சற்று முன்
சினிமா செய்திகள்
ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் நடிக்கும் 'காடன்' படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு
Updated on : 03 March 2021
ஈராஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பிரபு சாலமனின் இயக்கத்தில் ராணா டக்குபட்டி மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம்.
காட்டை மையமாகக் கொண்ட இப்படத்தின் டிரைலர், உலக வன உயிரனங்கள் தினமான இன்று (மார்ச் 3) வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் ‘ஆரண்யா’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ எனும் பெயரிலும் உருவாகியிருக்கும்
இத்திரைப்படத்தில், ஷிரியா பில்கவுன்கர் மற்றும் ஜோயா ஹுசைன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மூன்று மொழிகளிலும் கதாநாயகனாக ராணா நடிக்க, தமிழ் மற்றும் தெலுங்கில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷாலும், இந்தியில் புல்கிட் சாம்ராட்டும் நடிக்கின்றனர். மேலும், உன்னி எனும் யானை சிறப்பு வேடத்தில் தோன்றுகிறது.
மேலும் இந்த படத்தில் அனந்த் மகாதேவன், ரகு பாபு, ரவி காலே,
ஸ்ரீநாத், ஆகாஷ், சம்பத் ராம், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு அசோக் குமார் ராஜி, படத்தொகுப்பு புவன், சண்டைக் காட்சிகள் ஸ்டன் சிவா, ஸ்டன்னர் சாம், இசை சாந்தனு மோயித்ரா.
‘காடன்’ திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று சென்னையில் வெளியிட்டுள்ளது. டிரைலரை வெளியிட்ட கையோடு ஹைதராபாத்துக்கு பறந்த படக்குழுவினர், அங்கு தெலுங்கு டிரைலரை வெளியிட்டனர். இரு நிகழ்ச்சிகளும் கொவிட் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டன. இந்தி ரசிகர்களுக்காக காணொலி மூலம் பத்திரிகையாளர் சந்திப்பு நாளை (மார்ச் 4) நடைபெறவுள்ளது. இவ்வாறாக, 24 மணி நேரத்தில் மூன்று நிகழ்ச்சிகள் என படக்குழுவினர் பரபரப்புக் குழுவாக மாறியுள்ளனர்.
“காடன் காட்டைப் பற்றிய கதை என்பதால், அதன் டிரைலரை வெளியிடுவதற்கு உலக வன உயிரனங்கள் தினம் பொருத்தமாக இருக்கும் என்று கருதினோம். மும்மொழி ரசிகர்களையும் இப்படம் கவரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை,” என்று அவர்கள் தெரிவித்தனர்.
வன சூழலியலைக் காப்பாற்றுவதற்காக தனது வாழ்க்கையில் பெரும்பகுதியை காட்டிலேயே செலவழிக்கும் ஒருவரைப் பற்றிய கதை தான் காடன். ‘பாகுபலி’ மற்றும் ‘தி காஜி அட்டாக்’ஆகிய மும்மொழி திரைப்படங்களுக்கு பிறகு, ராணாவின் மூன்றாவது மும்மொழி படம் இதுவாகும். மார்ச் 26-ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்
ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.மற்றும் லாக்லைன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் 'டியர் ரதி'. இந்தப் படத்தை 'இறுதிப் பக்க'த்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே மணி இயக்கியுள்ளார்.
படத்தின் கதை எதைப் பற்றிப் பேசுகிறது?என்பதைப் பற்றி இயக்குநர் பேசும்போது,
"இன்றைய சூழலில் ஆணோ பெண்ணோ தனக்கு விருப்பமான ஒத்த அலை வரிசை மனம் கொண்ட எதிர்பாலின நட்பைத் தேடினால் அடைவது சுலபம். அந்த நட்பு காதலாவது கடினம். அதைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமல்ல, மிகக்கடினம். அப்படிப் பிறரிடம் பேசத் தயங்கும் -குறிப்பாகப் பெண்களிடம் பேசத் தயங்கும் ஓர் வாலிபன் ஸ்பா போன்ற ஓர் அழகு நிலையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்து 'டேட்டிங்'கிற்காக வெளியே அழைத்துச் செல்கிறான் .அதே நாளில் அந்தப் பெண்ணைத் தேடி போலீஸ் ஒரு பக்கம், ரவுடிக் கும்பல் ஒரு பக்கம் எனத் துரத்துகிறார்கள்.வெளியே சென்றவர்கள் பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள். அது என்ன மாதிரியான பிரச்சினை ?அதை எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதுதான் 'டியர் ரதி' படத்தின் கதை.
இன்றைய தலைமுறையினர் காதல் இணையைத் தக்க வைத்துக் கொள்ள எப்படி எல்லாம் போராடுகிறார்கள்? அவர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள், சிக்கல்கள் என்ன?அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சொல்லும் வகையில் 'ரொமான்டிக் காமெடி'யாக இந்த 'டியர் ரதி' திரைப்படம் உருவாகி இருக்கிறது " என்கிறார்.
