சற்று முன்
சினிமா செய்திகள்
சர்வதேச திரைப்பட விழாவில் மக்களின் வரவேற்பை பெற்ற 'அமலா' விரைவில் திரையரங்குகளில்
Updated on : 02 March 2021

18வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த 18.02.2021அன்று சென்னை PVR சத்யம் திரையரங்கில் கோலாகலமாக தொடங்கியது.உலக நாடுகளில் இருந்து, பல மொழிகளில், பல திரைப்படங்கள் திரையிடப்பட்ட போதும், இந்தியாவில் இந்தியன் பனோரமா பிரிவில் இருந்து மொத்தம் 17 படங்கள் தேர்வாகி இருந்தது . அதில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட "அமலா" திரைப்படமும் தேர்வாகி இருந்தது.
இயக்குனர் நிஷாத் இப்ராஹிம் இயக்கத்தில், நடிகர்களான ஸ்ரீகாந்த், "ஆட்டோ சங்கர் வெப் சீரிஸ்" புகழ் அப்பாணி சரத் ,அனார்கலி மரிக்கர், இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்களான வைஷ்ணவ், ஆன்மரியா மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை முஷினா நிஷாத் இப்ராஹிம் தயாரித்துள்ளார்.
இசையமைப்பாளர் லிஜின் பொம்மினோ இசையில் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த அமலா திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
படம் தொடங்கிய சில நொடிகளிலேயே ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளதாகவும், படம் முடியும் வரையிலும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களது நாற்காலி முனையில் அமர்ந்தபடியே படத்தை பார்த்து ரசித்ததாகவும் தெரிவித்தனர். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஸ்ரீகாந்த், அப்பணி சரத், அனார்கலி மரிக்கர் ஆகியோரின் நடிப்பு தங்களை வெகுவாக கவர்ந்ததாக ரசிகர்கள் ஒவ்வொருவரும் இயக்குனரிடம் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
வசனம் ராம் பிரகாஷ், ஒளிப்பதிவு அபிலாஷ் சங்கர், பாடல்கள் மோகன்ராஜன், ஸ்டண்ட் பயர் கார்த்திக், கலை சிஜி பட்டணம்,
மக்கள் தொடர்பு மணவை புவன், தயாரிப்பு மஸ்காட் புரொடக்ஷன்ஸ் முஷினா நிஷாத் இப்ராஹிம்.
இந்தப் படத்தில், ஒரு இளம் பெண் ஒருத்தி மர்மமான முறையில் ஒரு பூங்காவில் இறந்து கிடக்க, அது கொலையா..? தற்கொலையா..? என்று போலீசார் குழம்பியிருக்கும் அந்த சமயத்தில் உயர் அதிகாரியான நடிகர் ஸ்ரீ காந்த் இதை கொலைதான் என்று அடித்து சொல்லி, துப்பு துலங்கும் அதே நேரத்தில் நகரத்தில் அடுத்தும் ஒரு இளம் பெண் இறக்கும் தருவாயில் இருக்கிறாள். அவளைக் காப்பாற்றிய ஸ்ரீ காந்த், அவளிடம் விசாரிக்க , அவளோ "அமலா" என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லி இறந்து விடுகிறாள். புரியாத மர்மமாக இருக்கும் அந்த நேரத்தில், சீர்திருத்த பள்ளியிலிருந்து ஒருவன் தப்பித்து விட்டதாக தகவல் கிடைக்க, அந்த தப்பித்தவன் யார்..? அவனுக்கும் இந்த கொலைகளுக்கும் என்ன தொடர்பு..? தப்பித்தவன் பிடிப்படானா.? என்று துப்பு துலங்குவதே மீதி படத்தின் கதை.
சமீபத்திய செய்திகள்
அருண் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் 'பார்டர்'. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார்.
