சற்று முன்
சினிமா செய்திகள்
பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் பிரம்மாண்ட முப்பெரும் விழா!
Updated on : 11 December 2017
எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழா உட்பட முப்பெரும் விழா ஒன்றினை நடத்த தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் திட்டமிட்டிருக்கிறது.
பிலிம் நியூஸ் ஆனந்தனை அறிமுகப்படுத்திய மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் நூற்றாண்டு விழா, 1985-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் தொடர்பாளர் என்ற தொழில் துவங்கப்பட்ட 60 -ஆம் ஆண்டை கொண்டாடும் வகையிலும், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் 1993-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட -25வது ஆண்டு வெள்ளி விழா என முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.
வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ள இந்த விழாவில் எம்.ஜீ.ஆருடன் பணியாற்றிய கலைஞர்கள் கவுரவிக்கப்படவுள்ளனர்.
மேலும், இந்த விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் தொடங்கி அனைத்து திரைத் துறை சங்கத்தினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகள்
அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் ‘ஒவ்வொரு ஆண்டும் ஒரு நல்ல செயல்’ என்ற நோக்கத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் (AAFA) சமூகப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், பெண்கள் நலன் மற்றும் பொதுச் சுகாதார விழிப்புணர்வை மையமாகக் கொண்டு HPV தடுப்பூசி இயக்கத்தை ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளான ஏப்ரல் 8-ஐ முன்னிட்டு, வாரம் முழுவதும் கொண்டாட்டங்களை சமூகப் பொறுப்புடன் இணைத்து நடத்தும் முயற்சியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
பெண்களை அதிகமாக பாதிக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசியின் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். மேலும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் வகையில் சுகாதார பழக்கங்களை ஊக்குவிக்கவும் ரசிகர் மன்றம் செயல்பட்டு வருகிறது.
‘நாளை நம் மகள்களை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றவே இன்று ஒரு தடுப்பூசி’ என்ற வாசகத்துடன், குடும்பங்களிலும் சமூகத்திலும் இந்த விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தடுப்பூசி முகாம்கள் மற்றும் பெண்களின் ஆரோக்கிய பாதுகாப்பை மேம்படுத்தும் பல்வேறு செயல்பாடுகளும் நடைபெற உள்ளன.
நேர்மறையான சமூக மாற்றத்திற்காக தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என்ற அல்லு அர்ஜுனின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், இந்த HPV தடுப்பூசி இயக்கம் ரசிகர் மன்றத்தின் சமூகப்பணிக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!
புதுமையான கதை சொல்லல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளால் இந்திய திரைப்படத் துறையில் தனித்துவமான இடத்தைப் பெற்ற தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கத்தனார்’ திரைப்படம் தற்போது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
நடிகர்கள் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லர், கண்கவர் காட்சிகள், மனதை மயக்கும் இசை, தெளிவான ஒலி வடிவமைப்பு மற்றும் நடிகர்களின் சிறந்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறது. பழங்கால பின்னணியில் உருவாகும் புதிய ஃபேன்டஸி உலகத்தை இப்படம் அழகாக சித்தரிக்கிறது.
‘ஹோம்’ திரைப்படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற இயக்குநர் ரோஜின் தாமஸ், இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ஆர். ரமானந்துடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ள அவர், ‘கத்தனார்’ படம் ரசிகர்களுக்கு காலத்தைத் தாண்டும் ஒரு காவிய அனுபவமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2026ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 15 மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
டிரெய்லர் வெளியானவுடன் விமர்சகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள ‘கத்தனார்’, வெளியீட்டுக்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.
32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக தரமான படைப்புகளை வழங்கி வரும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், மீண்டும் ஒரு நினைவுகூரத்தக்க கூட்டணியை உருவாக்கியுள்ளது. தயாரிப்பாளர் T. G. தியாகராஜன் மற்றும் இசை மாமன்னன் இசைஞானி இளையராஜா, 32 ஆண்டுகளுக்கு பிறகு “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.
