சற்று முன்
சினிமா செய்திகள்
கார்த்தி நடித்த படத்தின் நிஜ ஹீரோ செய்தது என்ன...
Updated on : 18 September 2019

அனைத்திந்திய மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் அமைப்பின் அங்கிகாரம் பெற்ற தமிழ்நாடு மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சங்கத்தின் துவக்க விழா மற்றும் பொறுப்பாளர் நியமன நிகழ்ச்சி, சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள ஓய்.எம் சி.ஏ. அரங்கில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. திரு.எஸ்.ஆர். ஜாங்கிட்.ஐ.பி.எஸ். அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சங்கத்தின் இணையதள பக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
தி.ரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள், ஒன்பது வருடங்களுக்கு மேலாக, தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பயங்கர கொலை கொள்ளை குற்றங்களை செய்து வந்த பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் கார்த்தி நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம்.
நிகழ்ச்சியில் சர்வதேச வீரரும் தமிழ்நாடு எம்.எம்.ஏ. தலைமை பயிற்சியாளறுமான திரு.சதிஷ் அவர்கள் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று முன்னிலை வகித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் உலகின் மாபெரும் போட்டியான யு.ப்.சி.(அல்டிமேட் பைட்டிங் சாம்பியன்சிப்) போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவின் முதல் வீரரான திரு.பரத் கந்தாரே முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் துணை செயலாளர் பொறுப்பை ஏற்று கொண்டார்.
தலைவராக தேடல் தொண்டு அமைப்பின் நிறுவனர் திரு. ஜோஸ்வா கிளிமன்ட்ஸ், துணைத் தலைவர்களாக திரு.ராபின்சன் மற்றும் திரு.ஷரவண் அவர்களும் இணை செயலாளர்களாக திரு. விக்ரம் மற்றும் மெல்வின் தீபக் அவர்களும் பொருளாளராக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஹரிஷ் அவர்களும் தலைமை ஆலோசகராக இந்தியாவின் ஜுடோ கிராண்ட் மாஸ்டர் திரு. சி.எஸ். ராஜகோபால் அவர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் திரு.எஸ்.ஆர். ஜாங்கிட் அவர்கள் பேசும்போது,
தமிழ்நாட்டில் இருந்து பல வீரர்கள் உருவாகி வருகின்றனர்.
எம்.எம்.ஏ போன்ற வீர விளையாட்டு மூலம் இளைய சமுதாயத்திற்க்கு தன்னம்பிக்கையிம் மனபலமும் அதிகமாகும். மேலும் இது, மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் என்றார்.
சமீபத்திய செய்திகள்
பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்
ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தன் திறமையை ஓவியங்கள் மூலம் நிரூபித்த இவர், தற்போதைய நடிப்பிலும் நிரூபித்திருக்கிறார்.
இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார். தற்போது கதிர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜடா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு வில்லனின் கதாபாத்திரம் பார்க்கும் ரசிகர்கள் கோபப்பட வைப்பதுதான். அந்த கோபத்தை பார்ப்பவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். படத்தின் இவருடைய அறிமுக காட்சியிலும் சரி, மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் சரி பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார்.
பக்கம் பக்கமாக வசனங்கள் பேசி கவர நினைப்பவர்கள் பலர் இருப்பினும், பார்வையாலயே மிரட்ட தனித்தன்மை வேண்டும். அந்த தனித்தன்மையை பெற்று இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர். இவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஓவியம் மட்டுமல்ல நடிப்பிலும் நான் கில்லாடி என்பதை தற்போது நிரூபித்திருக்கிறார் ஸ்ரீதர்.
இப்படம் குறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும்போது, ‘அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியிருக்கும் ஜடா திரைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். இப்பொழுது படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்டுகிறார்கள். என்னுடைய நடிப்புக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினருக்கே சேரும். பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கதிர் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். சாம்.சி.எஸ். இசையமைக்க, சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிச்சர்ட் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இவர்களின் கூட்டு முயற்சியால் என்னுடைய நடிப்பு கவனம் பெற்றிருக்கிறது. தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.
ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை
தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வந்த மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் மாரி 2. இப்படத்தில் டோவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், காளி வெங்கட், மாஸ்டர் ராகவன், வித்யா பிரதீப், கல்லூரி வினோத் மற்றும் பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த ரௌடி பேபி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இந்த பாடல் யூடியூப் தளத்தில் 715 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது .
தற்போது பில்போர்ட் யூடியூப் பட்டியலில் உலக அளவில் 2019 ஆம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாடல் காட்சிகள் பட்டியலில் ரௌடி பேபி 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது .
மேலும் யூடியூப் நிறுவனம் இந்திய அளவில் அதிகம் 2019 ஆம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாடல் காட்சிகள் ரௌடி பேபி முதல் இடத்தை பிடித்துள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .இதுவரை வெளியான தென்னிந்திய மொழி பாடல்களில் அதிக பார்வையாளர்களை கடந்து ரௌடி பேபி பாடல் தொடர்ந்து சாதனை படைத்தது வருகிறது .
'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம்
ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்க ஜெ.என். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்கும் புதிய படத்தை குரு ராமானுஜம் இயக்குகிறார். இவர் கழுகு படத்தின் இயக்குனர் சத்ய சிவாவிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தை சமூக விழிப்புணர்வு மற்றும் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக இயக்குகிறார். வெற்றி நாயகனாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக தியா மயூரிகா நடிக்கிறார். குணச்சித்திர பாத்திரத்தில் மாரிமுத்து நடிக்க, கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் பூஜையுடன் இன்று (06.12.2019) துவங்கியது.
படத்தைப் பற்றிய மற்ற விபரங்களை தயாரிப்பு நிறுவனம் பின்னர் அறிவிக்கும்.
சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர்
தன் படங்களின் வசூலின் மூலம் நட்சத்திர நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தயாரித்து அதன் மூலம் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் முன்னிலை பெற்று வருகிறது. இந்த இருவரும் 'ஹீரோ' படத்தில் இணைந்தனர். 'ஹீரோ' வெற்றிக்காக காத்திருக்கும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது வெற்றியை உறுதியாக்கியுள்ளது.
'கோலமாவு கோகிலா' மூலம் அனைவரையும் கவர்ந்த இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இதன் படப்பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. ’டாக்டர்’ எனப் பெயரிட்டுள்ள இந்தப் படத்தில் 'கேங்க் லீடர்' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான பிரியங்கா நாயகியாக நடிக்கிறார். 'டாக்டர்' மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களைக் கவரவுள்ளார். இதில் வினய், யோகி பாபு, இளவரசு, அர்ச்சனா, ’கோலமாவு கோகிலா’ டோனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்க, விஜய கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். கலை அரசு இணை தயாரிப்பாளராகவும், டி.ஏழுமலையான் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.
இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் கேட்ட போது, " ஆக்ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்துமே அடங்கியது தான் கதை. இந்த ஜானர் என்று அடக்கிவிட முடியாது. 'டாக்டர்' என்று தலைப்பிட்டுள்ளோம். இதில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளனர். சென்னை மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். விஜய் டிவியில் பணிபுரியும் போதிலிருந்தே சிவகார்த்திகேயனைத் தெரியும். அப்போதிலிருந்து சுமார் 12 ஆண்டுகளாக எங்களது நட்பு தொடர்கிறது. எதிர்காலத்தில் ஒரு படம் பண்ணனும் என்று பேசுவோம். 'கோலமாவு கோகிலா' படத்துக்குப் பிறகு அவருக்கு தகுந்த மாதிரியான கதையும் அமைந்தது. சொன்னேன்.. உடனே ஒ.கே சொல்லிட்டார்... தொடங்கிட்டோம்” என்று தெரிவித்தார்.