'AV31' என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் மூத்த நடிகர் விஜயகுமார், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குனர், அறிவழகன், நடிகர் அருண் விஜய், நடிகை ஸ்ஃடெபி பட்டேல், இசையமைப்பாளர் சாம் சி எஸ், பாடலாசிரியர் விவேகா, இயக்குனர் ஏ. எல் விஜய், இயக்குனர் கார்த்திக் நரேன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் பிரபு திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடக்கமாக சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் 'த பார்க்' நட்சத்திர ஹோட்டலில் முகப்பு பகுதியில் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் டைட்டிலான 'பார்டர்' வெளியிடப்பட்டது. தமிழ் திரை உலகில் முதன்முறையாக இந்த தொழில்நுட்பத்தில் ஒரு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால், விழாவிற்கு வருகை தந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் வியப்புடன் கண்டுகளித்து கரவொலி எழுப்பினர். பின்னர் விழாவில் படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது. தொடர்ந்து விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான பிரபு திலக் பேசுகையில், 'தமிழ் புத்தாண்டு தினமான இன்று கோடை மழை பெய்தது. கோடையில் மழை எவ்வளவு அபூர்வமோ.. அந்த அளவிற்கு இந்தப் படமும் அபூர்வமான திரைப்படம். இயக்குனர் அறிவழகன் என்பது அறிவு- அழகன் என காரணப்பெயராகிவிட்டது. இதைவிட சிறப்பாக அவரது பெற்றோர்கள் இவருக்கு பெயர் சூட்ட இயலாது. இந்த கொரோனா காலகட்டத்தில் திரை அரங்கிற்கு வருகை தந்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களின் காலில் விழுந்து நான் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து கலைகளின் சங்கமம் தான் சினிமா என்பதை யாராலும் மறுக்க இயலாது. அனைத்து திறமைசாலிகளின் இறுதி இலக்கு சினிமாவாக இருப்பதை நினைத்து ஆராதிக்கிறேன். கொண்டாடுகிறேன்.
இன்று பிறந்திருக்கும் 'பிலவ' ஆண்டிற்கான அர்த்தத்தில் 'தாவி குதித்து' என்ற ஒரு பொருளும் உண்டு. அதேபோல் இந்த ஆண்டில் திரை கலைஞர்களுக்கு 'தாவிக்குதித்து அடையும் வெற்றி போல்' பெரும் வெற்றியைப் பெற வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். இந்த நாளில் 'பார்டர்' படத்தையும், அதன் ஃபர்ஸ்ட் லுக்கையும் அறிமுகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 'அடுத்த சாட்டை', 'வால்டர்', 'பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படக்குழுவுடன் இணைந்திருக்கிறேன். இப்படத்தின் கதாநாயகனான அருண் விஜய் நடித்த அனைத்து திரைப்படங்களையும் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் முழுமையாக கிடைக்கவில்லையோ.. என்ற ஆதங்கம் என்னுள் உண்டு. அந்த அடையாளத்தை இந்த 'பார்டர்' திரைப்படம் பெற்றுத் தரும் என உறுதியாக நம்புகிறேன். என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னால் என்னுடைய தாயாரின் ஆசீர்வாதமும், வழிகாட்டலும் இருக்கிறது. அவர்கள் என்னை இயக்கும் மாபெரும் சக்தி. இப் படத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், ஏனையவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'பார்டர்' படத்தை மே மாதம் திரை அரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். 'என்றார்.
தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில்,' இன்னும் 'ஈரம்: குறையாமல் இருக்கும் இயக்குனர் அறிவழகனுக்கு வாழ்த்துக்கள். டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக புதிதாக சிந்தித்து வெளியிட்டதற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். இன்றைய சூழலில் திரைப்படங்களுக்கு முதல் நாள், முதல் காட்சிக்கு ரசிகர்களை வரவழைப்பது தான் சவாலான பணியாக இருக்கிறது. அதற்கான பணியை இந்த படக்குழுவினர் மிகப்பொருத்தமாக செய்திருக்கிறார்கள். அதனால் இந்தப் படத்திற்கு மிக சிறந்த ஓபனிங் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நடிகர் அருண்விஜய் திரை உலகில் அறிமுகமான முதல் நாளிலிருந்து கடந்த 23 ஆண்டுகளாக தெரியும். அவருடன் 'அக்னி சிறகுகள்' என்ற படத்தில் பணியாற்றியிருக்கிறேன். கடினமாக உழைப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதனை அருண்விஜய் விசயத்தில் நேரடியாக கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இத்தனை ஆண்டுகாலம் அவருடைய தன்னம்பிக்கையை பாதுகாத்து, அவரை வளர்த்தெடுத்த அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முயற்சி திருவினையாக்கும் என்பது ஏவிஎம் நிறுவனத்துக்கு மட்டுமல்ல, அருண் விஜய்க்கும் பொருந்தும் என்பதை நிரூபித்து வருகிறார். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தபிறகு அருண் விஜயின் வெற்றி உறுதியாகியிருக்கிறது. இப்படத்தை வெளியிடும் பிரபு திலக் பெரிய வெற்றியைப் பெறவேண்டும். அம்மாவின் ஆசீர்வாதத்தை பெற்றவர்கள் நிச்சயம் வெற்றி அடைவார்கள்.' என்றார்.