படத்தில் சரவண விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். இவர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்தவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் 84 நாட்கள் இருந்தவர். அவர் அறிமுகமாகும் படமிது. நாயகியாக ஹஸ்லி அமான் நடித்துள்ளார் இவர் மலையாளத்தில் கதிர் நாயகனாக நடித்த 'மீஷா' படத்தில் நடித்த இவர், இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். வில்லனாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் ,நடிப்புப் பயிற்சிக் கல்லூரியில் படித்தது மட்டுமல்லாமல் பலருக்கும் நடிப்புப் பயிற்சி அளித்து வருபவர். 'மதராஸி' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பாத்திரத்திற்கான உடல் மொழியை வடிவமைத்தவர் இவர்தான். இவர்களுடன் சாய் தினேஷ் பத்ராம், யுவராஜ் சுப்பிரமணியன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .
படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜோன்ஸ் ரூபர்ட். இவர் 'பொறியாளன்', 'சட்டம் என் கையில்' படங்களுக்கு இசையமைத்தவர். ஒளிப்பதிவு செய்துள்ளவர் லோகேஷ் இளங்கோவன். இவர் 'நாய்சேகர்' படத்தில் உதவி ஒளிப்பதிவாளர், 'ஹர்ஹரா' படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகப் பணியாற்றியவர். பிரேம் .B படத்தொகுப்பு செய்துள்ளார்.இவர் செல்வா ஆர்கே - யிடம் உதவி படத் தொகுப்பாளராகப் பணியாற்றி இந்தப் படத்தில் அறிமுகமாகிறார் .கலை இயக்கம் ஜெய் ஜெ.திலீப், நிர்வாகத் தயாரிப்பாளர் மனோ வி கண்ணதாசன், தயாரிப்பு நிர்வாகம் : ஹென்றி குமார்.
இப்படி புதுமுகங்களையும் அனுபவி சாலிகளையும் இணைத்துப் படக் குழு அமைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீன். கே .மணி.
வரும் 2026 ஜனவரி 2 ஆம் தேதி இந்த 'டியர் ரதி' திரைப்படம் வெளியாக இருக்கிறது.உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது.
பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்
"குணத்தை அழிக்கும் சீர்குலைவான உணர்ச்சியாக மட்டுமே சினம் பரவலாகப் பார்க்கப்பட்ட நிலையில், அகமாற்றத்திற்கான ஊக்கு ஆற்றலாக அதைச் செலுத்திட முடியும் என்பதை, 'சினம் கொள் மனமே' பாடல் வலியுறுத்துகிறது.
கர்நாடக இசைப் பாடகர் சிக்கில் குருசரண் இசையமைத்துப் பாடியுள்ள இப்பாடல், சினத்தை எரிபொருளாக்கி, தெளிவுக்கும் மாற்றத்திற்குமான பாதையில் இலக்கமைக்க, மனதைப் பண்படுத்தலாம் என்னும் நம்பிக்கையை விதைக்கிறது.
பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ள இப்பாடலுக்கு இசை நிரலாக்கத்தை ராஜேஷ் மற்றும் ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இணைந்து செய்துள்ளனர். பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடலை, அனைத்து இசையோடைத்தளங்களிலும் கேட்கலாம். "
23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!
ஹாலிவுட் சுயாதீன திரைப்படமான ‘டெதர்’, 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் (CIFF) உலக சினிமா போட்டிக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஹரிஹரசுதன் நாகராஜன் தயாரித்து இயக்கியுள்ளார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் இரு முறை திரையிடப்படுகிறது. டிசம்பர் 14 அன்று காலை 10:00 மணிக்கு சத்யம் சினிமாஸ் சீசன்ஸ் அரங்கிலும் டிசம்பர் 18 அன்று காலை 9:45 மணிக்கு ஐநாக்ஸ் சிட்டி சென்டரில் ஸ்க்ரீன் 1லும் 'டெதர்' திரையிடப்படும்.
அங்கஸ் ஹூவோராஸ் எழுத்தில் ஹரிஹரசுதன் நாகராஜன் இயக்கி தயாரித்துள்ள ‘டெதர்’, பள்ளியில் நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் விளைவுகளை ஆராய்கிறது. மகளின் இழப்பால் துக்கத்தில் தவிக்கும் ஒரு குடும்பம், மருத்துவ ரீதியாக மனச்சோர்வடைந்த முன்னாள் பள்ளி அதிகாரி, ஆபத்தை எதிர்கொள்ளும் 15 குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் உறைந்து நிற்பது என இக்கதை சுழல்கிறது.
பெரிதும் மதிக்கப்படும் டான்ஸ் வித் பிலிம்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்ட 'டெதர்' அங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. 'டெதர்' திரைப்படம் சென்னையில் திரையிடப்படுவது குறித்து இயக்குநர் ஹரிஹரசுதன் நாகராஜன் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
திரைப்பட உருவாக்கத்திலும் உணர்ச்சிப்பூர்வமான கதைசொல்லலிலும் தீவிர ஆர்வம் கொண்ட ஹரிஹரசுதன் நாகராஜனின் முதல் படமான 'டெதர்' அமெரிக்க ஊடகங்களால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. மதுமிதா இயக்கும் படத்தில் கூடுதல் திரைக்கதை எழுத்தாளராக ஹரிஹரசுதன் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
அசோக் செல்வன் - நிமிஷா சஜயன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. 'குட் நைட்', 'லவ்வர்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' போன்ற தரமான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரிக்கும் புதிய பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு தற்போது இனிதே நிறைவடைந்துள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், யுவராஜ் கணேசன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.
இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நிமிஷா சஜயனும் நடித்துள்ளனர். அசோக் செல்வனின் திரைப்பயணத்தில் மிக அதிக பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், ரொமாண்டிக் திரில்லாராக உருவெடுத்துள்ளது. கதைக்களத்திற்கு ஏற்ப பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கியுள்ளார்.
'சித்தா', 'கனா' ஆகிய படங்களில் வெற்றிப் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் , ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ், 'டியூட்', 'குட் நைட்', 'டூரிஸ்ட் பேமிலி' ஆகிய பிளாக்பஸ்டர் படங்களின் படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், கலை இயக்குநர் மகேந்திரன், பாடலாசிரியர் மோகன் ராஜன், தேசிய விருது பெற்ற ஒப்பனைக் கலைஞர் பட்டணம் ரஷீத், ஒலி வடிவமைப்பாளர் உதயகுமார் ( Sound Vibe Studios) மற்றும் நடன இயக்குநர் அசார் ஆகியோர் தொழில்நுட்ப குழுவாக பணியாற்றிவருகின்றனர்.
படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், தற்போது பின்னணி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!
ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”
வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ் சமூகவலைத்தளத்தில் இன்று வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.
கோவை GRD கல்லூரியில் இப்படத்தின் டிரெய்லர் பிரத்தியோகமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில் படக்குழுவினர் கலந்துகொள்ள,ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் இப்படத்தின் டிரெய்லர் திரையிடப்பட்டது. பெரும் ஆராவாரத்தோடு படக்குழுவை உற்சாகப்படுத்திய மாணவர்கள், டிரெய்லரை பாராட்டி வாழ்த்தினர்.
டிரெய்லரில் காவலதிகாரியான விக்ரம் பிரபு ஒரு இளம் குற்றவாளியை அழைத்துச் செல்வதும், அவரிடமிருந்து குற்றவாளி தப்பித்து விட அதைத்தொடர்ந்த பரபரப்பான சம்பவங்களும் விறுவிறுப்பாக காட்டப்படுகிறது. இடையில் ஒரு இளம் ஜோடியின் காதலும் மனதை ஈர்க்கும் வகையில் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மிக அழுத்தமாகவும், ஒவ்வொரு ஃப்ரேமும் உணர்வுபூர்வமாக, நமக்கு புது அனுபவம் தரும் இந்த டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!
தென் இந்தியாவின் முன்னணி OTT தளமான Sun NXT, தனது பிரபலமான Direct-to-Sun NXT பிரீமியர் பட்டியலில் அடுத்ததாக ஒரு அதிரடியான திரில்லரை சேர்த்துள்ளது. டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை முதல், நடிகை பார்வதி நாயர் நடிப்பில், திரில்லர் ஜானரில் உருவான ‘உன் பார்வையில்’ படத்தை, Sun NXT-இல் மட்டும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.
இப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிக்க உணர்ச்சிகரமான பாத்திரத்தில், நடிகை பார்வதி நாயர் அசத்தியுள்ளார். கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களைத் தொடர்ந்து, உண்மையை தேடும் அவரது பயணம், ரகசியங்களும் திருப்பங்களும் நிரம்பிய ஒரு மர்ம உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
தன்னுடைய வலுவான நடிப்பால் படத்தை முழுவதுமாக தாங்கிச் செல்லும் பார்வதி நாயரின் நடிப்பு, படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. திரைக்கதையின் மர்ம மரணங்களின் விசாரணை பக்கத்தில், முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் கதாப்பாத்திரத்தில் மகேந்திரன் நடித்துள்ளார். மேலும், கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிழல்கல் ரவி ஆகியோரின் வலுவான நடிப்பு ‘உன் பார்வையில்’ படத்தின் ஈர்க்கும் அம்சமாக திகழ்கிறது.
நடிகை பார்வதி நாயர் கூறியதாவது..,
“பார்வையற்ற பெண்ணாக நடிப்பது சவாலானதும், அதே நேரத்தில் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. டிசம்பர் 19 அன்று ‘உன் பார்வையில்’ படத்தை Sun NXT-இல் நேரடியாக நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்வதைக் காண, ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
மேலும், Sun NXT-இன் புதிய எக்ஸ்குளூசிவ் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் ‘தீயவர் குலை நடுங்க’ படத்தையும் தவறாமல் கண்டுகளியுங்கள். ஆக்சன் கிங் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாச்சலம் நடித்துள்ள இந்தப் படம், ஒரு முக்கியமான சமூக பிரச்சனையை துறுதுறு விசாரணையின் மூலம் வெளிக்கொண்டு வருகிறது. திரில்லர் ரசிகர்களுக்கு இது மிகச்சிறந்த விருந்தாக இருக்கும்.

நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!
நடிகர் விது கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, '29' என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் '29' எனும் திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் கவனிக்க பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
ரொமாண்டிக் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் எஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் எஸ், இயக்குநர் ரத்ன குமார், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், படத்தொகுப்பாளர் சதீஷ்குமார், ஆடை வடிவமைப்பாளர் பிரவீன் ராஜா, நடன இயக்குநர் மாஸ்டர் ஷெரிஃப், இணை தயாரிப்பாளர் பிரதீப் குமார் பூபதி, நடிகர் விது, நடிகைகள் ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் ஃபாத்திமா மற்றும் ஆர். ஜே. அமுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், '' நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் எனக்கு சிறப்பானது தான். அதிலும் இந்த '29 ' என் மனதிற்கு நெருக்கமான திரைப்படம். அத்துடன் என்னுடைய கனவு நனவான தருணம் இது. நான் தமிழில் முதல் படத்தில் நடிக்கும் போதே ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் நிறுவனத்தில் பணியாற்றினால் குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வு கிடைக்கும் என்பார்கள். அதனால் அந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது இன்று நிறைவேறி இருக்கிறது. அவர்களது குடும்பத்தில் நானும் ஒருத்தியாக இணைந்து இருக்கிறேன். இந்த கதை மீது கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சார் ஆகியோர் வைத்த நம்பிக்கைதான் எங்களுக்கெல்லாம் பணியாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது.
இயக்குநர் என்னை சந்தித்து கதையை சொன்னவுடன் மகிழ்ச்சியுடன் நடிக்க ஒப்புக்கொண்டேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் காட்சிகளை எப்படி நாங்கள் உணர்ந்து நடித்திருக்கிறோமோ.. அது பார்வையாளர்களாகிய நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறோம்.
இந்தப் படத்திற்கான ப்ரோமோ வீடியோவில்.. நீங்கள் யார்? என்ற கேள்வியை உங்களுக்குள் நீங்களாக ஆழமாக கேட்டு கொள்ளும் வகையில் இருக்கிறது. இது ரசிகர்களுக்கும் பொருந்தும் என எதிர்பார்க்கிறோம். படத்தைப் பற்றி வரும் நிகழ்வில் அதிகமாக பகிர்ந்து கொள்கிறேன். நன்றி''' என்றார்.
நடிகர் விது பேசுகையில், '' இந்தப் படம் எனக்குள் நான் யார்? என்று கண்டுபிடிப்பதற்கான தூண்டுதலாக இருந்தது. இந்தப் படத்தில் சத்யா எனும் கதாபாத்திரமாக என்னை பார்த்து, தேர்வு செய்து, நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் ரத்ன குமாருக்கு நன்றி. தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் என்னை கைப்பிடித்து திரை உலகத்திற்கு அழைத்து வந்தார். இன்று இந்த மேடையில் நிற்பதற்கும் அவரே காரணம். அதனால் அவருக்கும் நன்றி.
இந்தப் படத்திற்காக உருவாக்கப்பட்ட இரண்டு பாடல்களையும் கேட்டு இருக்கிறேன். இரண்டும் அற்புதமாக இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு நன்றி. அவருடைய குரலை கேட்கும் போதெல்லாம் இசைஞானியின் குரலை கேட்பது போல் இருக்கும். இதனை அவரிடமே தெரிவித்திருக்கிறேன். அவருடைய குரலில் இருக்கும் ஒரு எமோஷன் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவு சம்பந்தமான நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன்.
29 என்றவுடன் அந்த வயதில் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு வகையான எண்ணங்கள் ஏற்படும். அவை அனைத்தும் இந்த படத்தில் பிரதிபலிக்கும். அதனால் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்'' என்றார்
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், '' தயாரிப்பாளர் கார்த்திகேயனை 'டூரிஸ்ட் ஃபேமிலி ' படத்தின் வெற்றி விழா நிகழ்வின் போது சந்தித்தேன். அவர் என்னை தொடர்பு கொண்டு, இந்த படத்தின் கதை நன்றாக இருக்கிறது. நீங்கள் பணியாற்றுங்கள் என கேட்டுக்கொண்டார். இயக்குநர் ரத்ன குமாரை 'லவ்வர்' படத்தின் ப்ரீவ்யூ காட்சியை காண அழைப்பு விடுத்தேன். மணிகண்டனை வாழ்த்திட வாருங்கள் எனவும் கேட்டுக் கொண்டேன். ஏனெனில் ரத்ன குமாரை எனக்கு பிடிக்கும். அவருடைய சமூக வலைதள பதிவுகளில் அவருடைய ஆளுமையும், தெரிந்தது. எதையும் எதிர்கொள்ள கூடிய தைரியமும் அவரிடம் இருந்தது. அதுவும் எனக்கு பிடித்தது.
கலைஞர்களுக்கு தைரியம் மிகவும் முக்கியம். கலைஞர்களைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அதனை எதிர்கொள்ளும் போது தைரியம் வேண்டும்.