இந்த அறிவிப்பை ஒரு அழகான அனிமேஷன் வீடியோவின் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், தியாகராஜன் மற்றும் இளையராஜா இருவரும் காரில் பயணம் செய்யும் போது, தங்களின் பழைய ஹிட் பாடல்களை கேட்டு நினைவுகளை பகிர்ந்து கொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த கூட்டணி தமிழ்சினிமாவில் ஏற்கனவே பல மறக்க முடியாத படைப்புகளை வழங்கியுள்ளது. குறிப்பாக மூன்றாம் பிறை, தங்க மகன், காக்கி சட்டை, பகல் நிலவு, காதல் பரிசு, கிழக்கு வாசல், பணக்காரன், இதயம், ஆனஸ்ட் ராஜ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து பணியாற்றி, கல்ட் கிளாசிக் படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.
இப்போது, அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் “லெனின் பாண்டியன்” திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D. D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், கிராமத்து வாழ்க்கை மற்றும் சமூக உண்மைகளை மையமாகக் கொண்ட வலுவான கதையாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் மூலம், நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் பேரன் தர்ஷன் நாயகனாக அறிமுகமாகிறார். காவல்துறையில் பணிபுரியும் இளைஞனாக அவர் நடித்துள்ளார். மேலும் கங்கை அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரோஜா அவரும் இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமத்து பின்னணியில் சமூக அவலங்களை நேர்மையாக வெளிப்படுத்தும், உணர்ச்சிப்பூர்வமான கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை, சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்குகிறார்.
தற்போது படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், திரையரங்கு வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், பழைய வெற்றி கூட்டணி, புதிய தலைமுறை கதை மற்றும் சமூக பின்னணி ஆகிய மூன்றின் இணைப்பாக “லெனின் பாண்டியன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!
தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகரான அருள்தாஸ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரீயூனியன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சாட்ஸ் ரெக்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அருள்தாஸ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளதுடன், ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன், சுப்பிரமணியன், ஜெமினி மணி, சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன், கராத்தே ராஜா, சிலுமிசம் சிவா, குட்டி கோபி, ஹரிஷ், அருண் உதயன், சரத், க்ரிஷ் & அய்ஷூ, காக்காமுட்டை ரமேஷ், பூவையார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விக்கி மேக் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராக்கி டிஜே இசையமைத்துள்ளார். முத்தமிழன் ராமு படத்தொகுப்பை கவனித்துள்ள நிலையில், கலை இயக்கத்தை வெங்கடேஷ் குமார் மேற்கொண்டுள்ளார். கேங்ஸ்டர் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக உருவாகி வரும் இப்படத்தை ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக அருள்தாஸின் வித்தியாசமான லுக் மற்றும் மற்ற கதாபாத்திரங்களின் தோற்றங்கள் படத்தின் கதை மீது ஆவலை தூண்டியுள்ளது.
‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்
லெஜெண்ட் சரவணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு, படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு, படம் குறித்து தங்களது எதிர்பார்ப்புகளையும் அனுபவங்களையும் பகிர்ந்தனர். பாடலாசிரியர் விவேகா, படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் குறித்து பாராட்டுக்களை தெரிவித்ததுடன், லெஜெண்ட் சரவணனின் உழைப்பையும் வெற்றியின் ரகசியத்தையும் எடுத்துரைத்தார்.
பாடலாசிரியர் விவேகா பேசுகையில், "இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது.
லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரிடம் நீங்கள் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டபோது "எங்க அப்பா ஒன்னு சொல்லி இருக்கிறார், எல்லோருக்கும் முன்னாடி கடைக்கு செல்ல வேண்டும், எல்லோருக்கும் பின்னாடி கடையை விட்டு வெளியில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார், அதை நான் பின்பற்றுகிறேன், அதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்," என்றார். இதுதான் வியாபார உலகின் பைபிள். அந்த கருத்தை அவர் சொன்னதும் மிகப் பெரிய அளவில் வைரலானது. அது தான் அவர் வெற்றியின் ரகசியம், இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்," என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், "நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் முதன்மையான காரணம். இந்த திரைப்படத்தில் அப்பா-பொண்ணு சம்பந்தப்பட்ட ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். நான்கு பேர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற, நினைக்கும் ஒவ்வொருவரும் லீடர் தான். ஏற்கனவே லெஜெண்ட் சரவணன் நிஜமான லீடர் தான். நீங்கள் ரியலாக ஒரு லீடராக இருந்து கொண்டு. திரையிலும் லீடராக நீங்கள் தோன்றுவதை நாங்கள் வரவேற்கிறோம், எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.
நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில், "லீடர் என்கிற வார்த்தை யாருக்கு பொருந்தும் என்றால் எப்போதும் தன்னை மட்டுமே பெருமிதமாக பெருமைப்படுத்தி கொள்ளாமல் உடன் இருக்கும் அனைவரையும் பெருமைப்படுத்தும் மனிதர்கள் தான் லீடர். நான் எப்போது லெஜெண்ட் சரவணனின் கடைக்கு சென்றாலும் எங்களை அமர வைத்து "நிறைய படங்களில் நடிக்க வேண்டும், நன்றாக நடிக்க வேண்டும், நிறைய மேடைகளில் உங்களை பார்க்க வேண்டும்" என்று ஒவ்வொரு முறையும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். நிறைய கலைஞர்களை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர் லெஜெண்ட் சரவணன் ஐயா அவர்கள்.
இந்தப் படம் வெளியான பிறகு ஆறு மாதம் வரை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு செல்ல முடியாது. ஏனெனில் இந்தப் படத்தில் அவரை திட்டுவது போன்ற காட்சியில் நடித்திருக்கிறேன். அதை நானாக சொல்லவில்லை இயக்குநர் எழுதிக் கொடுத்ததை தான் பேசி நடித்தேன். இந்தப் படத்தில் என்னுடைய கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அதேபோல் படத்திலும் அமைதியாக இருக்கிறார்.
பேபி இயல் பேசுகையில், "இப்படத்தில் நான் சிரித்தேன், அழுதேன், கோபமாக இருந்தேன், சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷ் எங்கள் அப்பா நடித்த 'டிக் டிக் டிக்' படத்தில் பணியாற்றியவர். அவரைப் பற்றி என் அப்பா லக்கி கேமராமேன் என சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்ததால் நான் என்னை லக்கியாக ஃபீல் செய்கிறேன்.
நடிகர் ஷாம் பேசுகையில், "கருடன் படத்தை பார்த்த பிறகு என் நண்பர்களிடம் இந்தப் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையை பகிர்ந்து கொண்டேன். அந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாக கையாண்டிருக்கிறார் இதை சொன்ன சில நாட்களில் இயக்குநர் துரை செந்தில் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது, பிறகு சந்திப்பு நடந்தது. அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை, ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க இயக்குநர் அவர். அவர் இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் ஒரு கமர்ஷியல் வேல்யூவும் இருக்கும், அழகான மெசேஜும் இருக்கும் சினிமா பிளாட்பார்மை மிக தரமாக பயன்படுத்திக் கொள்பவர்களில் துரை செந்தில்குமார் முக்கியமானவர்.
இந்தப் படத்திற்காக டப்பிங் பேசும்போது எல்லா கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார். இதுதான் எனக்கு வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார். இதை இங்கு யாரும் செய்ய மாட்டார்கள்.
எல்லோரும் லெஜெண்ட் சரவணனின் மற்றொரு முகத்தை பார்த்திருக்க மாட்டார்கள், படப்பிடிப்பு தளத்தில் நான் அவருடன் பணியாற்றிய காட்சிகளில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன். வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார். அவருக்கு இது இரண்டாவது படம், நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து இருப்பார், நிறைய படங்களில் நடிப்பார். அவருடைய தயாரிப்பு மூலம் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் போன்றதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை," என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், "முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும், என்னுடன் உழைத்த அனைத்து குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். குறிப்பாக, இந்தப் படத்திற்காக இரவு பகலாக உழைத்து, பல நாட்கள் தூக்கமே இல்லாமல் பாடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் படத்தில் பாடல்கள் உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் அதேநேரத்தில், ஒரு பெரிய திருப்தியையும் கொடுத்தது. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இயக்குநர் துரை செந்தில்குமார் சார் எப்போதும் சிறிய சிறிய விஷயங்களையும் கவனித்து, தேவையான மாற்றங்களைச் சொல்லி, அந்தப் பாடல்களை இன்னும் சிறப்பாக மாற்றினார். ஒரு சிறிய BGM மாற்றம் கூட எவ்வளவு பெரிய பலன் தரும் என்று இந்தப்படத்தில் நான் தெரிந்து கொண்டேன். துரை சார் பற்றி சொல்லவேண்டுமெனில், அவர் மிகவும் அமைதியானவர், ஆனால் மிகவும் தீவிரமாக வேலை பார்க்கும் ஒரு இயக்குநர். அவர் குழுவை முன்னேற்றும் விதமும், ஒவ்வொரு விஷயத்தையும் சீராக செய்து முடிப்பதும் அவருடைய மிகப்பெரிய பலம். இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் வேலை செய்வது எங்களுக்கு ஒரு பெரிய அனுபவம்.
லெஜண்ட் சரவணன் சார் பற்றி எல்லோரும் பல விஷயங்கள் சொன்னார்கள். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு புதிய முகத்தை காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் அல்லது வணிகராக மட்டும் அல்லாமல், முழுமையான அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒரு நடிகராக அவர் இந்தப் படத்தில் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்தப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஹீரோவை அறிமுகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். 'லீடர்' எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தில் நான் செய்த வேலை எனக்கு ஒரு தனி திருப்தியை கொடுத்துள்ளது. இந்தப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படக்குழுவில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பகலைஞர்களுக்கும் என் நன்றிகள். 'லீடர்' படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும். அனைவரும் திரையரங்கில்சென்று பார்த்து ஆதரிக்க வேண்டும், நன்றி," என்றார்.
இயக்குநர் துரை செந்தில் குமார் பேசுகையில், “லீடர் எனது ஆறாவது படம். என்னுடன் பணியாற்றிய என் குழுவினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் கடின உழைப்பே இந்தப் படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வசனங்களில் உதவிய அருண், நடிப்பு பயிற்சியாளர் ராஜேஷ் – உங்களுக்கும் என் நன்றி. இந்தக் குழுவின் ஆதரவு இல்லாமல் இந்தப் படத்தை நான் உருவாக்கியிருக்க முடியாது.
முதலில் இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் பற்றி சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான் சார் தான். அவருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. சில நேரங்களில் நான் அவருக்கு அழைக்க நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னை தொடர்பு கொள்வார். எங்களுக்குள் ஒரு ஆன்மீக இணைப்பு போல இருந்தது.
ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன். நான் ஒரு குறிப்பை காட்டியபோது, அது ஏற்கனவே ஜிப்ரான் சார் உருவாக்கிய ஆன்மிக இசை என்று தெரிய வந்தது. அந்த மாதிரி ஒரு அதிசய ஒத்திசைவு இந்தப் படமெங்கும் இருந்தது. இந்தப் படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரிய காரணம், மிகவும் நன்றி சார்.
என்னுடைய நண்பர்களான ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் மற்றும் கலை இயக்குநர் துரைராஜ் இந்தப் படத்திற்கு 200 சதவீதம் உழைத்துள்ளனர். நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம். கருத்து கேட்கும் போது நேர்மையான பதிலை வழங்குவார்கள் – அது மிகவும் முக்கியம். எடிட்டர் பிரவீன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மாத்யூ – உங்களுக்கும் என் நன்றி. இயக்குநரின் பார்வையை முழுமையாக புரிந்து கொண்டு அதை திரையில் கொண்டு வரும் கலைஞர்கள் மிகவும் அரிது. அந்த வகையில் நீங்கள் இருவரும் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தீர்கள். பிரவீன் என் எண்ணங்களை திரையில் அழகாக வெளிப்படுத்தினார்.
இறுதியாக… லெஜெண்ட் சார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களை சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில் தான் லெஜெண்ட் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் 'கருடன்' வாய்ப்பும் வந்தது. நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, “நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவரின் ஆற்றல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் – அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு போல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம். நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.
“நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள்; நாம் தாமதிக்கக் கூடாது” என்று அவர் சொல்வார். அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு. அவரின் ஆற்றல் ஒரு தீ போல. அந்த ஆற்றலை அவர் தனது ரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார். அனைவருக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும், நன்றி," என்றார்.
லெஜெண்ட் சரவணன் பேசுகையில், "இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நன்றி. இன்றைய சூழலில் போர் மேகங்கள் சூழ்ந்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பாற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது இந்தப் போர் விரைவில் நிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக சந்தோஷமான, பாதுகாப்பான, ஒரு அன்பான வாழ்க்கையை வாழ உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
'லெஜெண்ட்' படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் 'லீடர்'. இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும், இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.
இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரு டிரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம். குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன், ஒன்றுதான் என்றார். உடனடியாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள், ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை. எனக்கு கூட அடிபடலாம் அதனால் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன், ஆனால் கடவுள் அருளால் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை. பத்தாவது நாளில் எனக்கு காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா, என்ற நிலை ஏற்பட்டது. என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களை காத்திருக்க வைக்க வேண்டாம், கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குநர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது. இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!
வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்களின் தயாரிப்பில், டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் தமிழ் பதிப்பு வெளியீட்டை முன்னிட்டு, சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர் இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர்கள் சைதன்யா மற்றும் சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
1957–58 காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியுள்ளது. கேரளாவின் அந்நேர சமூக-அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை கதாபாத்திரங்களுடன் உருவாக்கப்பட்ட திரைக்கதை, ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி. ரவி, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை டிஜோ டோமி மேற்கொண்டுள்ள நிலையில், இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை நௌஃபல், பிரிஜீஷ், சானுக்யா, சைதன்யா மற்றும் சரண் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த படத்தை சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,
''திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா - சைதன்யா - சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,
''இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,'' என்றார்.
தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,
''இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,'' என்றார்.
நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,
''இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,'' என்றார்.
நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,
''இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில் விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.
நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை. இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.
இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.
எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. '' என்றார்.
‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. S. S. லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் கட்டத்தில் தீவிரமாக முன்னேறி வருகிறது.
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணி இந்த படத்திற்கு தனித்துவமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்தின் காட்சியமைப்புக்கு புதுமையான வண்ணத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் P.A., ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப அணியிலும் பல திறமைகள் இணைந்துள்ளன. ஒளிப்பதிவை லியோன் பிரிட்டோ மேற்கொண்டுள்ள நிலையில், இசையை ஜென் மார்ட்டின் அமைத்துள்ளார். படத்தொகுப்பை பரத் விக்ரமன் கவனிக்க, கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் மேற்கொண்டுள்ளார்.
முழுக்க முழுக்க காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ராவடி’ திரைப்படம், ரசிகர்களுக்கு லைட்டான, ரசிக்கத்தக்க பொழுதுபோக்கை வழங்கும் வகையில் தயாராகி வருகிறது. மேலும், L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது எடிட்டிங், பின்னணி இசை மற்றும் VFX உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் முடிவடைந்ததும், வரும் கோடை காலத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே வெளியாகியுள்ள அப்டேட்கள் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘ராவடி’, கோடை ரிலீஸில் ஒரு முழுமையான காமெடி என்டர்டெய்ன்மெண்ட் அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!
தமிழ் மற்றும் மலையாள OTT பார்வையாளர்களுக்காக ZEE5 தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
தயாரிப்பு கட்டத்தில் ‘Once Upon a Time in Kayamkulam’ என்ற பெயரில் உருவான இந்த தொடர், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய தலைப்பில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த தலைப்பு, சீரிஸின் விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை அழகாக பிரதிபலிக்கிறது.
இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். நடிகர்கள் வரிசையில் முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதை, அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச்சம்பவத்துடன் தொடங்குகிறது. இந்த சம்பவம் அங்குள்ள சப்-ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. வழக்கத்திற்கு மாறாக, யாரோ ஒருவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல், அதற்குள் நுழைவதே இந்த மர்மத்தின் மையமாகிறது.
புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த புதிரை புரிந்துகொள்ள போராடுகின்றனர். ஆனால், மர்மமான திருடன் அவர்களை விட பல அடிகள் முன்னிலையில் இருந்து, தானே உருவாக்கிய குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான். இதற்கிடையில், சாதாரண ஊர்மக்கள், தங்களை டிடெக்டிவ்களாக நினைக்கும் சிலர், மற்றும் தெரியாமலே இந்த வழக்கில் சிக்கிக்கொள்ளும் கைதிகள் — அனைவரும் சேர்ந்து இந்த கதையை இன்னும் வினோதமாக மாற்றுகின்றனர்.
இதனால், ஒரு சாதாரண விசாரணை வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. ஒவ்வொரு சம்பவமும் புதிய மர்மத்தை வெளிப்படுத்தும் இந்த உலகத்தில், எதுவும் எளிதாக இல்லை என்பதே ‘காக்கி சர்கஸ்’ சீரிஸின் முக்கிய சுவாரஸ்யம்.
இயக்குநர் அமீன் பாரிஃப் கூறுகையில்…,
“இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இது நமக்குத் புதுமையான கதைக்களத்தில் விளையாடும் ஒரு அரிய வாய்ப்பை இது தந்தது — ஒரு பக்கம் நகைச்சுவை, ஒரு பக்கம் திரில்லர், இன்னொரு பக்கம் வித்தியாசமான கற்பனை, ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நகரத்தின் இயல்பான உண்மைத்தன்மையையும் இழக்காமல் கதை சொல்ல முடிந்தது. தயாரிப்பின் ஆரம்ப நிலையில் இருந்தபோதே, இந்த சீரிஸின் மையம் அதன் கதாபாத்திரங்கள்தான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். குழப்பத்தின் மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான, நகைச்சுவையான, மனித மனதின் இயல்பான குறைகளுடன் கூடிய உணர்வுகளே இக்கதையின் இதயம். இந்த கதையை அதன் அனைத்து தனிச்சிறப்புகளுடனும் சொல்ல ZEE5 எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. நாங்கள் உருவாக்கிய இந்த ‘சர்க்கஸ்’ உலகத்தை பார்வையாளர்கள் ரசிப்பதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.
நடிகர் முனிஷ்காந்த் கூறுகையில்,
“நான் இதுவரை நடித்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது ‘காக்கி சர்கஸ்’. இது கணிக்க முடியாத, வேகமாக நகரும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும், நிஜத்தன்மையுடனும் நிறைந்த கதாபாத்திரங்களை கொண்ட ஒரு சீரிஸ். இதில் எனக்கு மிகவும் பிடித்தது — நகைச்சுவைக்கும் பதற்றத்துக்கும் இடையிலான அசாதாரண சமநிலை. ஒவ்வொரு காட்சியும் எந்த விதமாகவும் மாறிவிடும் என்ற உணர்வு இருக்கும். இது புதுமையானது, நம் மண்ணின் வாசனையுடன் கூடிய கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட. இப்படிப்பட்ட கதைகளுக்கு ZEE5 போன்ற தளம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.
பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்கள், பரபரப்பு மற்றும் வித்தியாசமான நகைச்சுவை கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு விருந்தாக அமைய உள்ள ‘காக்கி சர்கஸ்’, வரும் ஏப்ரல் 10 முதல் ZEE5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!
KRG Kannan Ravi Group நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள “TN 2026” திரைப்படம், அரசியல் பின்னணியுடன் கூடிய பரபரப்பான கமர்ஷியல் காமெடி படமாக ரசிகர்களை கவர தயாராகியுள்ளது. கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை, உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.
நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், அரசியல் பகடியையும் சமூக அக்கறையையும் ஒருங்கே கலந்த கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. சிரிப்பூட்டும் காட்சிகளுக்கு இடையே சிந்திக்க வைக்கும் கருத்துக்களையும் பதிவு செய்யும் வகையில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான அதிகாரப்பூர்வ போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. மேடையின் மீது கையை உயர்த்தி நிற்கும் நட்டி நட்ராஜ், அவரைச் சுற்றி கோஷமிடும் கூட்டம், கொடிகள் மற்றும் பகடி வசன பதாகைகள் ஆகியவை அரசியல் சூழலை நகைச்சுவையாக பிரதிபலிக்கின்றன. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி, படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்திற்கு கதை எழுதியுள்ள தம்பி ராமையா, தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் சமூக பார்வையை இந்த கதையில் வெளிப்படுத்தியுள்ளார். திரைக்கதை மற்றும் இயக்கத்தையும் உமாபதி ராமையா திறமையாக கையாள்ந்துள்ளார்.
நாயகியாக சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகிய மூவரும் முதல் முறையாக இணைந்து நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாண்டி சிறப்பு தோற்றத்தில் (கேமியோ) வருகிறார்.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், “TN 2026” திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அரசியல் நையாண்டி, நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் அம்சங்களின் கலவையாக உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'
ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம் ‘ஹபீபி’. வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் முக்கிய பலமாக அனுபவமிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது நீண்டகால அனுபவம், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இப்படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியதோடு, படக்குழுவினருக்கும் உறுதியான துணையாக அமைந்துள்ளது.
படத்தில் தனது பங்களிப்பு குறித்து கஸ்தூரி ராஜா பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவர்களை மேலும் வலுப்படுத்தியதுதான். ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களை கண்டடையும் என்று நான் நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் அந்த உண்மைத்தன்மை உள்ளது” என்றார்.
இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ படத்தில் கஸ்தூரி ராஜா சார் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரது அனுபவமும் கதை பற்றிய புரிதலும் எங்கள் பயணத்திற்கு தெளிவும் நம்பிக்கையும் அளித்தது. மத வேறுபாடுகளைத் தாண்டி சமூகத்தில் மூத்தவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையை அவரது கதாபாத்திரம் இந்தப் படத்தில் பிரதிபலிக்கும். ஒற்றுமை, கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் கொண்டதாகவும் அவரது இருப்பு இருக்கும். திரைத்துறையிலும் வயதிலும் அவர் மூத்தவராக இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் எங்கள் அனைவருடனும் மிக எளிமையாக பழகினார்” என்றார்.
இந்தத் திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. தரமான மற்றும் கருத்துள்ள படங்களை ஆதரித்து வரும் இந்த நிறுவனம், திறமையான விளம்பரம், மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தின் மூலம் நல்ல திரைப்படங்களை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வலுவான தளமாக திகழ்கிறது.
கலை நேர்மை மற்றும் வணிக நுணுக்கம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக ’ஹபீபி’ திரைப்படம் இருக்கும். இன்றைய மாறிவரும் சினிமா உலகில் படைப்பாற்றல், அனுபவமிக்க வழிகாட்டுதல் மற்றும் வலுவான விநியோக ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தப் படம் உணர்த்தும். நீண்ட நாட்களுக்கு ரசிகர்கள் மனதில் இந்தப் படம் நீங்கா இடம் பிடிக்கும். ‘ஹபீபி’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல. ஆர்வம், ஒற்றுமை மற்றும் வலுவான கதை சொல்லலுடன் உருவான மிகச்சிறந்த அனுபவம்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