இயக்குனர் அறிவழகன் பேசுகையில்,' என்னுடைய படைப்பை காட்சி ரீதியாகவும், கதையாகவும் ரசிகர்களிடம் துல்லியமாக சேர்க்க வேண்டுமென நினைப்பேன். என்னுடைய எண்ணத்தையும், எதிர்பார்ப்பையும் புரிந்து கொள்ளும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதை தான் நான் விரும்புகிறேன். அந்த வகையில் 'பார்டர்' படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தை 47 நாட்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி, நிறைவு செய்தோம். 20 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு செய்தவுடன் கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தினோம். இத்தகைய சூழலில் என்னுடைய உதவியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து கடினமாக உழைத்து படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா அவர்களின் நோக்கமும், என்னுடைய எண்ணங்களும் ஒரே நேர்கோட்டில் பயணித்ததால், இப்படத்தை எந்தவித இடையூறுமின்றி இயக்க முடிந்தது. எனக்கும் அவருக்கும் கலை மீது ஒரே விதமான பார்வை இருந்தாலும், அவருடைய பார்வையில் வணிகமும் இணைந்திருக்கும். இன்று வெளியாகி இருக்கும் ‘பார்டர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் புதிய தொழில்நுட்பத்தில் வெளியாகி இருப்பதற்கு அவரும், அவரது குழுவினரின் அயராத உழைப்புமே காரணமாகும்.
'ஈரம்', 'குற்றம் 23' படத்தின் வெற்றிக்குப் பிறகு எனக்கு கூடுதல் பொறுப்புணர்வு ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன். 'குற்றம் 23' பட வெளியீட்டுக்குப் பிறகு இயக்குனர் ஹரி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டியது மறக்க முடியாதது. வினியோகஸ்தர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டினார்கள். இதுபோன்ற பாராட்டுகள் தான் இயக்குனர்களை உற்சாகப்படுத்தும்.
எனக்கும், அருண் விஜய்க்கும் இடையே என்றைக்கும் 'பார்டர்' இருந்ததில்லை. அதனால் தான் அவரை வைத்து தொடர்ந்து படங்களை இயக்க முடிகிறது. 'குற்றம் 23' படத்திற்கு பிறகு நான்கு ஐந்து திரைக்கதைகளை எழுதி, பட தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் இயக்க திட்டமிட்டேன். ஆனால் பல காரணங்களால் அவை நடைபெறவில்லை. இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தேன். ஒரு நடிகரை வைத்து இயக்குனர் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கிறார் என்றால், அவர்கள் இருவருக்குமிடையே ஆழ்ந்த புரிதல் இருப்பதால் தான் சாத்தியமாகிறது. அது போன்ற ஆழ்ந்த நட்பு, எனக்கும் அருண் விஜய்க்கும் இடையே இருக்கிறது. அவர் என்மீது வைத்திருந்த நம்பிக்கைதான் எனக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பும், கூடுதல் பொறுப்புணர்வையும் அளித்தது.
'குற்றம் 23' படத்திற்கும், 'பார்டர்' படத்திற்கும் என்ன வேறுபாடு என்றால், அதில் கதைக்குள் நடிகர் அருண் விஜய் இருந்தார். அந்த கதைக்கு தேவையான எமோஷனலான ஆக்ஷன் கலந்த நடிப்பை வழங்கினார். 'பார்டர்' படத்தில் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான கோணத்தை -அற்புதமான நடிப்பை பார்க்கலாம். இந்த 'பார்டர்' திரைப்படத்தை திரையரங்கில் கண்டுகளிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். திரை அரங்கிற்கு வருகை தரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யும்.' என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசுகையில்,' ரசிகர்களுக்கும், வருகை தந்திருக்கும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இதுபோன்ற ஒரு நன்னாளில் நான் நடித்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சத்திற்கு இடையே இப்படத்தின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'கைதி' படத்தின் பின்னணி இசையை பார்த்தும், கேட்டும் வியப்படைந்தேன். இப்படத்தின் கதையைக் கேட்டபிறகு இயக்குனர், சாம் சிஎஸ் தான் இசையமைக்கிறார் என்று சொன்னதும் நான் உற்சாகமானேன். ஏனெனில் 'பார்டர்' படத்திற்கு பின்னணி இசைக்கு பெரும் பங்களிப்பு உண்டு. என்னுடைய கலை உலக பயணத்தில் நான் நம்பும் ஒரு சில இயக்குனர்களில் அறிவழகன் சாரும் ஒருவர். ஒரு நடிகருக்கு பக்கபலமாக இருப்பவர்கள் இயக்குனர்கள் தான். அந்த வகையில் இயக்குனர் அறிவழகன் எனக்கு பக்கபலமாகவும், நல்லதொரு புரிதலுடனும் இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் நல்ல விதமாக அமைந்து விட்டது. இதற்குமுன் வேறு ஒரு தலைப்பை வைக்கலாமென திட்டமிட்டிருந்தோம். ஆனால் 'பார்டர்' என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்தது, வெற்றிக்கான ஆசியாக நினைக்கிறேன்.
நடிப்பை பொருத்தவரை இப்படம் எனக்கு சவாலாக இருந்தது. திரைப்படங்கள் நன்றாக இருந்தால் திரையரங்கத்திற்கு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்பதை இந்த கொரோனா தொற்று காலகட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். 'பார்டர்' படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் 3டி மேப்பிங் தொழில்நுட்பத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் அவரது குழுவினர் மும்பைக்கும், புது டெல்லிக்கும் கடந்த நான்கு மாத காலமாக பறந்து பறந்து கடினமாக உழைத்ததை நான் நேரில் கண்டிருக்கிறேன். தற்போது ரசிகர்கள் அதனை பெரிதும் வரவேற்கிறார்கள். என்னுடைய நடிப்பும் அடுத்த கட்டத்திற்கு 'பார்டர்' படம் நகர்த்தியிருக்கிறது . இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
இறுதியில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா வருகை தந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இடம்பெற்றதால் இந்த திரைப்படம் இந்தியா முழுமைக்குமான Pan- Indian Film ஆக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு வெளியிட்ட நேதாஜி மோஷன் டீஸர் !
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 ஆவது நினைவு தினத்தை போற்றும் விதமாக, கௌதம் கார்த்திக்கின் “செல்லப்பிள்ளை” படக்குழு ஒரு அழகான மோஷன் டீஸரை வெளியிட்டுள்ளது.
இது குறித்து இயக்குநர் அருண் சந்திரன் கூறியதாவது...
“செல்லப்பிள்ளை” படக்குழு சார்பாக எங்களின் மோஷன் போஸ்டரை மிகப்பெரும் வெற்றி பெற செய்தமைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நம் தேசத்தின் நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125 வது நினைவு தினத்தை போற்றும் விதமாக, அவருக்கான அர்ப்பணிப்பாக, எங்கள் சார்பில் ஒரு அருமையான காணொளியை உருவாக்கினோம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நம் தேசத்தின் தந்தை. அவரின் தியாகத்தையும், வீரத்தையும் இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். தேவர் மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நேதாஜி குறித்து பேசிய “ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போருக்கு கூப்பிட்டப்போ, வீச்சறிவாளும் வேல்கம்புமா... கெளம்புன பயலுக நம்ம பயலுகதேன்” ( தமிழர்கள் ) எனும் வசனம் என்னை ஆழமாக பாதித்தது. இந்த மோஷன் டீஸரில் நேதாஜி 1942 ல் துவங்கிய இந்திய தேசிய ராணுவத்தின், ஜப்பான், ஆங்கிலம், சிங்கப்பூர் மற்றும் தமிழ் மொழியில் அமைந்துள்ள அடிக்கல்லை காட்டியுள்ளோம். இது நம் அனைவருக்கும் பெருமை. தமிழர்களுக்கும் நேதாஜிக்கும் உள்ள அசைக்க முடியாத உறவு, அவரது தீரத்தை இப்படத்திலும் இணைக்க வைத்துள்ளது. முழுக்க முழுக்க கொண்டாட்ட திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தின், நடிகர் மற்றும் தொழில் நுட்ப குழுவினரை இறுதி செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.
அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்கும் இப்படத்தினை SST Productions சார்பில் தயாரிப்பாளர் ஃபைரோஸ் ஹுசேன் ஷெரீஃப் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் தீஷன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
எனது அடுத்த படத்தில் ஒரு கதாநாயகி இலக்கியா... நடிக்க எனக்கு ஒரு தயக்கம் இருந்தது!
டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் 'நீ சுடத்தான் வந்தியா'.இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார் .ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது.இப்படத்தில் கவர்ச்சிநடிகை இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார்.
கவர்ச்சி நடிகையுடன் நடித்த அனுபவம் எப்படி என்பதைப் பற்றி புதுமுக நடிகர் அருண்குமார் பேசும்போது,
" சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும் .ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும். நான் 'நீ சுடத்தான் வந்தியா' படத்தில் நடித்த போது அதை உணர்ந்தேன்.