இந்தப் படத்தின் பூஜையில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் கே.ஜே.ராஜேஷ், சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன், யோகி பாபு, வினய், நாயகி பிரியங்கா, இணை தயாரிப்பாளர் கலை அரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
அடுத்தாண்டு பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக உருவாகியிருக்கும் ’டாக்டர்’ படத்தின் பயணம் இன்று முதல் தொடங்குகிறது.
வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம்
'ஆடுகளம்', 'காக்கா முட்டை', 'விசாரணை', 'வடசென்னை' என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்ததுடன், தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்து அசுர வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கும் 'அசுரன்' படத்தைக் கொடுத்த இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, இந்த ஆண்டுக்கான தேசிய விருதை வென்ற ஒரே தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் 'பாரம்' படத்தை வெளியிடுகிறது.
இரண்டு முறை தேசிய விருதை வென்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இது குறித்து கூறியதாவது....
கிராப்புறங்களில் உள்ள தலைக்கூத்தல் என்ற உறுதியான நம்பிக்கையை பற்றி பேசும் படம்தான் 'பாரம்'. உண்மையில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கிய இந்தக் கதை பரவலாகப் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதை படமாக்க ஆரம்பித்தோம்.
இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருது 'பாரம்' படத்துக்கு கிடைத்திருப்பதால், மக்களிடம் இதை கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்கள் கனவு எளிதில் நிறைவேறும். இதற்ககாக நான் தேர்வுக் குழுவினருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அனைத்து வகையான படங்களையும், அவற்றை சொல்லக்கூடிய முறைகளையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் மிக்கவர்களாக இருப்பதால், நான் தமிழ்ப்பட ரசிகர்களை பெரிதும் மதிக்கிறேன். எந்த வகைப் படமாக இருந்தாலும் சரி, அதில் நல்ல கதை இருக்கிறதா என்று மட்டும் பார்க்கக்கூடிய தமிழ் ரசிகர்கள் எந்த இயக்குநருக்கும் உகந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.
வெற்றி மாறனுடன் நடந்த முதல் சந்திப்பிலேயே அவர் 'பாரம்' படத்தை வெளியட முன்வந்தபோது ஒரு கனவு நனவானதைப்போல்தான் இருந்தது. ஏனென்றால் வெற்றி மாறனை நான் பல ஆண்டுகளாக மிக உன்னிப்பாக கவனித்து வருகிறேன். பலமான கதைகள், பளீர் வசனங்கள், நேர்த்தியான திரைக்கதை, அற்புதமான நடிப்பு என்று பயணிக்கும் வெற்றி மாறனின் படங்கள் என் ரசனைக்கேற்ற படைப்புகளாகும். சர்வதேச உணர்வுகளுக்கு ஈடுகொடுப்பது வெற்றி மாறன் படங்கள் என்பது என் கருத்து.
வெற்றி மாறனின் ஆதரவு, அவர் கொடுத்த ஊக்கம், அவரது அறிவு மற்றும் ஆற்றலை எங்களுடன் தாராளமாக பகிர்ந்துகொண்ட விதம் ஆகியவற்றுக்காக நாங்கள் என்றென்றும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமிருப்பினும் அவரது தொலை நோக்குப் பார்வையில் 'பாரம்' திரையரங்க வெளியீடு எங்களுக்குப் பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
தலைக்கூத்தல் என்ற பெயரில் சொந்தப் பிள்ளைகளாலேயே கொல்லப்படும் பலவீனமான முதியவர்களைப்பற்றி பேசும் 'பாரம்' படத்தில் நடித்திருக்கும் 85க்கும் மேற்பட்டவர்களில் பலரும் இப்போதுதான் முதல்முறையாக கேமரா முன் நிற்பவர்கள். படமும் காட்சியமைப்புகளும் இயல்புக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு நடந்த கிராமத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் இவர்கள். ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சு.ப.முத்துகுமார், ஜெயலட்சுமி, மற்றும் ஸ்டெல்லா கோபி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற பிரியா கிருஷ்ணசாமி கதை எழுதி இயக்கி படத்தொகுப்பு செய்திருப்பதுடன் ரெக்லெஸ் ரோஸஸ் என்ற தன் சொந்த நிறுவனத்தின் மூலம் ஆன்ட்ரா சொரூப் என்பவருடன் இணைந்து 'பாரம்' படத்தைத் தயாரித்திருக்கிறார். தேசிய விருது வழங்கப்படத் துவக்கியதிலிருந்து, கடந்த 65ஆண்டுகளில் தமிழில் சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுகிறார் பிரியா கிருஷ்ணசாமி.
இசை மற்றும் ஒலி வடிவமைப்பை வேத் நாயர் மேற்கொள்ள, ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். தருண் சர்மா ஒலி வடிவம் மற்றும் மிக்ஸிங் பொறுப்புகளை கவனித்திருக்கிறார். அடிஷனல் ஸ்க்ரீன் பிளே மற்றும் வசனங்களை எழுதியிருப்பவர் ராகவ் மிர்டாத்.
'பாரம்' திரைப்படத்தை எஸ்பி சினிமாஸ் விநியோகிக்கிறது.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் தமிழகம் முழுவதும் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
சத்யராஜ் செய்த சாதனை
சத்யராஜ் நடிக்கும் "தீர்ப்புகள் விற்கப்படும்' படம் துவங்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு பலமான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்ப்படவுலகில் முதல் முறையாக சத்யராஜ் நடித்த அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சிகளில் விசேட கேமராக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதிலும் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சத்யராஜ் தான் நடித்த காட்சிகள் அனைத்திற்கும் சேர்ந்தாற்போல் பனிரெண்டு மணி நேரம் பேசி டப்பிங் பணிகளை முடித்திருக்கிறார். இது குறித்து இயக்குநர் தீரன் கூறியதாவது...
"சத்யராஜூடன் இணைந்து பணியாற்றியது எனக்கு சினிமா மீது தீர்க்க முடியாத வேட்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்ததுமே அதற்கு சத்யராஜ்தான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்ற முடிவுக்கு நான் வந்தேன். ஆனால் அவருடன் பணியாற்றி முடித்ததும் அவரது கடின உழைப்புக்கும், அர்பணிப்பு மிக்க நடிப்புக்கும் நான் தீவிர ரசிகனாகி விட்டேன். இதற்குக் காரணம் சினிமா மீது அவர் கொண்ட பேரார்வமும், தொழில் பக்தியும் மட்டுமல்ல, கலையையும் நடிப்பையும் அவர் உணர்வுபூர்வமாக பின்பற்றும் முறையும்தான். நட்சத்திரம் என்பதையும் தொழில் நெறிமுறைகளையும் தாண்டி, அவர் மிகச் சிறந்த மனிதராக படப்பிப்பு அரங்கில் இருக்கும் ஒவ்வொருவரையம் கவர்ந்திழுக்கிறார். அவரது அர்பணிப்பு மிக்க நடிப்பு 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் மிகப் பெரிய பலமாக, படத்தைத் தாங்கி நிற்கும் தூணாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. படத்தின் டப்பிங் பணிகளையும் முழுமையாக முடித்து விட்டோம். சத்யராஜ் சார் தனது டப்பிங் பணிகளை பனிரெண்டு மணி நேரத்தில் முடித்து எங்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். படம் முழு வடிவம் பெற்றிருக்கும் விதம் குறித்து நாங்கள் மிகவும் மகிழச்சியோடு இருக்கிறோம். வெகு விரைவில் டீஸர் வெளியிடும் தேதியை அறிவிக்க இருக்கிறோம் என்றார்.
மயிர் கூச்செரியச் செய்யும் சத்யராஜின் சண்டைக் காட்சிகள் நிரம்பிய, ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே இழுத்து வரச் செய்யும் விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் வகைப் படம் தீர்ப்புகள் திருத்தப்படலாம். ஹனி பீ கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்காக சஞ்சீவ் மீரா சாஹிப் ராவுத்தர் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் தீரன் இயக்கியிருக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு 'கருடவேகா' அஞ்சி ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை அமைத்திருக்கிறார். நெளஃபல் அப்துல்லா படத்தொகுப்பை செய்திருக்கிறார்.
விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு
மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார். ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன், பக்ரீத் படத்தில் நடித்த பேபி ஸ்ருதிகா, கிஷோர், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்திற்கு சம்பவம் என்று தலைப்பு வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு ரஞ்சித் பாரிஜாதம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறும்போது, நான் சம்பவம் என்ற படத்தை இயக்கி வருகிறேன். ஸ்ரீகாந்த், நடன இயக்குனர் தினேஷ், பூர்ணா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்து வருகிறார்கள். சம்பவம் என்ற தலைப்பை முறையாக பதிவு செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம். ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு சம்பவம் என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் வதந்திகளை நம்பாதீர்கள்' என்றார்.
உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க
பனி படரத்தொடங்கியிருக்கும் இந்த இதமான தட்ப வெட்ப நிலையில் நெஞ்சுக்கு நெருக்கமாக அமையக்கூடிய நகைச்சுவை கலந்த காதல் படத்தைப் பார்ப்பதைத் தவிர வேறு எது அழகாகவும் அற்புதமான அனுபவமாகவும் இருக்க முடியும்? ஆம்... எதிர்வரும் வெள்ளிக்கிழமை டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் 'தனுசு ராசி நேயர்களே' முழு நீள பொழுதுபோக்குச் சித்திரமாக அனைத்து தரப்பையும் மகிழ்விக்கவிருக்கிறது. இது குறித்து படக்குழு முழுவதும் அதிகபட்ச உற்சாகத்தில் திளைக்க, நாயகன் ஹரீஷ் கல்யாண் மட்டும் விதிவிலக்காக இருப்பாரா என்ன? மற்றவர்களைக் காட்டிலும் இன்னும் அதிக உற்சாகத்தில் இருக்கும் அவர், 'தனுசு ராசி நேயர்களே' குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
"திரும்பத் திரும்ப நான் ஒரே விஷயத்தை சொல்வதுபோல் தோன்றினாலும் உண்மை அதுதானே... 'தனுசு ராசி நேயர்களே' எனக்கு முழுமையான முதல் தரமான தனித்துவம் மிக்க அனுபவத்தைத் தந்தது. நகைச்சுவை பலமாக அமைந்த வித்தியாசமான கதைக்களம் இது. ஒரு நல்ல காதல் கதை என்பது ரம்யமான காதல் காட்சிகள் மட்டுமின்றி, குடும்ப ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் நிரம்பியதாக இருக்க வேண்டும். தனுசு ராசி நேயர்களே இவ்வாறு அமைந்ததற்கு இயக்குநர் சஞ்சய் பாரதிதான் காரணம். காதல், நகைச்சுவை மற்றும் சென்டிமெண்ட்ஸ் என்று அனைத்து கூறுகளும் நிரம்பிய கதையாக இதை அவர் வடிவமைத்திருந்தார். நகைச்சுவை மிக்க காதல் படங்களுக்கு சில விசேட தகுதிகள் தேவைப்படும். அதாவது நகைச்சுவை, காதல் மற்றும் சென்டிமெண்ட் சரியான விகித்த்தில் கலக்கப்பட்டிருந்தால்தான் ரசிகர்களை முறையாக ஈர்க்கும். அந்த வகையில் இயக்குநர் சஞ்சய் பாரதி மிகச் சிறப்பாக இப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.
என்னுடன் இணைந்து நடித்த டிகன்கனா சூர்யவன்ஷி, ரெபா மோனிகா ஜான் இருவரும் தாங்கள் ஏற்ற வேடங்களை அதிக பட்ச அர்பணிப்பு உணர்வுடன் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றனர். கே.பாலசந்தர் சாரின் பள்ளியிலிருந்து வந்திருக்கும் ரேணுகா மேடம் இப்படத்தில் எங்களுடன் இணைந்து நடித்திருப்பது எங்கள் குழுவுக்கே பேரானந்தமாக இருந்தது. இவை அனைத்துக்கும் மேலாக பல ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி வரும் பண்பட்ட நடிகர்களான பாண்டியராஜன் சார், மயில்சாமி சார், சார்லி சார் ஆகியோருடன் இந்தப் படத்தில் பணியாற்றியிருப்பது என்னால் என்றென்றும் மறக்க முடியாது. எல்லாப் படங்களையும்போல் ஜிப்ரான் இந்தப் படத்திலும் மிகச் சிறப்பாக இசையமைத்திருக்கிறார் என்று மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த முடியாது. ஜிப்ரான் தனது இசை மூலம் இந்தப் படத்துக்கு அழகூட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் ஸ்க்ரிப்ட்டின் மீது நம்பிக்கை வைத்து, அதற்கு செயல் வடிவம் கொடுத்த தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சாருக்கு என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மொத்தத்தில் தனுசு ராசி நேயர்களே ரசிகர்களை முழு திருப்தியடையச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட முழுமையான பொழுதுபோக்குப் படமாகும். படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொணடு வாங்கி சிறப்பான முறையில் வெளியிடும் ஃபைவ் ஸ்டார் செந்தில் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் யோகிபாபு, முனீஷ்காந்த், சங்கிலி முருகன், டேனி ஆனியல் போப், டி.எஸ்.கே.அஸ்வின், ஹரிதா மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி உலகெங்கும் வெளியாகும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, குபேந்திரன் படத்தொகுப்பை கவனித்தருக்கிறார். உமேஷ் ஜே.குமார் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.
யுஏ சான்றிதழ் பெற்ற 'தனுசு ராசி நேயர்களே'
நகைச்சுவை கலந்த காதல் கதையை விரும்பும் ரசிகர்களுக்கு, வரும் வெள்ளிக் கிழமையன்று ஏராளமான விருந்து காத்திருக்கிறது. அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கத்தில், ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்து, டிசம்பர் 6 முதல் உலகெங்கும் வெளியாகும் தனுசு ராசி நேயர்களே திரைப்படம் நகைச்சுவை கலந்த முன்னோட்ட காட்சிகளுக்காகவும், ஜிப்ரானின் இனிமையான பாடல்களுக்காகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து பேசிய இயக்குநர் சஞ்சய் பாரதி, "இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தோம். படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்தது குறித்து எங்கள் குழுவே மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. 'தனுசு ராசி நேயர்களே' படம் முழு நீள நகைச்சுவை மட்டுமின்றி, மெலிதான காதல் மற்றும் அனைவருக்குமான பொழுது போக்கு அம்சங்களைக் கொண்டதாகும்.
இந்தப் படத்தின் ஸ்க்ரிப்டை எழுத ஆரம்பித்ததுமே என் மனதில் தோன்றிய முதல் விஷயம், இது முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சங்கள் நிரம்பியதாக இருக்க வேண்டும் என்பதுதான். இப்போது படம் முழுவதும் பூர்த்தியடைந்த பிறகு பார்த்த படக்குழுவினரும் நெருங்கிய நண்பர்களும் தங்கள் முழு திருப்தியை தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக படத்தைப் பார்த்த தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் படம் வெகுவாக திருப்தியளித்ததாகத் தெரிவித்தது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என்றாலும், ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், அனைத்து தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையிலான படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எனது குறிக்கோளை 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் மூலம் நிறைவேற்றியிருக்கிறேன் என்று திடமாக நம்புகிறேன்" என்றார்.
.ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் ரெபா மோனிகா ஜான் மற்றும் டிகன்கனா சூர்யவன்ஷி ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கின்றனர். ரேணுகா, முனீஷ்காந்த், யோகி பாபு, டேனியல் ஆன் போப், சார்லி, பாண்டியராஜன், மயில்சாமி, டி.எஸ்.கே.அஸ்வின், ஹரிதா மற்றும் சம்யுக்தா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை பி.கே.தர்மா ஏற்க, படத்தொகுப்பை குபேந்திரனும், கலை இயக்குநர் பொறுப்பை உமேஷ் ஜே.குமாரும் ஏற்றிருக்கின்றனர்.
ஜிப்ரானின் கைவண்ணத்தில் 'தனுசு ராசி நேயர்களே'
காதல் படங்கள் நம் நெஞ்சுக்கு நெருக்கமாவதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது அதன் நேர்த்தியான இசை. 'தனுசு ராசி நேயர்களே' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் தன் இசை மூலம் மீண்டும் இதை வெற்றிகரமாக மெய்ப்பித்திருக்கிறரா். ஹரீஷ் கல்யாண் நடித்து, எதிர்வரும் டிசம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இது குறித்து ஜிப்ரானை வெகுவாகப் புகழ்ந்த இயக்குநர் சஞ்சய் பாரதி, "நான் ஏற்கெனவே சொன்னதைப்போல் ஜிப்ரானுடன் இணைந்து பணியாற்றியது, ஒரு கனவு நனவானதைப்போல் இருக்கிறது. ஜிப்ரானின் இசை காதல் கதைகளுக்கு நேர்த்தியாக செறிவூட்டி, அவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். தனுசு ராசி நேயர்களே கதைக்கரு என் மனதில் தோன்றியதும், இசையமைப்பாளர் ஜிப்ரானின் கைவண்ணம் இதற்கு கண்டிப்பாகத் தேவைப்படும் என்பதை நான் உணர்ந்தேன்.
இப்போது படத்தின் ஒவ்வொரு பாடலுக்குக்கும் கிடைக்கும் மகத்தான வரவேற்பைப் பார்க்கும்போது எங்கள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது. ஜிப்ரானைப் பொறுத்தவரை, அவர் மிகச் சிறந்த இசையை தருவதோடு மட்டும் நின்று விடுவதில்லை. ஒவ்வொரு பாடலுக்கும் உரிய தனித்துவம் மிக்க மிகச் சரியான குரலைத் தேர்வு செய்து பாட வைத்து பாடலை முழுமையுறச் செய்கிறார். இந்த வகையில் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் அனிரூத், சரத் சந்தோஷ், ராஜன் செல்லய்யா, செளமியா மகாதேவன், லிஜிஷா பிரவீண், கோல்ட் தேவராஜ் மற்றும் பம்பாய் ஜெயஸ்ரீ மேடம் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கு.கார்த்திக், விக்னேஷ் சிவன், மதன் கார்க்கி, விவேகா மற்றும் சந்துரு ஆகியோரின் பாடல்களும் ஆல்பத்தின் வெற்றிக்கு வெகுவாக உதவியிருக்கின்றன. பிரதான வேடங்களில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகியின் கெமிஸ்ட்ரியும் சிறப்பாக அமைந்திருப்பதால் பாடல்கள் மற்றும் ட்ரைலரின் வெற்றியைத் தொடர்ந்து படம் குறித்து எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியிருக்கிறது" என்றார்.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்திருக்கும் 'தனுசு ராசி நேயர்களே' படத்தை அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கியிருக்கிறார். ஹரீஸ் கல்யாண், ரெபோ மோனிகா ஜான் மற்றும் டிகான்கனா சூர்யவன்ஷி ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கும் இந்த நகைச்சுவை கலந்த காதல் சித்திரத்தில் ரேணுகா, முனீஷ்காந்த் மற்றும் யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் இந்த மாதம் 6ஆம் தேதி உலகெங்கும் திரை இடப்பட உள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா