கு ஐந்து லட்சம் மக்கள் திரள்வார்கள். அதே போலவே இந்த 'கருப்பு' படத்தின் திருவிழாவையும் நான் மற்றொரு சித்திரை திருவிழாவாகவே பார்க்கிறேன்.
நடிகர் இந்திரன்ஸ் திறமையான கலைஞர். அவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இப்போது தனது ஏழாம் வகுப்பு தேர்வுகளை எழுதி நிறைவு செய்து இருக்கிறார். அவரது இந்த அர்ப்பணிப்பிற்கு எல்லையே இல்லை.
இசையமைப்பாளர் சாய் மிகவும் திறமையான கலைஞர். அவருக்கு பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது. நான் அவரை முதன் முதலாக சந்தித்தபோது அவர் ஒரு நாளைக்கு ஆயிரம் டியூன்ஸ்களை உருவாக்குவதாக சொன்னார். இப்படம் திரைக்கு வரும் போது இசையின் அடிப்படையில் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ட்ரீம் வாரியர் நிறுவனம் எனக்காக சிந்திக்கிறது. சொல்லப்போனால் என்னை விட அதிகமாகவே சிந்திக்கிறது. அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை உள்ளது. அதன் மூலமே அவர்களால் 'கருப்பு' வின் உலகத்தை படைக்க முடிந்தது. அன்பறிவு மற்றும் விக்ரம் மாஸ்டர்களின் அசாதாரணமான சண்டைக் காட்சி இயக்கத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பதற்கு கருப்பசாமி தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்படும் தாக்கத்தை நான் இப்போது கண்கூடாக பார்க்கிறேன். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ.... அங்கு நிச்சயமாக அற்புதங்கள் நிகழும். இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பன்முகத் திறமை கொண்டவர். நான் என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை ஒரு இயக்குநராகவும்... நடிகராகவும்... வர்ணனையாளராகவும்... இப்படி எல்லாமாக ஒரே நேரத்தில் பார்க்கிறார்.
இந்தப் படத்தில் நான் கதாநாயகன் அல்ல. கருப்பசாமி தான் கதாநாயகன். என்னை இந்த விதமாக நடிக்கவும்... இந்த விதமாக திரையில் தோன்றவும் வைக்கும் வாய்ப்பை அளித்த எனது இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு நான் நன்றி கூறுகிறேன்.
படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் முதல் பாதி மிகுந்த உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உச்சகட்ட விறுவிறுப்புடன் அமைந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். மே பதினான்காம் தேதி எல்லாம் உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது '' என்றார்.
இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசுகையில், '' இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பசாமி கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்போதே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடைபெற வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நான் கூறியிருந்தேன். இந்த படம் உருவான முழு பயணத்திலும் கருப்பசாமி என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தே வந்தார். அதுவே எனது மிகப்பெரிய பலம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் பணியாற்றுவதற்காக ஒப்பந்தம் செய்த போது.. அவருக்கு இது முதல் படமாக இருந்தது. ஆனால் இப்போது அவர் 73 படங்களுக்கு ஒப்பந்தம் ஆகிவிட்டார். நான் ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கே ஒரு ஹெலிகாப்டர் நின்று கொண்டிருந்தது. அவர் மிகவும் அபாரமான திறமை கொண்ட இசையமைப்பாளர். அவரது பாடல் வெளியாகும் போது மக்கள் நிச்சயம் வியந்து போவார்கள். 15 நிமிடங்களில் அவரது பாடல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இப்போது நாங்கள் அவரை எங்கள் படத்தின் மிக சிறந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகவே கருதுகிறோம். நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை கண்டு நான் பிரமித்து போனேன்.
திரிஷா இன்று எங்களுடன் இணைய முடியவில்லை. ஆனாலும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். திரிஷாவாக இருப்பது எளிதல்ல. 23 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது எளிதல்ல. சமீப காலங்களில் இது அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.
ஒரு பெரிய பட்ஜெட்டில் ஆன படத்தையும் ஒரு பெரிய நட்சத்திரத்தையும் எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் என் கையைப் பிடித்து வழி நடத்தினார். அவர்தான் ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு. ஒரு கதாநாயகனை திரையில் எப்படி மாஸ் ஹீரோவாக காட்டுவது என்பது அவருக்கு துல்லியமாக தெரிந்திருக்கிறது.
'வலிமை' படத்தின் அப்டேட்டிற்கு பிறகு 'கருப்பு' படத்தின் அப்டேட் தான் அதிகமாக கேட்கப்பட்டது. இரண்டு வருட பயணம் மிகவும் கடினமாக இருந்தது. நானும், எஸ் ஆர் பிரபுவும் சண்டையிட்டுக் கொண்டோம். விவாதித்தோம். எல்லாம் செய்தோம். ஆனால் இப்போது நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். கருப்பு படத்தின் மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தை நாங்கள் ஐந்து பேர் இணைந்து எழுதினோம். இந்தக் குழு இரண்டு வருடங்களாக என்னுடன் இருக்கிறது. இது ஒரே ஒருவரால் தான் சாத்தியமானது.. அவர் சூர்யா சார். அவரிடம் 45 நிமிட கதை சொல்லலை மட்டுமே கொடுத்தேன். அதை கேட்டு அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். என் மனைவி கூட ஆச்சரியப்பட்டார். சூர்யா சார் !உன் இயக்கத்தில் படத்தில் நடிக்கிறார்களா? என்று கேட்டார். அவர் என் மீது நம்பிக்கையும் உறுதியும் வைத்திருந்தார். நான் அவருக்கு சிறந்ததை கொடுக்க விரும்பினேன். சூர்யா சார் திரையில் தன்னைத்தானே ரசித்து, ஜாலியாக இருந்து, ஒரு மாஸ் ஹீரோவாக தெரிய வேண்டும் என்று நான் விரும்பினேன். வழக்கமாக பெரிய ஹீரோ படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோ இருப்பார். ஆனால் 'கருப்பு' படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள் உள்ளன. எங்கள் கதைகளும் படத்தில் இருக்கின்றன. அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். அதை சிறப்பாக செய்து காட்டினார். திரையில் அவருடைய கண்களே பல விசயங்களை சொல்கின்றன. முதல் பாதியில் கமர்சியலும், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு உச்சகட்டத்துடன் கூடிய பரபரப்பும் இருக்கும். ஒரு மன்னன் தன் சிம்மாசனத்தை திரும்ப பெற வருகிறான்.
படத்தின் போஸ்டர்களில் ரிலீஸ் தேதியை ஏன் குறிப்பிடவில்லை என ரசிகர்கள் கேட்கிறார்கள். அப்படி செய்திருந்தால் தணிக்கை வாரியம் எங்கள் கதவை தட்டி இருக்கும். நாங்கள் அதை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம். உங்கள் பட்டாசுகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் மே 14 ஒரு கொண்டாட்டம் வரவுள்ளது. '' என்றார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசுகையில், ': கருப்பு படத்தின் பாடல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மலைக்க வைப்பதாக உள்ளது. அது என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. சூர்யா சார் பல கல்ட்( Cult) திரைப்படங்களை வழங்கி இருக்கிறார். அப்படிப்பட்ட சூழலில் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வந்த போது, நான் உடனடியாக அதை ஏற்றுக் கொண்டேன். பாலாஜி அண்ணா உடன் நடந்த முதல் சந்திப்பு மிக சிறப்பாகவும் மிக விசேஷமானதாகவும் அமைந்தது. ஆரம்பத்தில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பி அண்ணாவை சந்திப்பதற்காக நான் காரில் சென்று கொண்டிருந்தேன். ஆனால் செல்லும் வழியிலேயே ட்விட்டரில் 'சூர்யா 45' படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்ற செய்தியை பார்த்தேன். என் உடல் சிலிர்த்து போனது. அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது.
இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஒருவரை தேர்வு செய்வதற்கு முன் வேறு எந்த ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் நிச்சயம் இரண்டு முறை யோசித்து இருப்பார்கள். ஆனால் சூர்யா சார் எந்த தயக்கமும் இன்றி என்னை ஏற்றுக்கொண்டு, இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தார். நான் இந்தப் படத்தை முழுமையாக பார்த்து விட்டேன். இந்தப் படத்தின் பின்னணி இசை நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும். மேலும் இந்தப் படம் ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெறும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை'' என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், '' கருப்பு திரைப்படம் மிக சிறப்பான திரை கதையை கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக நான் பலமுறை ஒத்திகை மேற்கொண்டேன். நாங்கள் நடித்துக் காட்டிய ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை மிக சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். சூர்யா சாரின் அழகு இன்றும் அப்படியே சற்று மாறாமல் இருப்பதை கண்டு நான் மிகவும் ரசிக்கிறேன். அதனால் தான் சூர்யா சாருக்கு இன்று வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் ரசிகர்கள் என்றென்றும் இருப்பார்கள்'' என்றார்.
பாடலாசிரியர் விவேக் பேசுகையில், '' 'சூரரைப்போற்று' படத்தில் இடம்பெற்ற 'வெய்யோன் சில்லி' பாடல் மதுரை வட்டார வழக்கில் எழுதப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'ரெட்ரோ' மற்றும் 'கருப்பு' என அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சாய் அபயங்கருடன் நான் தொடர்ந்து பலமுறை பணியாற்றி வருகிறேன். சுயாதீன பாடல்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை அவருடன் இணைந்து உருவாக்கி உள்ளேன். நாங்கள் இணையும் போதெல்லாம் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான உற்சாகம் நிலவும். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே மிக சிறப்பாக அமைந்துள்ளன'' என்றார்.
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், '' கருப்பு திரைப்படம் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தை மிகுந்த கலகலப்பு, உற்சாகம் மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். பாலாஜி ஒரு தயாரிப்பாளரின் பணிச்சுமையை வெகுவாக குறைத்து, எங்கள் அனைவருக்கும் மிகவும் சவுகரியமானதொரு சூழலை அமைத்துத் தந்திருக்கிறார். இந்தப்படம் பிரம்மாண்டத்துடன் உருவாகி உள்ளது. இது ஒரு உண்மையான திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணுவுக்கும் தனது முதல் பெரிய திரைப்படத்தை எங்களுடன் இணைந்து உருவாக்கும் சாய் அபயங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நான் 10 அடி, 20 அடி உயரமுள்ள அரிவாள்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்காக நாங்கள் 85 அடி உயரமுள்ள ஒரு அருவாளை உருவாக்கினோம். எவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தில் மீண்டும் ஒரு படம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா..? என்று தெரியவில்லை. திரையரங்குகளில் பார்வையாளர்களின் வரவேற்பினை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் '' என்றார்.
விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், '' எல் கே ஜி படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் தொடங்கிய எனது பயணம்.. இப்போது 'கருப்பு 'திரைப்படம் வரை தொடர்கிறது. அவர் ஒரு அசுரத்தனமான உழைப்பாளி- அதாவது மிக கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு நபர் -அந்த உழைப்பை 'கருப்பு' படத்திற்காக அவர் பன்மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறார். படத்தின் திரைக்கதைக்காக அவர் பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
சூர்யா சாருக்கு 'கருப்பு: திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும். நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நான் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக அமையப்போகிறது.
இந்த ஆண்டில் சூர்யா சாருக்கு மூன்று படங்கள் வெளியாக உள்ளன. அந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்த ஆண்டை நாம் 'சூர்யாவின் ஆண்டு 'என்று கொண்டாடுவோம் ''என்றார்.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், '' சூர்யா சாருக்கு 'கருப்பு' திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும் .நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நானும் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு 'செம விருந்தாக ' அமையப்போகிறது'' என்றார்.
மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!
சில பாடல்கள் கேட்கும் போதே மனதை வருடி, ஒரு இனிய உணர்வை பரப்பும். அப்படியான ஒரு மெலோடியான பாடலாக ‘வெள்ளிச்சுடரே’ தற்போது இசை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜு நடித்துள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள இந்த பாடல், வெளியான தருணத்திலிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
திபு நினன் தாமஸ் இசையில், மத்ராரேஷி எழுதிய வரிகளுடன் உருவான இந்த பாடலை கபில் கபிலன் தனது இனிமையான குரலில் பாடியுள்ளார். ஒவ்வொரு வரியும் உணர்ச்சியால் நிரம்பி, கேட்பவரை பாடலின் உலகிற்குள் இழுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.
பாடலின் ஆரம்பத்தில் மிதமான கிதார் இசை மனதை கவர, பின்னர் மெதுவாக அதிகரிக்கும் இசை ஓட்டம் பாடலின் உச்ச கட்ட உணர்வை அழகாக வெளிப்படுத்துகிறது. அதனுடன் சேரும் நாட்டுப்புற இசைக் கூறுகள், பாடலின் உணர்ச்சியை மேலும் செழுமைப்படுத்துகின்றன.
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், தனது தனித்துவமான இசை நுணுக்கத்தால் பாடல்களை நினைவில் நிற்கும்படி உருவாக்கும் திறமை கொண்டவர். ‘கண்கள் ஏதோ’, ‘பூவே’ போன்ற ஹிட் பாடல்களைத் தொடர்ந்து ‘வெள்ளிச்சுடரே’யும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இணைந்து, மீண்டும் மீண்டும் கேட்கப்படும் பாடலாக மாறியுள்ளது.
‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற வெற்றிப்படங்களை வழங்கிய ராம் குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணி, மூன்றாவது முறையாக ‘இரண்டு வானம்’ மூலம் இணைந்துள்ளது. இதனால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகி வருகிறது. ‘வெள்ளிச்சுடரே’ பாடல் வெளியீடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளாவிய வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’
சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படம், தீவிரமான சமூக உணர்வுகளுடன் உருவாகியுள்ளது.
இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளதுடன், சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். ‘The India Story’ அல்லது ‘The India Story: Slow Poison’ என அறியப்படும் இந்த படம், விவசாயத்தில் பூச்சிக்கொல்லி இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனால் உருவாகும் மனித உடல்நல பாதிப்புகளை ஆழமாக எடுத்துரைக்கிறது.
ஒரு குடும்பத்தின் கதையைத் தாண்டி, பொதுமக்களின் வாழ்வையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பெரிய சமூக பிரச்சினையை படம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மேலும், இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் மற்றும் பொறுப்புணர்வு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது.
இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,
“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, சுவாரஸ்யமான கதையம்சத்தையும் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அலட்சியத்தின் காரணமாக ஏற்படும், பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது.
இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,
“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ்இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”
பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்தஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில், ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை நடிப்புகளால் பாராட்டப்பட்ட ஷ்ரேயாஸ் தல்படே இணையும் இந்த படம், உணர்ச்சி மற்றும் தீவிரத்தைக் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பும் படத்திற்கு வலு சேர்க்கிறது. இணை தயாரிப்பாளர்களாக சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி பணியாற்றியுள்ளனர்.
ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை உலகளவில் வெளியிடுகிறது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம், சமூக பொறுப்புணர்வை தூண்டும் முக்கியமான படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!
சென்னை, ஏப்ரல் 27, 2026, பிரைம் வீடியோ தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ மே 15 முதல் உலகளவில் வெளியாகும் என அறிவித்துள்ளது.
Wallwatcher Films தயாரிப்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஏழு எபிசோட்கள் கொண்ட சஸ்பென்ஸ் டிராமாவை, தேசிய விருது பெற்ற இயக்குநர் A.சற்குணம் எழுதி இயக்கியுள்ளார்.
போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த தொடர், உணர்ச்சி மற்றும் பதட்டம் கலந்த கதைமாந்தர்களுடன் பார்வையாளர்களை ஈர்க்கிறது. முக்கிய கதாபாத்திரங்களில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் நடித்துள்ளனர். மேலும் அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த சீரிஸ் இந்தியாவைத் தாண்டி 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது. தமிழுடன் சேர்த்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்-டைட்டில்களுடனும் வெளியாக உள்ளது.
பிரைம் வீடியோ இந்தியாவின் ஒரிஜினல்ஸ் பிரிவு தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது:
‘எக்ஸாம்’ என்பது இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு கதை. போட்டித் தேர்வுகளில் இருக்கும் உணர்ச்சி அழுத்தத்தை மிகச் சிறப்பாக ஒரு திகில் நிறைந்த கதையாக மாற்றுகிறது. இந்த கதை கோடிக்கணக்கான மக்களின் மனதைத் தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘சுழல் — தி வோர்டெக்ஸ்’ (சீசன் 1 மற்றும் 2) மற்றும் ‘வதந்தி — தி ஃபேபிள் ஆஃப் வேலோனி’ ஆகிய தொடர்களின் வெற்றிக்குப் பிறகு, புஷ்கர் மற்றும் காயத்ரியுடன் மீண்டும் இணைவது எங்களுக்கு பெருமையாகும். இந்த கதையை மே 15 அன்று உலகம் முழுவதும் உள்ள எங்கள் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்.”
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறியதாவது:
‘எக்ஸாம்’ தொடரின் மூலம், மனிதர்களின் ஆசை, அநீதி, மற்றும் கடைசி கட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் நெறிமுறை சிக்கல்கள் ஆகியவற்றை சொல்ல முயன்றோம். இந்தக் கதையின் மையத்தில், சிக்கலான சூழ்நிலையில் தன்னை பலவீனமாக்கி கொள்ளாமல், துணிந்து போராடும் ஒரு இளம் பெண் இருக்கிறார். ஒரு அநீதி நிறைந்த அமைப்புக்கு எதிராக நின்று அவள் போராடுவது தான் இந்த கதை. எங்கள் கதைகளை உலகளவில் கொண்டு செல்ல பிரைம் வீடியோ எங்களுக்கு சிறந்த கூட்டாளியாக இருந்து வருகிறது. அதுபோலவே எக்ஸாம் சீரிஸையும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல இது சரியான தளமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”
“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!
இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான மேட் இன் கொரியா திரைப்படம், Netflix தளத்தில் வெளியாகி உலகளவில் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, படத்திற்கு மேலும் ஒரு முக்கியமான மைல்கல் கிடைத்துள்ளது. தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்க் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த ராஷ்டிரபதி பவன் விருந்தில், இப்படத்தின் கதாநாயகி பிரியங்கா மோகன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
ஒரு திரைப்படத்தின் வெற்றி, சர்வதேச மட்டத்தில் இப்படியான அங்கீகாரத்தைப் பெறுவது அரிதான ஒன்று. “மேட் இன் கொரியா” திரைப்படம், அதன் கதை மற்றும் உருவாக்கத் தரத்தால் மட்டுமல்லாமல், சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பதற்கு இது ஒரு முக்கியமான சான்றாக பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், உலகளவில் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது அரசியல் மற்றும் கலாச்சார மட்டத்திலும் கவனத்தை ஈர்த்து, புதிய உயரத்தை எட்டியுள்ளது.
“பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்
பன்முகத் திறமையுடன் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தொடர்ந்து வெற்றி கண்டுவரும் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர் காந்தி கிருஷ்ணா உடன் மீண்டும் இணைந்துள்ள “பிரேக்ஃபாஸ்ட்” திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இவர்கள் முன்னதாக இணைந்த “ஆனந்த தாண்டவம்” படத்திற்கு பிறகு உருவாகும் இந்த கூட்டணி மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. இப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்து கொண்டதாவது,
“காந்தி கிருஷ்ணா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்தது ஸ்பெஷலான அனுபவம். ’ஆனந்த தாண்டவம்’ என் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் வந்த படம். அந்தப் படத்தில் என்னை நம்பி, ரசிகர்களை சென்றடைந்த இசையை உருவாக்க வாய்ப்பு கொடுத்த காந்தி கிருஷ்ணா சாருக்கு நன்றி. இசையமைப்பாளராக ஒரு வலுவான அடித்தளத்தை எனக்கு அமைத்து கொடுத்த படங்களில் அது முக்கியமானது. மனித உறவுகளை அவர் படங்களில் அணுகும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆழமும், நுணுக்கமும், நேர்மையும் கலந்த அந்த அணுகுமுறையால் அவரது படங்களை ஒரு நாவலை திரையில் காண்பது போல உணர வைக்கும்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் சொல்லாத ஒரு கதையை பல உணர்வுகளுடன் தன்னுள்ளே மறைத்து வைத்திருக்கும். ‘பிரேக்ஃபாஸ்ட்’ அப்படியான ஒரு படம். இன்றைய காலத்தில் உறவுகளின் சிக்கல்களையும், மனிதர்களின் உணர்வுகளை பற்றியும் இந்தப் படம் திரையில் பேசும். இந்தப் படத்திற்கு இசை அமைக்கும் போது, கதை ஓட்டத்துடன் இயல்பாக கலந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது காட்சிகளை மீறி ஒலிக்காமல், கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பயணித்து, அவர்களின் உணர்வுகளை உயர்த்த வேண்டும் என்பதே என் நோக்கம். இந்தப் படத்தின் பாடல்கள் திரையைத் தாண்டியும் ரசிகர்களிடம் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். படத்தை பெரிய திரையில் ரசிகர்களுடன் காண ஆவலாக உள்ளேன்” என்றார்.
நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!
தமிழ் திரைப்படங்களில் தரமான கதைகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் விநியோகஸ்தர்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டின் விநியோக துறையில் குறிப்பிடத்தக்க நபராக விளங்கும் எஸ். குகன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மூலம் மாநிலம் முழுவதும் 56க்கும் மேற்பட்ட படங்களை வெற்றிகரமாக வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ள அவர், காந்தாரா, கே.ஜி.எஃப் அத்தியாயம் 2, குருப், நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் இறுகப்பற்று போன்ற திரைப்படங்கள் மூலம் தனது சிறந்த திரை ரசனையை நிரூபித்துள்ளார்.
தற்போது, இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கியுள்ள “பிரேக்ஃபாஸ்ட்” திரைப்படத்தை நாளை (ஏப்ரல் 24) தமிழகம் முழுவதும் வெளியிட எஸ். குகன் தயாராக உள்ளார்.
படம் குறித்து எஸ். குகன் பகிர்ந்து கொண்டதாவது, “‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கதையின் நேர்மை உடனடியாக என்னை ஈர்த்தது. இந்தப் படம், தற்போதைய தலைமுறையின் உணர்வுகளை உண்மையாக பிரதிபலிப்பதுடன், நவீன காதல் மற்றும் உறவுகளை பற்றி நுட்பமாகவும் ஆழமாகவும் பேசுகிறது. உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளை நுட்பமாக சொல்வதில் தேர்ந்தவர் காந்தி கிருஷ்ணா. அதை ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது. படத்தின் இளம் நடிகர்கள் திறமையாக தங்கள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமாரின் மனதை வருடும் இசை கதைக்கு மேலும் வலு சேர்க்கிறது. உண்மையான, மனதைத் தொடும் திரைப்படங்களைத் தேடும் பர்வையாளர்களுடன் ‘பிரேக்ஃபாஸ்ட்’ ஆழமாக இணையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