எனக்கு சினிமா மீது காதல் உண்டு. நடிப்பின் மீதும் ஆர்வம் உண்டு. இருந்தாலும் ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு ஒரு பயிற்சி தேவை என்று நினைத்தேன்.அதனால் நான் கூத்துப்பட்டறையில் மாஸ்டர் பொன்முடி அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு என்னைத் தயார் செய்து கொண்டு பிறகுதான் நடிக்க வந்தேன். இருந்தாலும் இப்படத்தில் நடிக்கும்போது எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. சில நடைமுறைத் தடைகள் இருந்தன. இது சில நாட்களில் சரியாகி விட்டது.
இயக்குநர் எனக்குத் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார் .அப்போதுதான் மாஸ்டரிடம் பெற்ற நடிப்புப் பயிற்சி எனக்கு பெரிய உதவியாக இருந்ததை உணர்ந்தேன்.
இந்த படத்தில் 5 பாடல்கள். அதில் நானும் இலக்கியாவும் தோன்றும் 3 பாடல்கள் இருக்கின்றன. இலக்கியா டிக் டாக் வீடியோக்களில் புகழ்பெற்றவர்.அவருக்கும் இது முதல் படம்; எனக்கும் இது முதல் படம் 'எனவே இருவருக்கும் சில தயக்கங்கள், மனத்தடைகள், இருந்தன அது போகப் போக சரியாகி விட்டது.
இது ஒரு காதல் ,சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோது தயாரிப்புத்துறைப் பற்றி தெரிந்து கொண்டேன். எவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு படம் உருவாகிறது என்பதை அறிந்து கொண்டேன். இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட் படம் என்று சொல்லலாம் .முழுநீள வணிகப் படத்துக்கு என்னென்ன தேவையோ அதற்கேற்ப படப்பிடிப்பு உபகரணங்களைக் கொண்டுதான் படப்பிடிப்பு நடத்தினார்கள். இதில் ரெட் ட்ராகன், ஆரி கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. பெரிய படங்களுக்கான படப்பிடிப்பு யூனிட் யன்படுத்தப்பட்டது. இந்தப் படம் நடிப்பில் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அது போலவே ரசிகர்களுக்கும் திருப்தி தரும் என்று நம்புகிறேன்" நான் இப்போது அடுத்த படத்தின் வேலையை தொடங்கி விட்டேன் எனது அடுத்த படத்தின் 5 கதாநாயகிகள் அதில் ஒருவர் இலக்கியா என்பது இப்போதைய உறுதி என்று கூறுகிறார்
மாணவர்களுக்காக இயக்குனர் வெற்றிமாறன் எடுத்துள்ள புதிய முயற்சி!
தனியார் திரைப்பட பயிற்சி பள்ளிகள் அதிகரித்து வரும் நிலையில், அவைகள் வசூலிக்கும் கட்டணம் மிகப்பெரிய தொகையாக இருப்பதால், பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே சினிமா சார்ந்த பயிற்சி சாத்தியமாகி வருகிறது. இத்தகைய நிலையை மாற்றி, பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச சினிமா பயிற்சிகள் அளிக்கும் வகையில் இயக்குநர் வெற்றி மாறன் ‘சர்வதே திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனம்’ என்ற பெயரில் சினிமா பயிற்சி பள்ளியை தொடங்கியுள்ளார்.
இயக்குநர் வெற்றிமாறன் தலைமையில் இயங்கும் இந்த சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனத்தின், (IIFC -International Institute of Film and Culture) வழிகாட்டியாக ராஜநாயகம் செயல்படுகிறார். கல்லூரிகளில் திரைப்பட சம்மந்த படிப்பான விஸ்காம் பட்டப்படிப்பை உட்புகுத்தியதில் ராஜநாயகத்திற்கு பெரும் பங்கு உள்ளது. இந்த பயிற்சி பள்ளியின் செயலாளராக வெற்றி துரைசாமி பொறுப்பேற்றுள்ளார்.
IIFC இன் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஒவ்வொரு மாணவருக்கும் 100 சதவீத மானியங்களுடன் முழுமையான உணவு, குடியிருப்பு வசதிகள் வழங்கப்படும் .
THE ELEGIBILITY CRITERIA:
● கல்வித் தகுதி: ஏதேனும் (ஊடகமல்லாத) பட்டம் பெற்றவர்கள்.
● வயது எல்லை: 21 - 25
● புவி-கலாச்சார பின்னணி: தமிழ் பேசும் + தமிழ் நாட்டிலிருந்து (முன்னுரிமை ஒரு மாவட்டத்திற்கு ஒன்று)
● சமூக-பொருளாதார விருப்பம்: சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள்; முதல் தலைமுறை பட்டதாரிகள் .
● 100% மானியங்களுக்கான ஐந்து-படி தேர்வு:
ஆரம்ப ஆய்வு, எழுதப்பட்ட சோதனை, கல்வி நேர்காணல், தொழில்முறை நேர்காணல் மற்றும் வீட்டு வருகை
●மொத்த உட்கொள்ளல்:
35-40 மாணவர்கள் (ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருவர்)
இந்த இலவச திரைப்பட மற்றும் கலாச்சார பயிற்சி வகுப்பில் சேருவதற்கான மேலும் பல விவரங்களை அறிய இந்த இணையதளத்தை பார்க்கவும் - http://www.iifcinstitute.com
திருநங்கைகள் தினத்துக்காக திருமூர்த்தியின் உருக்கமான குரலில் உருவான பாடல்
தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்தி அவ்வபோது சில படங்கள் வெளிவருவதுண்டு. சில ஆண்டுகளுக்குமுன் விஜய்சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கையாக நடித்திருந்தார்.
இப்போது திருநங்கைகள் தினத்துக்காக ஒரு பாடல் உருவாகியுள்ளது.
சமூகத்தில் தாங்கள் செய்யாத குற்றத்திற்காக ஏளனப் பார்வை, தீண்டாமை என்னும் தண்டனை அனுபவித்து வரும் பாவப்பட ஜீவன்கள் திருநங்கைகள்தான். எனவே, அவர்களின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளை ‘திருநங்கையர் நாள்’ எனக் கொண்டாட தமிழக அரசு மார்ச் 11, 2011 அன்று அரசாணை பிறப்பித்தது.
திருநங்கைகள் தினத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலை இசையமைப்பாளர் டி.இமானால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடகர் திருமூர்த்தி உருக்கமான குரலில் பாடியுள்ளார். இவர் செவ்வந்தியே மதுவந்தியே பாடல்மூலம் உலக புகழ் பெற்றவர். கொரொனா பரவலால் பாடகர் திருமூர்த்தி சென்னை வர இயலாத சூழலில் இசையமைப்பாளர் ஷாஜகான் அவரது சொந்த ஊரான ஊத்தங்கரைக்கே சென்று ஒலிப்பது செய்துள்ளார்.
*‘பாலு தயிறு மோரு எல்லாம் திரிதல் தானுங்க- இந்த பாலினத்தின் திரிதலுல தப்பு இல்லிங்க’, ‘பொதுமறையில இருக்கு மூனு பாலுங்க- அதே பொதுவெளியில இருந்தா என்ன குத்தங்க’*என்பது போன்ற தெறிக்கும் வரிகளில் கவனம் ஈர்க்கிறார் பாடலாசிரியர் செந்தமிழ்.
‘‘ திருநங்கைகள் குறித்து பாக்யா வார இதழில் சிறுகதை எழுதினேன்.அதைப் படித்துவிட்டு இயக்குநர் கே.பாக்யராஜ் அதன் கதையமைப்பை பாராட்டினார். சிறுகதை ரீச்சை விட பாடல்வடிவமாக வெளிவந்தால் அதிகமாக மக்களிடம் சென்றடையும் என்று அவர் தெரிவித்த கருத்து தான் இந்த பாடல் உருவாக அடித்தளம் என்கிறார் பாடலாசிரியர் செந்தமிழ்.
ஜெய் நடிக்கும் எண்ணித்துணிக, கிஷோர் நடிக்கும் ரூஸ்டர், மோசமான கூட்டம் போன்ற படங்களில் பாடல்கள் எழுதி வரும் செந்தமிழின் படைப்புகள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர்கள் ‘க/பெ ரணசிங்கம்’ விருமாண்டி, இ.வி கணேஷ்பாபு, ரூஸ்டர் ராம் GV, மோசமான கூட்டம் முனியப்ப குமார், டூ ஶ்ரீராம், தம்பிகோட்டை ராகேஷ், எண்ணித்துணிக தயாரிப்பாளர் சுரேஷ், தொகுப்பாளிினி டோஷிலா மற்றும் திருநங்கைகள் நலச்சங்க தலைவர் உட்பட ஏராளமான பிரமுகர்கள் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் வெளியான மூத்த குடிகள் பற்றிய ‘எஞ்சாய்-எஞ்சாமி’ தனிப்பாடல் போல, ‘இலக்கணப்பிழை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தனிப்பாடலும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
'டிரைவர் ஜமுனா' பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!