இந்தப் படத்தில் அவர் என்ன கதையைச் சொன்னாரோ.. அதுதான் இசை வடிவமாக உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்திற்காக இரண்டு பாடல்களை உருவாக்கி விட்டோம். ஏனைய பாடல்களும் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆல்பமாக இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கும்'' என்றார்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் எஸ் பேசுகையில், '' எனக்கு இது மிகவும் உணர்வுபூர்வமான தருணம். இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விதுவை மூன்று வயதிலிருந்து எனக்குத் தெரியும். எனக்கு இருக்கும் ஒரே சகோதரர் அவர்தான். அவர் இந்த மேடையில் ஹீரோவாக அமர்ந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனமும் ஜீ ஸ்குவாட் நிறுவனமும் இணைந்து தயாரித்த படத்தின் மூலம் அறிமுகமாகும் விது நல்ல நடிகனாக உயர்வார் என நம்பிக்கை வந்துவிட்டது.
ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் என்ற எங்களது தயாரிப்பு நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் தொடங்கும் போது முதல் படமாக 'மேயாத மான்' எனும் படத்தை தயாரித்தோம். அதனை இயக்கியவர் ரத்ன குமார். இன்று வரை நாங்கள் பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் படங்களில் மேயாத மான் படமும் ஒன்று.
அதன் பிறகு நாங்கள் 17 படங்களை தயாரித்திருக்கிறோம். ஆனால் அவருடன் நாங்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற முடியவில்லை. அவர் படங்களை இயக்கிய பிறகு கதாசிரியராகவே மாறிவிட்டார்.
இந்தப் படத்தின் கதையை சில ஆண்டுகளுக்கு முன் அவர் சொல்ல கேட்டிருக்கிறேன். கேட்கும் போதே மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் தான் வைத்தேன். இந்த கதையை எங்களுடைய நிறுவனம் தான் தயாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்து விட்டது . இன்னும் நான்கு நாட்கள் படப்பிடிப்பு தான் மீதம் உள்ளது. அதையும் விரைவில் நிறைவு செய்து விடுவோம்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டனிடம் அறிமுகமாகி பழகத் தொடங்கினேன். அவர் பாரம்பரிய இசை குடும்பத்தை சார்ந்தவர் என்று தெரிந்தவுடன் மேலும் நெருக்கமானேன். இசைக்கலைஞர் என்பதை விட அவர் ஒரு நல்ல மனிதர்.
இந்தப் படத்தை நாங்கள் லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறோம். லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பில் இருப்பதால் அவருக்கு பதிலாக அவருடைய கல்லூரி கால நண்பரும், அந்த நிறுவனத்தின் இணை தயாரிப்பாளருமான பிரதீப் இங்கு வருகை தந்திருக்கிறார். அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாங்கள் முதன்முதலாக ஆந்தாலஜி பாணியிலான திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட முயற்சி செய்தபோது அதில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'களம்' எனும் குறும் படமும், ரத்னகுமார் இயக்கிய 'மது' எனும் குறும் படமும் இடம்பெற்றது. அந்த காலகட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ் - லோகேஷ் கனகராஜ்- நலன் குமாரசாமி- அல்போன்ஸ் புத்திரன்- விஜய் சேதுபதி- பாபி சிம்ஹா - சந்தோஷ் நாராயணன்- ஆகியோர் ஒரு குழுவாகவும், நண்பர்களாகவும் தான் இருந்தோம். இன்று வரை ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஆதரித்து வருகிறார்கள்.
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் ஒரு படத்தை வழங்குகிறது என்றால் அதற்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவாகி இருக்கிறது. அதனை நாங்கள் தொடர்ந்து தக்க வைப்பதற்காக தரமான படைப்புகளை வழங்கி வருகிறோம். இதற்காக இயக்குநர்களான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில், '' 29 வயதிலிருந்து 30 ஆவது வயதை தொட்டால் ஜாதகம் ரிஜெக்ட் ஆகும் . அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆகும். இப்போதெல்லாம் இளைஞர்கள் படம் பண்ண வந்து விட்டார்கள் என்று சொல்லி ஸ்கிரிப்டுகள் ரிஜெக்ட் ஆகும்.
நான் 'மது' எனும் பெயரில் குறும்பட ஒன்றை இயக்கினேன். அந்த கதையை தான் ' மேயாதமான்' எனும் திரைப்படமாக ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. என்னை இயக்குநராகவும் அறிமுகப்படுத்தியது.
சமூக வலைதளங்களில் என்னுடைய புகைப்படத்தை பதிவிட்ட போது சிலர் என்னை மதன் கௌரி என கருதினர். திரையுலகில் எழுத்தாளராக கதாசிரியராக பணியாற்றிய போது சந்திக்கும் நபர்கள் என்னிடம் விஜய் சேதுபதி பற்றியும், கார்த்திக் சுப்புராஜ் பற்றியும், லோகேஷ் கனகராஜ் பற்றியும் தான் விசாரிப்பார்கள். அப்போது எனக்குள் நான் யார்? என்ற கேள்வி எழுந்தது.
என்னுடைய 29 வது வயதில் லோகேஷ் எனும் நண்பன் கிடைத்தான். இந்தப் படத்திற்கு ஏன் 29 என பெயரிட்டேன் என்றால் அந்த வயது தான் முக்கியமானது. என்னுடைய வாழ்க்கையில் எனக்கு அந்த வயதில்தான் பகிர்ந்து கொள்ள இயலாத எதிர்மறை எண்ணம் ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் படத்தொகுப்பாளர் சதீஷ்குமார் தான் 'உங்களை நீங்கள் உள்ளுக்குள் தேடுங்கள் அல்லது புறத்தில் தேடுங்கள்' என்று சொல்லி, சபரிமலைக்கு மாலை போட்டு யாத்திரை சென்று வாருங்கள் என அறிவுறுத்தினார்.
என்னைப் பொறுத்தவரை உடல் தான் கடவுள். மனசு தான் தெய்வம் என்ற கொள்கை உடையவன். சபரிமலை யாத்திரை செல்லும்போது வாழ்க்கை ஏற்றம் இறக்கங்களைக் கொண்டது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.
'மேயாத மான்' படத்தில் பணியாற்றியவர்களுடன் மீண்டும் இந்த படத்தில் இணைந்து இருக்கிறேன். மேயாத மான் ரொமான்டிக் காமெடி படம் என்றால் .. இந்த' 29' படமும் வித்தியாசமான கேரக்டருடன் கூடிய ரொமாண்டிக் படம் தான்.
என் நண்பன் லோகேஷ் கனகராஜ் தற்போது அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக குற்றாலத்தில் முகாமிட்டிருக்கிறார். அதனால் இதில் கலந்து கொள்ள முடியவில்லை. அவருடைய நண்பரான பிரதீப் இங்கு வருகை தந்திருக்கிறார்.
நடிகை ப்ரீத்தி அஸ்ரானியிடம் இப்படத்தின் கதையை சொன்னேன். முழுவதுமாக கேட்டுவிட்டு எனக்கு சில இடங்களில் நெருடல் இருக்கிறது. அதில் நடிப்பதற்கு மனம் ஒப்பவில்லை என்றார். அவரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்துவதற்காக விளக்கம் அளித்தேன். ஆனாலும் அவருடைய முடிவில் அவர் உறுதியாக இருந்தார். அதுதான் இந்த கதையை ஒரு பெண்ணால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால்.. நாம் ஏன் வற்புறுத்த வேண்டும் என நினைத்தேன். அவர்கள் மறுத்ததால் திரைக்கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தினேன். அதன் பிறகு படத்தின் தோற்றமே மாறிவிட்டது. இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் நாயகனான விது ஒரு வளர்ந்த குழந்தை. அவர் 'ஜிகர்தண்டா 2' படத்தில் நடித்திருக்கிறார். ' ரெட்ரோ' படத்திலும் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படத்திலும் அவருடைய முகம் தெளிவாக இருக்காது. இந்த படத்தில் தான் அவருடைய முழு உருவத்தையும் ஸ்டைலாக காட்சிப்படுத்தி இருக்கிறோம்.
நாம் அன்றாடம் பார்க்கும் பக்கத்து வீட்டு பையனின் கதை தான் இது. ஆனால் மற்றவர்கள் பார்க்க இயலாத கோணத்தில் உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படம் தனுஷ் நடித்த விஐபி படம் போல் இருக்க வேண்டும் என்று நினைத்து எழுதி இருக்கிறேன் ''என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், '' ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் 'மேயாத மான்' முதல் படம். அதைத்தொடர்ந்து இதுவரை 17 படங்களை தயாரித்திருக்கிறோம். இருந்தாலும் எங்களுடைய மேயாத மான் முதல் படம் என்பதாலும், அதனை தயாரிக்கும் போது எங்களுக்கு கிடைத்த அனுபவம் பொக்கிஷமானது. அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார் எங்கள் நிறுவனத்திற்கு எப்போதும் சிறப்பானவர்தான்.
ரத்ன குமார் சிறந்த எழுத்தாளர்- கதாசிரியர்- இயக்குநர். அவர் பேசும் பல விசயங்களில் எனக்கு முரண்பாடு இருந்தாலும்.. அவருடன் சகோதர உறவு உண்டு.
இந்தப் படத்தின் கதையை மேயாத மான் படத்தை முடித்த பிறகு எங்களிடம் சொன்னார். இந்தக் கதையை நடிகர் தனுஷிடம் சொன்னோம். அவரும் கேட்டு மிகச் சிறப்பாக இருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் என்னால் நடிக்க முடியாது. நான் இப்போது ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வருகிறேன் . வேறு யாராவது இளம் வயதினர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார்.
இந்தக் கதை தனுஷிடம் சொல்லப்பட்டதால் இதனை திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் நடிப்புத் திறன் கொண்ட நடிகரும், நடிகையும் இருந்தால்தான் பொருத்தமானதாக இருக்கும் என்றேன். இதற்காகவே சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாகி விட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ரத்னகுமார் விதுவை ஆடிஷன் செய்து அவரை தேர்ந்தெடுத்தார். டபுள் எக்ஸ் படத்திற்கு முன் விது தான் ஹீரோ என்றால் நான் ஒப்புக் கொண்டிருக்க மாட்டேன். ஆனால் 'ஜிகர்தண்டா 2', ' ரெட்ரோ ' படத்தில் நடித்ததற்கு பிறகு தன்னை நடிகனாக வெளிப்படுத்துவதற்கு கடினமாக உழைத்து தகுதிப்படுத்திக்கொண்டான்.
அவனது ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் பார்த்துதான் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு சரி என்று ஒப்புக்கொண்டேன்.
ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த கதாபாத்திரத்தை பற்றி சிந்திக்க வேண்டும். அதற்கான உடல் மொழியை வெளிப்படுத்துவதற்காக முயற்சிக்க வேண்டும்.. என்பதெல்லாம் அவருக்கு தெரிந்திருந்தது. இதனை நான் 'ரெட்ரோ ' படத்தில் நடிக்கும் போது அவரிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை தெரிந்து கொண்டேன்.
இந்தப் படத்தில் விதுவும், ப்ரீத்தி அஸ்ரானியும் நன்றாக நடித்திர
ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது.
சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசின் செய்தி துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நடிகை சிம்ரன், இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழாவில் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.
இந்த விருதை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் இருந்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார்.
விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-
சென்னையில் நடைபெறும் 23-வது சர்வதேச திரைப்பட விழா சிறப்பான ஒன்று. நாளை (12.12.2025) ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பல்லாண்டு காலம் வாழ்ந்து அவர் திரையுலகை வழி நடத்த வேண்டும். உலக அரங்கில் திரைப்படத்துறையில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் கேன்ஸ், வெனிஸ், ஜெர்மனி, டொரோண்டோ போன்ற புகழ்பெற்ற திரைப்பட விழாக்களின் வரிசையில் சென்னை திரைப்பட விழாவும் கம்பீரமாக திகழ்வதில் மகிழ்ச்சி. சுமார் 51 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 122 தலைசிறந்த படங்களை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த விழா தரத்திலும் உலக விழாக்களுக்கு இணையானது. தென் கிழக்கு ஆசியாவில் மிகச்சிறந்த விழாக்களில் ஒன்றாக சென்னையில் நடைபெறும் இந்த விழாவை உயர்த்துவதே நமது இலக்கு.
நீண்ட கால கனவு
2008-ம் ஆண்டில் இந்த விழா சிறப்பாக நடத்த ரூ.25 லட்சம் வழங்கி வித்திட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அவரது வழியில் வந்த நமது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவின் முக்கியத்துவம் உணர்ந்து, 2023-ம் ஆண்டு முதல் இந்த நிதியை ரூ.85 லட்சமாக உயர்த்தினார். இந்த ஆண்டு முதல் ரூ.95 லட்சமாக உயர்த்த அனுமதி தந்திருக்கிறார். அதேபோல கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கான மானியத்தை ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு உள்ளார். திரைப்படத்துறைக்கும், திராவிட இயக்கத்துக்கும் உள்ள உறவை பிரிக்க முடியாது.
திரைப்பட துறையினருக்கு சொந்த வீடு என்பது நீண்ட கால கனவு. அந்த கனவை நிஜமாக்கும் வகையில் 2019-ம் ஆண்டு பையனூரில் சுமார் 90 ஏக்கர் நிலத்தை கருணாநிதி ஒதுக்கீடு செய்தார். இடையில் ஏற்பட்ட தடைகளை நீக்கி சமீபத்தில் அந்த அரசாணையை மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுப்பித்து தந்தார். மறுநாளே பெப்சி தொழிலாளர்களுக்கு 50 ஏக்கரும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு 10 ஏக்கரும், நடிகர் சங்கத்திற்கு 7 ஏக்கரும் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு 8 ஏக்கர் நிலத்துக்கான ஆணையும் வழங்கியுள்ளார்.
திரைப்படத்துறைக்கும், திராவிட இயக்கத்துக்கும் உள்ள உறவு வரலாற்று பக்கங்களில் பொறிக்கப்பட்டவை. கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 2009-ம் ஆண்டு கருணாநிதியால் உருவாக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர் நல வாரியம் இன்றைக்கு 27 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை போன்றவைகள் எல்லாம் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள குத்தம்பாக்கத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ 500 கோடி மதிப்பில் வி.எப்.எக்ஸ்., அனிமேஷன் வசதிகளுடன் கூடிய அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கும் பூர்வாங்க பணிகள் தொடங்கி இருக்கிறது. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு சுமார் ரூ.40 கோடி மதிப்பில் 3 புதிய அதிநவீன படப்பிடிப்பு தளங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகளை பொருத்தவரை இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஏறத்தாழ 2009-ம் ஆண்டு முதல் பாக்கியிருந்த விருதுகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. 2016 முதல் 2022 வரையிலான விருதுகள் விரைவில் வழங்கப்பட இருக்கின்றன. தொடர்ந்து இந்த அரசு திரையுலகுக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
12 தமிழ் படங்கள் தேர்வு:
வருகிற 18-ந்தேதி வரை நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் இருந்து '3 பி.எச்.கே.', 'மாமன்', 'மெட்ராஸ் மேட்னி', 'அலங்கு', 'பிடிமண்', 'காதல் என்பது பொதுவுடமை', 'மாயக்கூத்து', 'மருதம்', 'ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் மெட்ராஸ்', 'பறந்து போ', 'டூரிஸ்ட் பேமிலி', 'வேம்பு' உள்ளிட்ட 12 படங்கள் திரையிடப்படுகின்றன.
ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, அவரது 50 ஆண்டு கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) 'பாட்ஷா' படம் திரையிடப்படுகிறது.
“45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!
சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பு “45: த மூவி” — கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரபல விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர்-இயக்குனர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குனர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்த படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையிட தயாராகியுள்ளது. ஏற்கனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றாக “45: த மூவி” — கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் டிரைலர் வெளியீட்டின் வாயிலாக முழுமையாக அறிமுகப்படுத்த உள்ளது. டிசம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் டிரைலர் குறித்து ரசிகர்களிடையே தேசிய அளவில் கூட பெரும் ஆவல் நிலவி வருகிறது.
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி. ஷெட்டி ஆகியோரின் புதுமையான லுக்குகளை மையப்படுத்திய அறிவிப்பு போஸ்டர் — படத்தின் மர்மத்தையும் ஆர்வத்தையும் பலமடங்கு கூட்டுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மிகப்பெரிய ரிலீஸிற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
முன்னணி ஸ்டண்ட் இயக்குநர்களான டாக்டர் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டி’சூசா ஆகியோர் வடிவமைத்த அதிரடி காட்சிகள், சத்யா ஹெக்டேவின் கவர்ச்சியான ஒளிப்பதிவு, கே.எம். பிரகாஷின் துல்லியமான எடிட்டிங் ஆகியவை படத்தின் தரத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றன. அனில் குமார் எழுதிய வசனங்களும் ஜானி பாஷா அமைத்துள்ள ஆற்றல்மிக்க நடனக் காட்சிகளும் படத்திற்கு கூடுதல் வலிமையைக் கூட்டுகின்றன.
தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, JioHotstar அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் இன்று கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம பூஷன் கமல்ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். JiohotStar-ன் SVOD மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீராம் மற்றும் JiohotStar தெற்கு பொழுதுபோக்கு கிளஸ்டர் தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கூட்டாண்மை தமிழ்நாட்டின் படைப்பு, தயாரிப்பு சூழலமைப்பை விரிவுப்படுத்தி, தென்னிந்திய படைப்பாளிகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது.
இந்த சர்வதேச முதலீட்டு வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். “JioHotstar-உடன் மேற்கொள்ளப்படும் இந்தக் கூட்டாண்மை 1,000 நேரடி வேலைகளும் 15,000 மறைமுக வேலைகளும் உருவாக்கும். சினிமாவுடன் இணைந்து வலுவான பொருளாதாரத்தை கட்டமைப்பதில் அரசு தொடர்ந்து செயல்படுகிறது,” என அவர் தெரிவித்தார்.
நிகழ்வில் JioHotstar-ன் தென்னிந்திய பொழுதுபோக்கு பிரிவிற்கான 25 புதிய தலைப்புகள் வெளியிடப்பட்டன. இதில் பிரபல தொடர்களின் புதிய சீசன்கள், ஒரிஜினல் கதைகள், பெரும் நட்சத்திரங்கள் கொண்ட தயாரிப்புகள், ரியாலிட்டி ஷோக்கள் என பல நிகழ்ச்சிகள் இடம்பெறும். கேரளா கிரைம் ஃபைல்ஸ் S3, சேவ் தி டைகர்ஸ் S3, குட் வைஃப் S2 போன்ற பிரபல தொடர்கள் 2026 JioHotStar சிறப்பாக வரவிருக்கின்றன. கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ், லிங்கம், விக்ரம் ஆன் டியூட்டி, ROSLIN போன்ற புதிய அசல் படைப்புகளும் அறிவிக்கப்பட்டன. விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான், நிவின் பாலி நடிக்கும் பார்மா, இந்தி தொடரான ஆர்யாவின் தென்னிந்திய வடிவான ‘விஷாகா’ உள்ளிட்ட பல படைப்புகளும் அடுத்த வருடம் வரவிருக்கின்றன. மேலும் பிக் பாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும் நிலையில் ‘ரோடீஸ்’ தெலுங்கில் முதல் முறையாக அறிமுகமாகிறது.
“இனி இந்திய மொழிகளில் எடுக்கப்படும் படங்கள் அந்தந்த மொழி அடிப்படையில் இல்லாமல், இந்திய படங்களாக வெளியாகும். காந்தாரா, த்ரிஷ்யம், போன்ற படங்கள் அதற்கு சான்று,” என கமல்ஹாசன் உரையாற்றினார். “தெற்கு என்றுமே படைப்பாற்றல் மையம்,” என கிருஷ்ணன் குட்டியும் குறிப்பிட்டார். மோகன்லால், நாகார்ஜுனா, தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை ஒரே தளத்தில் கொண்டுவரும் இந்த முயற்சி இந்திய பொழுதுபோக்கை மறுவரையறை செய்யும் என JioHotstar நம்பிக்கை தெரிவித்துள்ளது.
₹4,000 கோடி முதலீட்டுடன் தமிழ் மாநிலத்துடன் தொடங்கிய இந்த கூட்டாண்மை, தென்னிந்திய திரைப்படத்துறைக்கும் அதன் படைப்பாளிகளுக்கும் புதிய வாய்ப்புகளையும், உலகளாவிய விரிவாக்கத்தையும் தருமென எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