ஒரு நல்ல கதை தனக்கான நடிகர்களை தானாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்பார்கள். அப்படித் தான் 'டிரைவர் ஜமுனா' கதை நடிகர்களைத் தேர்வு செய்து படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது படக்குழு. தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
'வத்திக்குச்சி' படத்தின் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ள இந்தப் படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக,பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளரான எஸ்.பி.செளத்ரி மிகப் பெரும் பொருட்செலவில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழி களில் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ், உடனடியாக இதில் நடிப்பதற்கு தேதிகள் ஒதுக்கி ப்டப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார்.
சென்னையில் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி படப்பூஜை நடத்தி, படப்பிடிப்பை மும்முரமாக தொடங்கி நடத்தி வருகிறது படக்குழு. தினமும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். 'டிரைவர் ஜமுனா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார்.
நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்துவிட்டால், படத்தின் கதையோட்டத்தை எளிமையாக மக்களுக்கு உணர்த்திவிடுவார்கள். அந்த வரிசையில் படத்தின் ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், சண்டைக் காட்சிகளை அனல் அரசு, எடிட்டராக 'அசுரன்' எடிட்டர் ஆர்.ராமர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.
இன்றைய கால கட்டத்தில் தினசரி வாழ்க்கையில் கால் டாக்ஸி டிரைவர்களை கடந்து போய் வருகிறோம். ஒரு நடுத்தர குடும்பத்து, பெண் கால் டாக்ஸி டிரைவரை மையமாக கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதை மட்டும் படக்குழு தெரிவித்து உள்ளதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
OTT தளம் துவங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்
தமிழ்சினிமாவின் பாரம்பரிய மிக்க தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் முக்தா பிலிம்ஸ். கமல்ஹாசன் நடித்த நாயகன், ரஜினிகாந்தின் பொல்லாதவன் ஆகிய படங்கள் உள்பட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ள முக்தா பிலிம்ஸ் நிறுவனம் தற்போது வேதாந்த தேசிகர் என்ற வராலாற்று பின்புலம் கொண்ட படத்தைத் தயாரித்துள்ளது.
ஆன்மிக மகான்களில் தனித்துவமானவர் வேதாந்த தேசிகர். அவரது அறம் சார்ந்த ஆன்மிக சேவையை, வாழ்வை யாருமே இதுவரை திரைப்படத்தில் பதிவு செய்யவில்லை. அதை முதல்முறையாக முக்தா பிலிம்ஸ் செய்துள்ளது. இத்திரைப்படத்தை முக்தா சீனிவாசன் அவர்களின் புதல்வர் முக்தா சுந்தர் இயக்கி இருப்பதோடு படத்தில் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.
இப்படத்தில் வேதாந்த தேசிகராக ஆராய்ச்சியாளரும், உபன் யாசரும் ஆன துஷ்யந்த் ஸ்ரீதர் திரைக்கதை எழுதி நடித்துள்ளார். இவர் வேதாந்த தேசிகரின் வாழ்க்கைக் குறிப்புகளை திறம்பட ஆய்ந்தவர். மேலும் இப்போது வழக்கத்தில் இல்லாத மொழியான பிராக்ருத மொழியை இப்படத்தில் பயன்படுத்தவும் செய்திருக்கிறார் துஷ்யந்த் ஸ்ரீதர். ஏன் என்றால் வேதாந்த தேசிகர் ப்ராக்ருத மொழியில் பாடல் எழுதும் அளவிற்கு பரிச்சயம் உடையவராம்.
துருக்கியர்களின் படையெடுப்பில் இருந்த ஸ்ரீரங்கம் கோவிலை எப்படி வேதாந்த தேசிகர் காத்து நின்றார் என்பதே இப்படத்தின் திரைக்கதை கதை. அதை மிக அழகாக படமாக்கி இருக்கிறார் இயக்குநர் முக்தா சுந்தர்.
படத்தில் துஷ்யந்த் ஸ்ரீதர் உடன் ஸ்ருதி பிரியா, ஒய்.ஜி.மகேந்திரன், மோகன்ராம் உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் முக்கிய அம்சமாக மகாகவி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி இசை அமைத்துள்ளார்.
இன்று ஆன்மிகம் விரும்பும் பெரியவர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதில் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக சிறு சிக்கல் இருப்பதால் இப்படம் நேரடியாக முக்தா பிலிம்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படத்தைப் பார்க்க முக்தா பிலிம்ஸ் வெப்சைட்டில் டிக்கெட் புக் செய்யலாம். மேலும் வெளிநாட்டில் இருப்பவர்கள் லாக்இன் செய்து பார்க்கும் வசதியும் இருக்கிறது. புதிதாக முக்தா பிலிம்ஸ் பெயரில் ஓடிடி தளம் துவங்கி அதில் முதலாவதாக வேதாந்த தேசிகர் படத்தை வெளியிடுகிறார்கள். இனி தொடர்ந்து முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான படங்களையும் இந்த ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளோம். அதோடு ரிலீசுக்கு தயாராகி வெளியிட முடியாமல் உள்ள சிறு முதலீட்டு படங்களையும் நாங்கள் வெளியிடுகிறோம்.
வருகிற 18-ஆம் தேதி லைவிற்கு வரும் இப்படத்தை 25-ஆம் தேதி முதல் அனைவரும் கண்டு மகிழலாம். ஒரு ஆன்மிக அனுபவத்திற்கு தயாராக இருங்கள் என்கிறார் தயாரிப்பாளர் முக்தா ரவி.
ஓ.டி.டி தளத்தின் லிங்க்
https://mukthafilms.in
சாந்தி செளந்தரராஜனின் கதை பூஜையுடன் முதல் கட்ட படப்பிடிப்பு துவங்கியது
888 புரொடக்ஷன்ஸின் முதல் தயாரிப்பான 'சாந்தி செளந்தரராஜன் - சூரியஒளிப் பெண்' திரைப்படம் பூஜையுடன் முதல் கட்ட படப்பிடிப்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் துவங்கியது.
2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்காக வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனையான சாந்தி செளந்தரராஜன் வாழ்வை எழுதி இயக்குபவர் ஜெயசீலன் தவப்புதல்வி.
குறிப்பிடத்தக்க வகையில், சாந்தி செளந்தரராஜனும் மதுரை மாவட்டத்தின் ADSP-ஆன S.வனிதா ஆகியோர் இப்படத்தின் பூஜையில் கலந்துகொண்டனர்.
சூரி - ஆரி இணைந்து வெளியிடும் 'கிராமத்து ஆந்தம்’ சுயாதீன பாடல் வீடியோ!
சமீபத்தில் வெற்றிபெற்ற ‘என்ஜாயி-என்சாமி’ வரிசையில் மறுபடியும் ஒரு கிராமத்து புகழ்பாடும் சுயாதீன பாடல் (Independent Song)
மறைந்த இளம் இசையமைப்பாளர் நவீன் ஷங்கர் இசையில் பிரபல பின்னணி பாடகர்-இசையமைப்பாளர் ‘அந்தோனி தாசன்’ பாடிய 'கிராமத்து ஆந்தம்' பாடல் வரும் ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு நன்னாளில் ‘B S Value’ (Black sheep) OTT தளத்தில் வெளியாக இருக்கிறது.
மேலும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடலை மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்து இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார் வெற்றிவீரன் மகாலிங்கம்
ஒளிப்பதிவு சஞ்சய் லோகநாத், படத்தொகுப்பு V.J.சாபு ஜோசப், பாடல் ஞானகரவேல், ஒலிக்கலவை ராம்ஜி, நடனம் சுரேஷ், டிசைன்ஸ் ஜோசப் ஜாக்சன், மக்கள் தொடர்பு சதீஷ்(AIM)
குடும்பப்பாங்கான கதையை திரில்லர் ஜானருடன் கலந்து சொல்லுவதே 'ஒற்று'
சக்தி ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ஒற்று’. ‘மகா மகா’, ‘நுண்ணுணர்வு’ போன்ற படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்த மதிவாணன், இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார். இந்திரா, மகாஶ்ரீ, சிவ அரசகுமார், உமா, மாண்டேஷ் ரமேஷ், ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஒரு எழுத்தாளர் பார்வை திறன் அற்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார். அந்த பெண்ணிற்கு ஒரு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பெண்ணின் பிரச்சனையை எழுத்தாளர் எவ்வாறு எதிர்கொண்டு முடிக்கிறார், என்பதை குடும்பபாங்காகவும், திரில்லர் ஜானரிலும் சொல்லுவதே ஒற்று.
மனதை வருடும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தில் பாடல்கள் மற்றும் காதல், காதல் காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.பி.வெங்கடேஷ் இசையமைத்துள்ளார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். பி.ஆர்.ஓ-வாக வெங்கட் பணியாற்றுகிறார்.
ஊட்டு, குன்னூர் போன்ற மலை சார்ந்த இடங்களில் தொடர்ந்து 35 நாட்கள் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது நிறைவுப்பணிகள் நடைபெற்று வருகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா